இன்று காந்தி ஜெயந்தி.
நம் தேசத் தந்தையின், சுதந்திரத்தை சுவாசிக்கக் காரணமாயிருந்தவரின் பிறந்த நாள். ஆனால்,
இந்த அக்டோபர் 2 ல், 65 ஆண்டுகள் சுதந்திரம் கண்ட ஒரு நாட்டில், எது சுதந்திரம் என்ற
கேள்வி எழுமா? எழுகிறதே! என்ன செய்ய? எந்த ஒரு நள்ளிரவில் ஒரு பெண் எந்த துணையுமின்றி,
எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு, தனியாக பயமின்றி நடந்து போக முடிகின்றதோ அன்றுதான்
நம் நாட்டிற்கு சுதந்தரம் கிடைத்ததாக நான் நம்புவேன் என்றார் மகாத்மா. இன்று என்ன நடக்கிறது?
காணாமல் போன தன் குழந்தைகளைத் தேடிச் சென்ற, இரண்டு காலும் ஊனமுற்ற ஒரு பெண்ணை, இடிந்தகரையில்
பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயல்கிறான், மக்களைக் காக்க வேண்டிய காவலன் ஒருவன்.
வேலை நிமித்தம் அடுத்த மாநிலத்துக்குச் செல்லும் ஒரு பெண், பேருந்தைத் தவற விட்ட ஒரு
இரவில், வழி காட்டும் போர்வையில், கற்பழித்து மனதைச் சிதைத்து, பைத்தியமாக ஒசூரில்
தெருத் தெருவாக அலைய விட்டிருக்கிறது ஒரு கூட்டம். அவள் யாரென்றே அவளுக்குத் தெரியாத
நிலையில், அவள் பையில் இருந்த சான்றிதழ்களை வைத்து அவளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
இது இந்தியா. இந்த நாட்டின்
குடிமக்கள் யாவரும் ஒரு தாய் மக்கள். இதில் சாதி, மதம், இனம், மொழி எதுவும் இடையில்
வந்து பிரிக்க எப்படி முடியும்? என்றார் மகாத்மா. அசாமில் கலவரம் என்றால், பீகாரிலிருந்தும்
பெங்களூரில் இருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும், உயிருக்கு பயந்து தொடர்வண்டிகளில்
துரத்தப் படுகிறார்கள், இந்நாட்டு மக்களால் இந்நாட்டு மக்களே. தண்ணீர் தரமாட்டேன் என்று
சொன்னால் கூடப் பரவாயில்லை. அதையே மொழிப் பிரச்சனையாக்கி, வெறியேற்றி, அச்சுறுத்தி,
மாநிலத்தைவிட்டு வெளியேற்றுகின்றன இரண்டு அண்டை மாநிலங்கள். பேருந்து எரிப்புகள், போராட்டங்கள்,
கொடும்பாவிகள், இதுவா சுதந்திரம்?
பேச்சு சுதந்திரம் கொடுத்தால்,
SMS என்ற பெயரில் குறுஞ்செய்திகளில் கொடும் விக்ஷத்தை பரப்பிக் கொலை, கொள்ளைகளை கொடூரமாக
அரங்கேற்றுகிறார்கள் அரக்கர்கள். MMSல் அசிங்கத்தை அரங்கேற்றுகிறார்கள் காமுகர்கள்.
விளைவு கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை எனப் பட்டியல் நீள்கிறது. இரட்டைக் குவளைகள்,
தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நடக்கவே முடியாமல் நிற்கும்
தேர்தல், பிறிதொரு சாதி வந்து வழிபடும் வாய்ப்பு கிடைக்கும் நிலை எதற்கு என்று நிலை
விட்டு நகராமல் நிற்கும் தேர், மனித மலத்தை மனிதனே அகற்றும் கொடுமை, மிதமிஞ்சியிருக்கும்
சூரிய ஒளியை பயன் படுத்த வழிகாட்டாமல், அபாய அணுசக்தியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு,
அப்பாவி மக்களை வழிநடத்தும் ஒரு மனிதரையும் அசிங்கப்படுத்தும் அரசியல், ஊழலை ஒழிக்க
உண்ணாவிரதம் எனும் மகாத்மாவின் பிரணவத்தை கையில் எடுத்த ஒரு முதியவரை கேலிக்கூத்தாக்கிய
அரசியல்வாதிகள், மணல், நிலம், நீர், மலை, காற்று
என சகலத்தையும் விற்றுத் தின்று கோடிகளில் ஊழல் செய்து ஏப்பமிடும் ஆட்சியாளர்களைக்
கொண்டிருக்கும் அவலம்….இது சுதந்திர நாடா? இது தான் சுதந்திரமா? எதற்கு இந்த சுதந்திரம்?
