ஒரு அயர்ந்த நாளின் முடிவில்
அயராமல் விழித்திருக்க
என்
விழிகளுக்கு வாய்த்திருக்கிறது-
விழித்திருக்கும் மனதிற்கும்.
பின்னிரவோ விடியலோ என
பிரித்துக் கூற இயலாமல்
என்னைச் சுற்றிப் பின்னியிருக்கிறது
இரண்டு மணியின் இருளோசை.
இதயத்தின் ஏதோவொரு மூலையில்
கசிகிறது எதற்கென்று
தெரியாமல்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
பாடல்
என்றோ ஒளித்து வைத்த
புத்தகத்து மயிலிறகையும்
மலையோடு மழையோடு
மலை முகட்டு முகிலோடு
அதை உதிர்த்து விட்டுப்
போன
முகமறியாத ஒரு
மூங்கில் காட்டு மயிலையும்
மூங்கில் காட்டுக் குழலுடன்
மயிற்பீலியும் அணிந்து
கொண்டு
மந்தகாசமாய் சிரித்துக்
கொண்டிருக்கும்
மந்திரப் புன்னகைக்காரனையும்
நினைவுறுத்தியவாறு.
கண்ணனின் பகடைகள் உருண்டு
கொண்டே
இருக்கின்றன-பரமபதத்தின்
அடுத்த
கட்டத்தை நோக்கி!!!
விடியல் கசிகிறது
விரிகூந்தல் பாஞ்சாலியின்
விழிகளில்!!
அவளுக்கும் விடிந்து
விடக்கூடும்
ஐவரிடமிருந்து ஒரு விடுதலை.
அடிப்படையில் அவள் திரெளபதியும்தானே!
அவசரமாய் ஆனால் ஆழமாய்
ஒரு மூச்செடுக்கிறாள்-தான்
பணயப் பொருளாகப் போவதில்லை
என்ற ஒற்றை முடிவுடன்.
பாண்டவர்களும் கெளரவர்களும்
பழிசெய்த கண்ணனும்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
மகாபாரதச் சூதாட்டத்தின்
துவக்கத்திற்கு.
கோப்பைகளும் பகடைக் காய்களும்
கூட அங்குமிங்கும் உருண்டவாறு
கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன.
கோமகள்தான் கிளம்பி விட்டாள்,
பஞ்ச பாண்டவர்களின்
பத்தினி பதவியைத் துறந்து,
மெத்தக் கற்றக் கல்வியை
மட்டும்
பக்கத் துணையாகக் கொண்டு
நெஞ்சில் உரமும்
நேர் கொண்ட பார்வையுமாக
எழுதிக் கொள்ளுங்கள்
உங்கள் பாரதத்தை
என எள்ளி நகையாடிவிட்டு
கிளம்பியே விட்டாள் பாஞ்சாலி
திரெளபதி உருக்கொண்டு!!!
இனி உருவாகும்
புதியதொரு பாரதம்!!!!