நாளை உலகம் இல்லையென்றானால்
உயிரே என்ன செய்வாய்?
கேள்வி: கவிப்பேரரசு
பதில் : நான்
அம்மா அப்பாவுடனும்
அன்பு சகோதரர்களிடமும்
அலைபேசியில் சில நிமிடம்!
ஆயிரம் மலர் தேடி
அதில் உறுதேன் நாடி
ஆசையாய் பருக சில நிமிடம்!
அருந்தி மகிழ சில நிமிடம்!
இடைவெளியில்லாத நல்லிசை
இடையூறற்ற மெல்லிசை
இடையறாதோடும் முழு நேரம்!
ஈகைக்கென சில நிமிடம்!
ஈடேறாத ஆசைகளுக்காக சில
நிமிடம்!
ஈன்ற பெற்றோரையும்
தாங்கிய நன்னிலத்தையும்
நன்றியுடன்
நினைத்து சில நிமிடம்!
உரையாடலாகவோ உறைந்த மெளனமாகவோ
உற்ற தோழர்க்கென சில
நிமிடம்!
உருப்படாத அச்சம் துடைக்க
உருப்படியாக சில நிமிடம்!
ஊர் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் சில நிமிடம்!
ஊட்டி வளர்த்த ஆசிரியர்களையும்
உள்ளத்தை வளப்படுத்திய
நூல்களையும்
உவகையுடன் நினைவுகூற
சில நிமிடம்!
எல்லாம் கடந்த போதும்
எதுவும் நிலையில்லை என்ற
எளிய உண்மைக்கென சில
நிமிடம்!
ஏணியாக இருந்தவர்களுக்காக
சில நிமிடம்!
ஏமாந்த நொடிகளுக்காக
சில நிமிடம்!
ஏகாந்த தருணங்களில்
எழுதிய கவிதைகளுக்காக
சில நிமிடம்!
எனக்கே எனக்கான ஒரு
கவிதைக்காக சில நிமிடம்!
ஐம்புலனடக்கி அனைவருக்காகவும்
ப்ரார்த்திக்க
ஆண்டவனிடம் சில நிமிடம்!
ஐந்திணைகளில் பார்த்ததை
பிடித்ததை
அவசரமாக அசைபோட சில நிமிடம்!
ஒரு வாறாக நாள் முடியும்
ஒன்றுமற்ற வெளியில்
ஒன்றுபடும் நற்றருணத்தில்
மனதில் ஏதுமற்றதொரு மந்திர
நிமிடத்தில்
நின்ற இடத்தில் மண்டியிட்டு
நிலத்தில் வீழ்ந்து முத்தமிட்டு
உலகத்தார் எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்பேன் சில
நிமிடம்.
செய்த பிழைகளுக்காகவும்
செய்யாத நல்லவைகளுக்காகவும்
மண்ணில் வந்த நாள் தொட்டு
மறந்தும் நான் செய்த
குற்றங்களுக்காகவும்,
தவறுகளுக்காகவும்,
சொற்களாலும், செயல்களாலும்
சுட்டுக் கடந்த தருணங்களுக்காகவும்
நேரம் போதா வேளையிலும்
நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து
புவி புகும் முன்
நான் கேட்பேன்
என்னை மன்னிப்பாய்
எனச் சில நிமிடம்!
ஓய்கின்றது உலகம் என
ஓடுகின்ற ஊர் நடுவே
அலமாரியை அவசரமாகக் குடைந்து
தேடியெடுத்த தேசியக்
கொடியுடன்
தேசிய கீதம் தனை
தெளிவாகப் பாடியபின்
தேகம் சாய்ப்பேன்
தாய்மண்ணில் சில நிமிடம்!
விட்ட தருணங்களுக்காய்
வருத்தம் இல்லை!
பட்ட துயரங்களுக்காய்
புலம்பல் இல்லை!
செய்த நற்செயல்களுக்காக
சேகரித்த நன்றிகளை
பிறப்பின் பலனாய்
சிறப்பாய் நினைத்துக்
கொண்டு
ஓம் என்ற ஓசை
உயிரெங்கும் ஒலித்திருக்க
நல்லதொரு இசையுடன்
நல்ல தருணங்களுக்கான
நன்றியுடன்
நாவில் நற்றமிழுடன்
ஓய்ந்தமர்வேன் ஒரு புன்னகையுடன்
கடை நிமிடம்!
வாழ்க்கையில் நான் உருப்படியாக
வாழ்ந்த நாள் இது ஒன்றே
என்ற நிம்மதியுடன்
கனவுகளுடன் உறங்கிப்
போவேன்.
நாளை உலகம் இல்லையென்றானால்
நான்
இழக்க ஒன்றுமில்லை!