இதில் எது சுதந்திரம் என்ற கேள்வி திரும்ப திரும்ப எழுவதை தவிர்க்கவே முடியவில்லை.
நம் அரசியலமைப்பு சட்டம்
நம் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று சிலவற்றைக் குறிக்கிறது. அவற்றில்
CULTURAL AND EDUCATIONAL RIGHTS அதாவது கலாசாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை மற்றும்
FREEDOM OF SPEECH, MOVEMENT, ASSEMBLY, ASSOCIATION, RESIDENCE AND PROFESSION,
FREEDOM OF RELIGION அதாவது பேச்சுக்கான சுதந்திரம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
நகர்வதற்கான சுதந்திரம், ஓரிடத்தில் கூடி, சங்கம் அமைத்து தம் கருத்துக்களைக் கூறுவதற்கான
சுதந்திரம், உறைவிடம் அல்லது குடியிருப்பதற்கான சுதந்திரம், ஒருவரின் தொழில் சார்ந்த
அல்லது பணி புரிவதற்கான சுதந்திரம் ஆகியவை முக்கியமானவை. ஆனால் இத்தனை ஆண்டுகளில்,
இவை எவ்வளவு தூரம் நம் நாட்டில் சாத்தியப் பட்டிருக்கின்றன என்பதை மேற்சொன்ன நிகழ்வுகளின்
மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதையெல்லாம் கற்பிக்க
வேண்டிய, கண் திறக்க வேண்டிய, களையெடுக்க வேண்டிய கல்வியமைப்பின் நிலையைப் பார்ப்போம்.
அண்மையில் தமிழகத்தில், மிகப் பிரம்மாண்டமாக ஆறு லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி
தேர்வில் சுமார் இரண்டாயிரம்(2448) பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். ஆக, இந்த இரண்டாயிரத்து
நானூற்று நாற்பத்து எட்டு பேர் தவிர, சுமார் 597552 ஆசிரியராக இருக்கத் தகுதியற்ற,
மாதத்திற்கு ரூபாய் 30000ற்கு குறையாமல் தண்ட சம்பளம் வாங்க தயாராக, ஆசிரியர் பயிற்சி
பெற்றுள்ள ஒரு கூட்டத்தை நம்பித்தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கும்போது
பயமாக இருக்கிறது. போதாததற்கு, ஆசிரியர்கள் அதிர்ச்சி என்ற தலைப்புச் செய்தியை கதறிக்
கொண்டிருந்தன ஊடகங்கள். பேட்டி தந்த ஆசிரியர்களோ, ஒரு படி மேலே போய், இது எங்களுக்கு
பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அவரவர் சிறப்புப் பாடங்களை விட்டு விட்டு, அனைத்தையும்
இத்தனை கடுமையாக கேட்டால், நாங்கள் என்ன செய்வது என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
எனக்கு ஒரு நிமிடம் குழம்பித்தான் போய் விட்டது. இது, சொல்லித் தரும் ஆசிரியர் பேட்டியா,
கற்றுக் கொண்ட மாணவர் பேட்டியா என்று.
இதில் குறிப்பிடத்தக்க
அம்சம் என்னவெனில், இந்த தேர்வில் தேர்ச்சி
பெறுதல் கட்டாயம் என்ற போதிலும், ஒரே முறையில் தேர்ச்சி பெறுதல் என்பது கட்டாயம் இல்லை.
ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு நடைபெறும். ஒரு முறை விண்ணப்பித்தாலே போதுமானது. நான்கு
ஆண்டுகளுக்குள், எத்தனை தரம் வேண்டுமானாலும் எழுதி, தேர்ச்சி பெற்று விட்டால், அவர்
ஆசிரியராக இருக்கத் தகுதியானவராகிறார். இது மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறை.
போதாதென்று, தேர்வு நாளன்று அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை வேறு. இதற்குத்தான் இத்தனை
கூக்குரல்.
இந்த தேர்வு முடிந்த
அன்று ஒரு தனியார் பள்ளி ஆசிரியரிடம் கேட்டேன். அட! ஒரு மாதமாக கையில் புத்தகமும் காதில்
அலைபேசியுமாக சுற்றி சுற்றி வந்தார்களே என்ற கரிசனத்திலும், நம் வருங்கால சந்ததியின்
வாழ்க்கை இவர்களின் கையில்தானே இருக்கிறது என்ற அக்கறையிலும் தான். அந்த ஆசிரியர் மிகவும்
கடினமாக இருந்ததாகக் கூறினார். ஆசிரியர்களுக்கு எப்படி கடினமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியக் குறிதான் எனக்குள்
எழுந்தது. ஆண்டு முழுவதும் அவர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைத்தானே தேர்வில்
கேட்டிருப்பார்கள். அதற்குத்தானே மதிப்பீடு. சிந்தனை மேலிட “ கடினமாக இருந்ததா? எப்படி?”
