Saturday, September 29, 2012
சத்த பொழுதுகளின் உச்சத்திலும்
சந்தடியில்லாமல் கைகுலுக்கிப்
பிரிகிறது
ஒரு அவிழாத மெளனத்தின்
முதல் நொடியின்
கடைசித் துளி!
நட்போடோ ஏதும் இல்லாமலோ
நடைபோடும் நதியுடன்
சலசலத்து அலையாடும்
சருகுகளும் சோழிகளும்
சிற்சில கிளிஞ்சல்களும்
சொல்லிச் சென்ற ரகசியத்தை
சிணுங்கல்கள் கூடச் சிதறாமல்
சேர்த்து வைத்துள்ளன
ஒரு கலையாத மெளனத்தின்
கறை படாத கரைகள்!
சத்தமில்லாமல் செவியோரம்
கூந்தல் வருடிப் போகும்
காற்றின் கால்களேறி பிரபஞ்சத்தின்
மிச்ச ரகசியங்களை ஆராய்கிறது
வீசும் காற்று வழி
பேசிக் கடந்தாலும்
விடியல் ஒன்றிற்காக
வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கும்
ஒரு கடக்காத மெளனத்தின்
கரம் பற்றிய மின்மினி!
பேச்சுக்கள் முடிந்ததொரு
பின்னிரவு முற்றத்தில்
பேசியவற்றை விட
பேசாததைப் பற்றியே
யோசித்துக் களைத்துக்
கிடக்கும்
மனம் சொல்லிக் கொள்கிறது…
பேசாததால் ஓய்ந்து போவதில்லை
மெளனத்தின் ஓசை என்று!!
எதையும் சொல்ல வேண்டுமா
என்ன
எளிதில் உறக்கம் வாராத
எண்ணற்ற இது போன்ற
என் இரவுகளைப் பற்றி?
எழுதிக் கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவும்
எரிந்து கொண்டிருக்கும்
அந்த வெண்ணிலவும்
சொல்லாமல் சொல்லி விடாதா….
என் விழிப்பின் ஒளியில்
தான்
வெண்ணிலவு ஓய்வெடுக்க
ஒளிந்து கொள்கின்றதென்று!!
என் விழிகளின் இமைப்பில்
தான்
விண்மீன்கள் புன்னகைத்துக்
கற்றுக் கொள்கின்றன என்று!!
என் இமைகளின் பிரிவில்
தான்
இரவும் பகலும் சந்தித்துக்
கொள்கின்றன என்று!!
இரவை அழகாக்க ஏதோ
என்னாலான ஒரு சேவை!!!!!
பால பாடம்
எப்படி பார்த்தாலும்
அழகாகவே இருக்கிறது
எந்த கட்டாயத்திற்குள்ளும்
சிக்கிக் கொள்ளாத
சிக்கல்களற்ற சிறு குழந்தைகளின்
உலகம்;
எந்த தருணத்திலும் எப்படி
பார்த்தாலும்
அழகாகவே இருக்கும் அவர்களைப்
போலவே!
கடவுளின் தலைமுடியைக்
கலைத்துப் போவதில்
காற்றுக்கும் கூட சம்மதம்
இருப்பதில்லை என்பதால்
தூக்கத்தில் புரண்டு
விழித்தாலும்
கலைவதில்லை அவர்களின்
தலைமுடி;
கோட்டுவாய் கோடிட்ட இதழோரங்களில்,
கண்களில், கன்னக் கதுப்புகளில்
விரைந்து வந்து ஒட்டிக்
கொண்டு
சிறை பிடிக்கும் சிரிப்புச்
சிதறல்களில்
விடிந்து விடுகின்றது
சுறுசுறுப்பாய்
பிடிவாதம் விடுத்து எந்த
தினமும்!
விழித்தெழுந்ததும் ம்ம்ம்ம்மா……..
எனும் உறக்கப் புள்ளிகளைத்
தாண்டி
எட்டியே பார்ப்பதில்லை
எந்த சோம்பலும்-
எழுந்து கொள்கின்றது
உடன் சூரியனும்;
வடிவற்ற வட்டங்களோ! கட்டங்களோ!
வண்ணத் தெளிப்புக்களோ!
வரைய வரைய வளர்ந்து
விரிந்து கொண்டே போகிறது
எல்லையற்ற எண்ணங்கள்
தாங்கும்
எளிமையான அவர்களின் உலகம்,
கலங்கப்படாத அவர்களின்
கற்பனையிலும்,
கை விரல்கள் கிறுக்கிய
காகிதங்களிலும்;
கிறுக்கல்கள் என்பதும்
காகிதங்கள் என்பதும்
நமக்குத் தானே!
மெதுவாகத்தான் புரிகிறது!!
சிறு சிறு பிணக்குகள்;
ஒரு மிட்டாயில் சரியாகிவிடும்
சண்டை சச்சரவு கணக்குகள்;
கண நேரத்தில் கனிந்து
விடும்
கைப்புச் சுவை காய்கள்;
வாழ்க்கை இத்தனை எளியதா?
வளர்ந்து கொண்டே போகிறது
வியப்பின் கடற்பரப்பு!
மகிழ்ச்சியின் சூட்சுமம்
மன்னிப்பு!
மழலையில் நாம் கற்று
மறந்த
பால பாடம் அரங்கேறுகையில்,
பெருமூச்சு மட்டுமே எழுகிறது,
வன்மம் தொடாத வாழ்வு
ஏன் எல்லா வயதிற்கும்
வாய்க்கவில்லை?
என்ற ஏக்கத்தின் கேள்வியுடன்!!!!!
Thursday, September 20, 2012
Subscribe to:
Posts (Atom)