கேட்டே விட்டேன். அதற்கு ஆசிரியரின் பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. என்
பாடம் தவிர்த்து மற்ற பாடங்களிலும் கேள்விகள் கேட்டால், எப்படி பதில் சொல்ல முடியும்.
நான் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். கணிதத்திலும் அறிவியலிலும் கேட்டால்,
நான் எப்படி தேர்வு எழுதுவதாம்? என்றார் ஆசிரியர். அப்போ! பன்னிரண்டாண்டு காலமாக பள்ளிக்கூடத்தில்
மாங்கு மாங்கென்று படித்தீர்களே! அது என்ன? தன்னிச்சையாக என்னிடமிருந்து கேள்வி எழுந்தது.
சூரியனுக்குக் கீழே மட்டுமல்ல,
மேலும், உள்ளும், வெளியிலும், பக்கவாட்டிலும், சுற்றிலும் இருக்கும் யாவையும் பற்றிய
மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம்
பெற்ற, அதைப்பற்றி மட்டுமே சொல்லித்தர என்னால் முடியும் என்று கூறும் ஆசிரியரால் என்ன
செய்ய முடியும்? அதிர்ந்து போனதுடன் கேட்டும் விட்டேன். அது எப்படி? எங்களுக்கு எல்லாம்
தெரிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார் ஆசிரியர். தங்கள் ஆசிரியர்கள்
ஒழுங்காக சொல்லிக் கொடுக்காமல் இருந்திருந்தால், அதை ஒழுங்காக படிக்காமல் இருந்திருந்தால்
இவர்களில் எத்தனை பேரால் ஆசிரியராகியிருக்க முடியும்? இந்த கேள்வி என்றேனும் ஒரு நாள்
ஒரு பொழுது, இவர்களின் மனதிற்குள் எழுந்திருந்தால், நாளைய ஆசிரியர்கள், அறிவியலாளர்கள்,
விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என எத்தனையோ உச்சம் தொடக் காத்திருக்கும் இத்தனை மாணவர்களின் வாழ்க்கை நம் கையில் இருக்கிறதே
என்ற பொறுப்புடன் இவர்கள் படித்திருப்பார்கள், பணியாற்றி இருப்பார்கள். அப்படிப்பட்ட
ஆசிரியர்களைத்தான் நான் என் குடும்பத்திலும், பள்ளியிலும் பார்த்திருக்கிறேன். நானும்
என் சகோதரர்களும் படிக்கையில், தான் மறுநாள் எடுக்க வேண்டிய வகுப்புகளுக்காக தயார்
செய்து கொண்டிருக்கும் என் அம்மாவை எனக்கு நினைவிருக்கிறது. இன்று NOTES OF LESSON
என்ற ஒன்று எழுதப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறதா
எனத் தெரியவில்லை. அதுதான் ஆசிரியர்களின் HOME WORK எனப்படும் வீட்டுப் பாடம். இருந்திருந்து,
அதை வகுப்பு இடைவேளை நேரங்களில் ஒப்பேற்றாமல், சரிவர எழுதியிருந்தால், இன்று தேர்வு
முடிவுகள் வேறு மாதிரி அல்லவா இருந்திருக்க வேண்டும்!
ஆக, ஆசிரியர்களாக இருக்கத்
தகுதியற்ற, தேர்வில் தோல்வியடைந்த ஒரு கூட்டத்திடம்தான் நம் வருங்காலத் தூண்கள் மாட்டிக்
கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்க. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான
அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தால், மாணவர்கள் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டு,
அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் கல்வியைத் தொடரும் நம் கல்வித்
திட்டம், மாணவர்களுக்கு பொருந்தும் என்றால், அதே கல்வித் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான
பொதுத் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கும் அது பொருந்தும் தானே? எனக்கு அப்படித்தான்
தோன்றுகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பள்ளிகள்
வழக்கம் போல இயங்குகின்றன. மாநில அரசு வழங்கும் சம்பளம் போதவில்லை, எனவே மத்திய அரசு
வழங்கும் சம்பளத்திற்கு இணையாக தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆசிரியர்கள்
சுறுசுறுப்பாகிவிட்டனர். என்ன நடக்கின்றதென்றே புரியவில்லை.
இன்றைய பள்ளிக் கல்வி
முறையில் சில நடைமுறைகள் வினோதமாகவும், மாணவர்களுக்கு எதிராகவும் இருப்பதை, இந்த இடத்தில்
நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒன்று. மனப்பாடம் செய்து
எழுதும் தேர்வு முறையும் அதற்கான மதிப்பீட்டு முறையும்.
இரண்டு. COUNSELLING
எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வுக்கூட்டங்கள்.
மூன்று. கால வரைமுறையின்றி
எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் பெற நடக்கும் பண விளையாட்டுக்கள்.
நான்கு. சனி, ஞாயிறு
மற்றும் அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை, சமய விடுப்பு என நீளும் வரைமுறையற்ற
விடுமுறைகள்.
ஐந்து. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப
பள்ளியில் போதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருத்தல்.
இவற்றில் முதலாவதை எடுத்துக்
கொண்டோம் என்றால், சமச்சீர் கல்வி மற்றும் சங்கடத்தை உண்டாக்கும் கல்வியைப் பற்றிப்
பேசியே ஆக வேண்டும். சமச்சீர் கல்வி என்ற திட்டம் நிச்சயம் வரவேற்கத் தக்க ஒன்று. அதை
நான் நிச்சயம் வரவேற்கிறேன். ஆனால் அதை நடைமுறைப் படுத்தத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி. பள்ளி இறுதி வகுப்பில், முதல் சில
இடங்களைப் பிடிப்பவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற
தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்து விட, எஞ்சிய புத்திசாலிகளில் சிலர் ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களிலும், சிலர் கலை மற்றும் அறிவியல் பாடங்களிலும் சேர்ந்து விடுகின்றனர்.
இவற்றில் பணத்தால் நிறுவனத்துக்கான பதிவு பெற்று, பணத்தால் தேர்வு முடிவுகளைச் சாதகமாகப்
பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் தான் EXAM IS
TOUGH என்ற கூக்குரல் எழுகிறது.
மாணவர்களின் திறனுக்கேற்றவாறு
அவர்களைத் தயார் செய்து கொண்டு செல்லும் அழகான சமச்சீர் கல்வி, SUDDEN BREAK போட்டது
போல் திடீரென, மனப்பாடம் செய்! மதிப்பெண் பெறு! என்ற வழக்கமான பல்லவி பாடும் கல்வியாக
பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அவதாரம் எடுத்து விடுகிறது. புத்தகத்தில்
இருப்பதை அப்படியே உருப்போட்டு, கால் புள்ளி, அரைப் புள்ளி விடாமல், வாந்தி எடுக்கத்தான்,
பொதுத் தேர்வு என நாள் குறித்து, அதற்கான சிறப்புப் பயிற்சி தரும் கல்வி நிறுவன வியாபாரம்
நடக்கின்றது. இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், தேவைக்கு அதிகமாகவே சம்பளம் தரும்
அரசு என்ற முதலாளி தரும் பணம் போதாமல், TUTION என்ற பெயரில் சில ஆசிரியர்கள் அடிக்கும்
கொள்ளை, கொள்ளையோ கொள்ளை! ஒன்பதாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பயின்றவன், பத்தாம்
வகுப்பைத் தொட்டதும் மந்திரித்து விட்டது போல் ஆகி விடுகிறான். தங்கள் தகுதித் தேர்விலேயே
தேர்வு பெற தரிகிடதோம் போடும் ஆசிரியர்கள் சட்டென நீதிமான்கள் ஆகி, உன்னையெல்லாம் கட்டி
மேய்க்க வேண்டிய தலையெழுத்து எனக்கு என்ற குற்றப்பட்டியல் வாசிக்கத் தொடங்கி, தாங்கள்
சொல்லித் தராத வாய்ப்பாடு மனப்பாடம், அல்ஜீப்ரா மனப்பாடம், அலர்ஜி தரும் ஆங்கில மனப்பாடம்,
எல்லை தாண்டி வரவே வராத வரலாறு மனப்பாடம், புரிபடாத புவியியல் மனப்பாடம், அறை குறை
அறிவியல் மனப்பாடம் என்று மனப்பாடப் பயிற்சி அளிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
இங்கு தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் முறை
பற்றியும் நாம் பேசியே ஆக வேண்டும். அண்மைக் கால ஆசிரியர்களிடம் நான் பழகியவரை, திரும்பத்
திரும்ப ஒரே மாதிரியான முறை பின்பற்றப் படுவதை நான் கவனித்தே வந்து இருக்கிறேன். பையன
பாஸ் பண்ண வச்சா போதாதா? அதுவே பெரிய பாடு. ஒரு மார்க் கொஸ்டீன் எல்லாம் எழுதினாலே
பாஸ் பண்ணிடுவான் மிஸ். அதனால், இந்த ஒரு மார்க், இரண்டு மார்க் கேள்விகளுக்கு தயார்
பண்ணிவிட்டுட்டோம்னா போதும் என்ற கருத்தை நான் வேதனையுடன் கேட்டவாறு கடந்து போகிறேன்.
பாஸ் மார்க் வாங்க மட்டுமே தகுதியானவர்களா இந்த மாணவர்கள்?
நான் மேற்கண்ட எந்த குற்றச்சாட்டையும்,
எல்லோர் மீதும் வைக்கவில்லை. எனக்குத் தெரிந்து, நான் பணி புரியும் பகுதியில், மிகக்
குறைவான வசதிகளுடன், ஒரு குக்கிராமத்தில் இயங்கும் உயர்நிலைப் பள்ளி ஒன்று, அதன் ஆசிரியர்களால்
மட்டுமே, மிகச் சிறந்த பள்ளியாக விளங்குவதை பெருமையாக கவனித்து வருகிறேன். அந்த மிகச்
சிறிய ஊரில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு, அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல்,
காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தின் புற நகர் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில
கடும் போட்டி நிலவுவதை கண்கூடாக காண முடிகிறது. அந்த பள்ளியின் தலைமையாசிரியரை, பெரும்பாலான சமயங்களில் காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள்ளாக
பேருந்தில் பார்க்க முடிந்திருக்கிறது. என்ன சார், இவ்வளவு காலையில் பள்ளிக்கு கிளம்பிவிட்டீர்கள்?
என்றால், ஒரு புன்னகையுடன் ஸ்பெக்ஷல் க்ளாஸ் மேடம் என்பார். வீட்டில சரியான படிக்கும்
சூழ்நிலை இல்லாத காரணத்தினால் தான், கிராமப்புற மாணவர்களால், சரியாக வெளிவர முடியவில்லை
மேடம். அவனுக்கு புரிகிற வகையில் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்தால், பசங்க நல்லா வருவாங்க,
என்று ஒரு தந்தையின் வாஞ்சையுடன் அவர் சொல்கையில், நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் போது, பெருமிதத்துடன்
அவர் பகிர்ந்து கொள்ளும் தருணங்களில், அந்த ஒரு பையன் ஒழுங்காக பள்ளிக்கு வந்திருந்தால்,
அவனையும் கூட பாஸ் பண்ண வச்சிட்டிருப்பேன் மேடம், என்று அனுதாபப்படுகையில், நமக்கே
பெருமையாக இருக்கும். எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே குழுவாக இருந்து, பணியாற்றுவதால்தான்
இது சாத்தியப்படுகிறது என்று அவர் கூறுகையில், அந்த பெருமிதம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
ஆனால், இந்த ஆசிரியர்களும் மேற்கண்ட ஆசிரியர்கள் மத்தியில் தான் இருக்கிறார்கள் என்பதே
சிந்திக்க வேண்டிய ஒன்று.
இரண்டாவதாக நாம் கண்ணோக்க
வேண்டியது COUNSELLING எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வுக்கூட்டங்கள்.
தமிழகத்தில், பள்ளிகளில் ஆசிரியர் காலி இடங்கள் என்று எடுத்துக் கொண்டோமானால், ஒவ்வொரு
முறையும், வட மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் பல வருடங்களாகவே இவை தொடர்ந்து
முன்னிலை வகித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கும் விக்ஷயமாக இருக்கின்றது. காரணத்தைச்
சற்று ஆய்வு செய்தோமானால், கவலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
கல்வியறிவைப் பொருத்தவரையில், நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள். தமிழகத்தில்
கல்வியறிவில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்கள்
பின் தங்கியே இருக்கின்றன. ஆதிகாலம் தொட்டு, தென் மாவட்டங்களில் வேரூன்றி, மக்களிடையே
கல்வியறிவைப் பரப்பிய கிறித்தவ கல்வி நிறுவனங்களின் பங்கு இதில் அதிகம். எனவே கல்வியே
முன்னேற்றத்திற்கு முதல் படி என்ற அருமையை நன்கு உணர்ந்து, தென் மாவட்டங்களில் சிறந்த
கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகின்றன. எனவே ஆசிரியர் தேர்ச்சி விகிதமும், அரசு ஆசிரியர்
பணியில் சேரும் விகிதமும் கணிசமாக அதிகம். மகிழ்ச்சிக்குரிய விக்ஷயமே! இதில் கவலை எங்கிருந்து
வந்தது எனில், ஆண்டில் பெரும் பகுதி நாட்களுக்கு, ஏகப்பட்ட காலி இடங்களுடன், ஆசிரியர்
பற்றாக்குறையுடன் நடக்கும் வட மாவட்ட பள்ளிகளில் தான் புதிதாக, பணியில் சேரும் ஆசிரியர்கள்
பெரும்பாலும் சேர்கிறார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. பணியில் சேர்ந்து அல்லது
பணி இடமாற்றம் பெற்று குறைந்த பட்சம் இத்தனை ஆண்டுகள், இந்த பள்ளியில்தான் பணியாற்ற
வேண்டும் என்ற இயற்றப்படாத (அ) காற்றில் விடப்பட்ட சட்டத்தின் பாதுகாவலர்களின் உதவியுடனேயே
உயர உயர பறக்க விட்டு, பணம் விளையாட, பாவப்பட்ட பிள்ளைகளின் படிப்பு ஊசலாட, பணி இடமாற்றம்
பெற்றும், சொந்த ஊர்களுக்கு மூட்டை கட்டி விடுகிறார்கள் ஆசிரியர்கள். உபயம்: கெளன்சலிங்
COUNSELLING என்ற பெயரில் நடைபெறும் மாணவர்களின் படிப்பை எதிர்காலத்தை பணயம் வைத்து
நடக்கும் பண விளையாட்டுத்தான். அரிச்சுவடி அறிந்து கொள்வதற்கு முன் மாற்றலாகிச் சென்று
விடும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள், ஒன்பதாம் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்,
பத்தாம் வகுப்பிற்கு ஒருவர் என்று இருந்தால், தன் பெயரை எழுதுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கும்
மாணவன் என்னதான் செய்வான் பாவம்? ஆங்கிலம் அலர்ஜி, தமிழ் தமில் தகராறு, அறிவியல் ஆண்டவன்
விட்ட வழி, வராத வரலாறு, புரியாத புவியியல், கணக்கு. கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
பாகற்காயின் கசப்பு பரவாயில்லை போலும். அதன் பின், அப்துல் கலாமாவது? அம்பானியாவது?
மூன்று. கால வரைமுறையின்றி
எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் பெற நடக்கும் பண விளையாட்டுக்கள். ஆட்சிகள்
மாறிக்கொண்டிருக்கும்போதிலும் பணியிட மாற்ற பண விளையாட்டுக் காட்சிகள் மாறியதாகத் தெரியவில்லை.
அரசுப் பணியை விட மனமில்லாமல், எங்கு போட்டாலும் பணியாற்றத் தயாராக இருக்கிறேன் எனப்
பணியில் சேர்ந்தால் போதும் என்று ஓரிடத்தில் வேலைக்குச் சேரும் ஆசிரியர்கள், ஒரே வருடத்தில்
கூட சில பல லட்சங்களின் உதவியுடன், அவரவர் ஊர் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். ஒரு
பிரபல வார இதழில், தன் தொடரில், திரு. ராஜுமுருகன், இதை நியாயப்படுத்தி, ஐயோ! பாவம்!
பானியில் எழுதியிருந்தது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. ஊடகங்களுக்கு ஒரு தர்மம்
இருக்கிறது நண்பரே! தங்கள் உறவினரின் உடல் நலனும், பிள்ளைகள் படிப்பும் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியதே! ஆனால் சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் உள்ள தொலைவு, நாகர்கோவிலுக்கும்
சென்னைக்கும் உள்ள தொலைவை விடக் குறைவுதான் என்பதையும் தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பெறும் சம்பளத்தில் பாதி அளவு கூட பெறாத நிலையிலும், பல்லாயிரம் மைல்கள் தாண்டி, இங்குள்ள
சிறு குறு நகரங்களின் தனியார் பள்ளிகளில், தாங்கள் கற்றவை யாவையும் கற்பித்து, சிறந்த
மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை பகுதியைச்
சேர்ந்த யுவதிகளைப் பற்றி தாங்கள் அறியாமல் இருக்க முடியாது. அவர்களுக்கும் குடும்பம்
உண்டு; குழந்தைகள் உண்டு; உடல் உபாதைகள் உண்டு. அந்த தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும்
கற்பிக்கும் முறைக்கும் தேர்ச்சி விகிதத்திற்கும் உள்ள வேறுபாட்டிற்கும் இதுவே காரணம்.
கற்பித்தலை பணியாகக் கருதி, பணி நேரத்திற்கு மட்டும் வந்து கையெழுத்துப் போடும் பழக்கம்
விடுத்து, காலையும் மாலையும் சிறப்பு வகுப்புகள் வைத்து, மாணவர்களைச் செம்மைப் படுத்தும்
முறையைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் தானே, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளும்
படிக்கிறார்கள். தம் பிள்ளை, தம் குடும்பம்
வேறு; அடுத்தவர் குடும்பம் வேறு தானே! இது சம்பளம் தரும் வேலை தானே என்ற கருத்தை, சம்பந்தப்பட்ட
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சென்னை மட்டுமே தமிழகம்
அல்ல. அங்கு வசிப்பவர்கள் மட்டுமே மக்கள் அல்ல. சென்னையில் உள்ளவை மட்டுமே பள்ளிகள்
அல்ல. அங்கு படிப்பவர்கள் மட்டுமே மாணவர்கள் அல்ல. கிராம நிர்வாக அலுவலர்களை விடுங்கள்!
அதிகாலையில் ஆடுமாடுகளை கவனித்து படித்த படிப்பை
உண்மையாகவே கெளரவப்படுத்தும் கால்நடை மருத்துவர்களும், மக்கள் ஈட்டிய பணத்தைப் பாதுகாத்து,
கடன் வழங்கும் வங்கி நிறுவன ஊழியர்களும் தாங்கள் கண்டறியாத கிராமங்களில் தங்கி, குறைந்த
பட்சம் மூன்றாண்டுகளாவது பணியாற்றிப் பங்களிக்கையில், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு
அறிவைப் புகட்டி, அவர்களை மருத்துவர்களாகவும், அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் உருவாக்கும்
பொறுப்புள்ளவர்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயல்வது எவ்வகையில் நியாயம்?
கிராமத்தில் உள்ளவர்களுக்கும்
உடல் உபாதைகள் உண்டு. அதற்கேற்ற மருத்துவமும், அலைச்சலற்ற நல்ல ஓய்வும் மட்டுமே நோய்கள்
தீர்க்கும் அருமருந்து. அதை விடுத்து, நகர வாழ்க்கையை விட்டு நகராமல், அதிகாலை தொடர்வண்டி
பிடித்து, அடித்து பிடித்து ஓடி வந்து, அந்தி மாலையில் தொடர்வண்டி பிடித்து ஆசுவாசப்படுத்திக்
கொள்ளாமல் அலைச்சல் கொள்வது யார் தவறு? பணியிடத்தின் அருகில் வீடு பாருங்கள். தினமும்
பயணிப்பதைத் தவிருங்கள். வாரம் முழுவதும் பணியும், இரவில் நல்ல ஓய்வும்; வாரக் கடைசி
மகிழ்ச்சியுடனும் குடும்பத்துடனும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
ஊரார் பிள்ளையை அறிவினையும் அன்பினையும் பண்பினையும் ஊட்டி வளருங்கள். உங்கள் பிள்ளை
தானே ஓஹோ என்று வளரும். அதை விடுத்து, பணியில் சேர்ந்த சில நாட்களில் பணத்தால் அடித்து,
பணியிட மாற்றம் பெறாதீர். உங்களால் சில கலாம்களும், ராதாகிருக்ஷ்ணன்களும், இறையன்புகளும்,
முத்துலட்சுமிகளும் உலகத்திற்கு கிடைக்கட்டுமே!
நான்கு. சனி, ஞாயிறு
மற்றும் அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை, சமய விடுப்பு என நீளும் வரைமுறையற்ற
விடுமுறைகள். வேறெந்த துறையிலும் இல்லாமல், பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் இத்தனை
விடுமுறைகள் விடுவதற்கான காரணம். ஒன்று, பள்ளிக்கு வெளியிலும் கல்வி இருக்கிறது; திருவிழாக்களிலும்,
உல்லாசப் பயணங்களிலும் பார்த்து, கேட்டு, அனுபவித்து, அறிவைத் திறந்து கற்க அனேக விக்ஷயங்கள்
இருப்பதால், அந்த நாட்களில் விடுமுறை விடலாம். மற்றொன்று மழைக்காலங்களிலும் கடும் கோடைக்காலங்களிலும்
பள்ளிக்கு வந்து செல்வது, நம் உட்கட்டமைப்பைப் பொறுத்தவரை ஆபத்தானது என்பதால். ஆனால்,
A இல் இருந்து Z வரை, உடன் ஒரு L சேர்த்து, விடுமுறைகளைக் கூட்டிக் கொண்டே போனால்,
மாணவர்களின் படிப்பு பனால் தான். அதை நேர்செய்யத்தான் சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துகிறோமே
என்று சொல்லாதீர்கள். சனிக்கிழமைகளில் பள்ளி வருகைப் பதிவேடுகள் எப்படி இருக்கும் என்பதை
உலகறியும். அதிலும் இந்த அறை நாள் விடுப்பு என்பதையெல்லாம் தயவு செய்து, கல்வித் துறையிலிருந்து
நீக்கி விட வேண்டும். அறை நாள் விடுப்பு, அப்புறம் ஒரு மணி நேர முன் அனுமதிபெற்று வீட்டுக்கு
சென்றால், அன்று முழுநாள் விடுப்பு எடுக்காமலே விடுமுறைதான். அப்புறம் ஏது படிப்பு?
ஆனால், இந்த விடுமுறை விக்ஷயத்தில், தற்போதைய
அரசின் கட்டுப்பாடு சற்று கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.
ஐந்து. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப
பள்ளியில் போதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருத்தல். இன்றைய தேதியில் அதிக
அச்சுறுத்தல் இல்லாத, நல்ல ஓய்வு நேரம் கிடைக்கும் பாக்கியம் பெற்ற, சம்பளத்துடன் கூடிய
விடுமுறையை அனுபவிக்கும் அம்சமான ஆசிரியர் பதவியில் பற்றாக்குறை என்றால் அதிசயம்தானே!
வேலைக்கு ஆள் போதவில்லையா? அதற்குத்தான் அடிக்கடி நிறைய பணியாணைகள் கிடைக்கப் பெறுகின்றனவே.
அரசு பெரிய அளவில் வேலையளிக்கும் ஒரே துறை இதுதானே! மற்றதெல்லாம் குறைவுதான். அப்புறம்
ஏன் காலியிடங்கள்? கேள்விகள் எழுவது நியாயம்தான். எல்லோரும் நகரங்களையும், அவரவர் சொந்த
ஊருக்கும் பணியிட மாற்றம் பெற்று பயணித்ததன் விளைவு தான் இது. COUNSELLING எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற
கலந்தாய்வுக்கூட்டங்களையும், கால வரைமுறையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம்
பெற நடக்கும் பண விளையாட்டுக்களையும் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த குறை
சரிசெய்யப்படக் கூடும். ஏற்கனவே கூறியது போல், வட மாவட்ட பள்ளிகள், காலியான பணியிடங்களாலும்
போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நல்ல கல்வி புலத்துடன்
இங்கு வந்து பணியில் சேரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உடனடி பணியிட
மாறுதல்களுக்கு உறுதுணையாக இருக்கும் தரகர்களை உடனடியாக அரசு களையெடுக்க வேண்டும்.
அதே சமயத்தில், வட மாவட்டங்களில் இயங்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தரத்தையும்
மேம்படுத்த வேண்டும். இந்த ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாவப்பட்ட பள்ளிகளில், பணியில்
சேரக்கூடிய, அந்த பணியிடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றக் கூடிய சிறந்த ஆசிரியர்களை உருவாக்க
வேண்டிய நியமனம் செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் அவசரமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
அரசு கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.
இவை யாவற்றையும் சரி
செய்தாலே, பள்ளிக் கல்வி பெரும்பாலும் முன்னேற்றம் காணும் என்பது என் கருத்து. மற்றபடி,
கல்வித்துறை என்பது வேறு எந்த துறையைப் போலவும் அதில் பங்கு பெறுபவர்களின் ஒத்துழைப்பையும்,
ஒற்றுமையையும், ஒன்றி வேலை செய்வதையும் பொருத்ததே. ஆனால், வேறெந்த துறையையும் விட,
கல்வித் துறைக்கு முக்கிய கடமை ஒன்று உள்ளது. அது அறிவுக் கண்களைத் திறந்து, நல்லுலகத்தை
உருவாக்குவது. கல்வியால் மட்டுமே தீமை இருளைப் போக்கி, நல்லொளியைப் பாய்ச்ச முடியும்
என்று நான் தீவிரமாக நம்புகிறேன். நல்லொளியைப் பாய்ச்சும் ஆசிரியர் யாரும் சொல்வதை,
மாணவர்கள் தண்டனையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தவறு செய்யும் மாணவனைத் தடுத்து
நிறுத்தி நல்வழிப் படுத்துவது, அந்த வயதில் பெற்றோரால் கூட முடியாமல் போகலாம். ஏனெனில், பெற்றோருக்குத் தம் குழந்தையின் குணாதியம்
மட்டுமே தெரியும். ஆனால், ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரே நாளில் சந்திக்கும்
நல்ல ஆசிரியருக்குத்தான், எந்தக் குழந்தையின் நிறையும் குறையும் தெரியும். அவ்வாறிருக்க,
குழந்தைகளை அடித்தால் திட்டினால் நம் பதவிக்கும் உயிருக்கும் தலைவலி என்று போலிச் சாக்கு
சொல்லி, எக்கேடோ கெட்டுப் போ, நான் நடத்துவதை நடத்தி விட்டுப் போகிறேன் என்று கரும்பலகைக்கு
பாடம் நடத்தும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள். அல்லது படிப்புதான் எப்படி
ருசிக்கும்? கத்திக் குத்தையும், தற்கொலை மிரட்டலையும் சில மாணவர்கள் தங்கள் ஆயுதமாக பயன்படுத்த உதவுவது
ஆசிரியர்களின் பயமும் பாராமுகமும்தான். நிமிர்ந்த நன்னடையையும் நேர் கொண்ட பார்வையையும்
ஆசிரியர்கள் கொண்டால், மாணவர்கள் அதையே தாங்களும் நிச்சயம் பின்பற்றுவர். ஏனெனில்
SEEING IS BELIEVING. எதைக் காண்கிறோமோ, அதையே நாம் நம்புகிறோம். எதை நம்புகிறோமோ,
அதையே நாம் செய்கிறோம். எதை செய்கிறோமோ, அதுவே நம் வாழ்க்கையாகிறது. நம்பிக்கையுடன்
வாழ்வோம். வாழ்க மகாத்மா!!!!
பயணங்கள் முடிவதில்லை!!!!
சேர்ந்து பயணிப்போம்!!!