பசித்த வேளையில் உணவு,
அலுப்பு வேளையில் ஓய்வு, கண்கள் கொஞ்ச ஆரம்பிக்கும் வேளையிலேயே உறங்கப் போகும் வாய்ப்பு,
நோய் பகிர முடியாவிட்டாலும், அது தரும் பிணி குறைக்க முடியாவிட்டாலும், ஆதுரமாய் ஒரு
குரல், அன்பாய் ஒரு கரம், சோர்வு தீர்க்க ஒரு மடி, அழுகை நேரத்தில் ஆறுதலாய் அருகில்
குடும்பம் எனக் கொடுப்பினைகள் எத்தனை பேருக்கு வாய்க்கும் எனத் தெரியவில்லை.
சாலையோரத்தில் கோணிப்பைகள்
நிறைய குப்பைக் காகிதங்களோடு அழுக்கான ஆடையில் சுருண்டு படுத்திருக்கும் அந்த நடுத்தர
வயது மனிதரையும், அவர் மகன் வயதில் அவருடன் சற்றேறக்குறைய சமகால அழுக்குடன் சுற்றிக்
கொண்டிருக்கும் சிறுவனையும் பார்க்கையில் இவர்கள் யார் எனும் கேள்வியைத் தாண்டி, தனிமையில்
இந்த இருவருக்கும் பேசிப் பகிர்ந்து கொள்ள என்ன இருக்கும் எனும் கேள்வியே அதிகம் தோன்றுவதுண்டு.
இவர்களுக்கென குடும்பமும், நண்பர்களும், ஊரும் வீடும் இருக்குமா எனத் தெரிந்து கொள்ள
முடியாத துணைக் கேள்விகள் எழுவது தனி. ஒன்றாகச் சுற்றினாலும் உறங்குகையில் தனித்தனியே
எழும் இவர்களின் கனவு எதைப் பற்றியதாக எவருடன் இருக்கும்? கேள்விகள் தொடரத் தொடர கடந்து
போய்க் கொண்டுதான் இருக்கிறோம் இப்படிப் பட்ட மனிதர்களை.
தலையில் பையுடன் நடையாய்
நடந்து கொண்டிருக்கும் அந்த மனநலம் பாதித்த பெண்மணியின் பின்னணி என்னவாக இருக்கும்?
அவர் கணவன் பிள்ளைகள் என்னவாகியிருப்பார்கள்? இவரை ஏன் மொழி புரியாத, மக்கள் தெரியாத
ஒரு தென் மாநில ரயில் நிலையத்தில் விட்டுப் போயிருப்பார்கள்? அவர் ஏன் நான்கு கிராமங்கள்
தாண்டி அந்த கோயில் வாசலை தன் அன்றாட நடை பயணத்தின் எல்லையாக வைத்திருக்கிறார்? அந்த
கோயில் வாசலில் தன் தலைச் சுமைப்பையை சற்று இறக்கி வைத்து அமரும் அவர் ஏன் ஒருநாளும்
அந்த கோயிலுக்குள் செல்லவே இல்லை? யாருடனும் ஒரு வார்த்தை பகிராத அவர் பசிக்கென்ன செய்வார்?
தொடர்நடையில் கடந்து போகும் அந்த பெண்மணியின் தனிமை எப்படிப்பட்டது? தவமா? வரமா? சாபமா?
சத்தியமாகப் புரியவில்லை.
வயதான காலத்திலும் காலையில்
நான்கு வீட்டில் வாசல் தெளித்து தன் உணவுக்கான சம்பாத்தியத்தை தேடிக்கொண்டு, பிச்சைக்
கோலத்தில் சுயமரியாதையுடன், தெருவோர கடை வாசல்களில் படுத்துறங்கும் மூதாட்டிகளின் வாழ்க்கையும்,
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட காலுடன் சாலையோர மின்கம்பத்தடியில் படுத்துக் கிடக்கும்
காவி உடை முதியவரின் வாழ்க்கையும் அவர்களின் முகத்தில் ஓடும் வரிகளை விடவும் அதிக வலியுடையதாகவும்,
படிப்பினை மிக்கதாகவும் இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனப்படுகிறது. அதிலும்
தாமதமாக அலுவலகத்திலிருந்து நான் திரும்பிய ஓர் இரவில், கடந்து செல்லும் வாகனங்களின்
வெளிச்சம் மற்றும் ஒலிப்பான்களின் அலறலின் நடுவில் பூட்டிய கடையின் வெளியில், காலடியில்
ஒரு கொசுவர்த்திச் சுருளைப் பற்ற வைத்து விட்டு, நெற்றிக்குத் திருநீறு பூசிக்கொண்டு
மிச்சத்தை கிட்டத்தட்ட ஒரு கை நிறைய வாயில் கொட்டிக் கொண்டு படுக்க ஆயத்தமான அந்த பாட்டியின்
முகம் கண்ணிலேயே நிற்கிறது.
சென்ற வாரத்தில் ஓர்
நாள். கடன் வசூலுக்காக தொடர்ந்து மூன்று நாட்களாகத் தொடர்பு கொள்ள முயன்றும், ஒரு வாடிக்கையாளரின்
கைபேசி அணைத்து வைக்கப் பட்டிருக்க, அறிந்த வேறொருவரைத் தொடர்பு கொண்டு கடனாளியை வரச்சொல்லுமாறு
பணித்தேன். அவர் வரமாட்டார் மேடம் என்றார் நண்பர். ஏன் என்றேன். அவருக்கு ஒரு பிரச்சனை
மேடம். மனம் வேகமாக கணக்கிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன், கடன் வாங்கியவரிடம் பேசிக்
கொண்டிருக்கையில் அவர் கடும் விரக்தியில் அதிகம் மனசைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததிலிருந்து,
ஏதோ காதல் விவகாரம் என்று புரிந்தது. நல்ல உழைப்பாளியான இளைஞன் என்பதால், தலை குனிந்தவாறு,
கண்களில் வெளிவரத் தயாராயிருந்த கண்ணீருடன் நின்றிருந்தவரிடம், இது எல்லாம் கடந்து
போகும். நன்றாக உழைத்து முன்னுக்கு வாருங்கள். நல்லதே நடக்கும். கடனை ஒழுங்காக கட்டி,
வேலையைப் பாருங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தேன். பையன் ஏதேனும் அவசரப்பட்டுவிட்டானோ
என்று பதறி என்ன ஆயிற்று என்றேன். எல்லாம் ஆயிற்று மேடம். அவரால் ஊரே இரண்டு பட்டிருக்கிறது.
ஊரில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றார்.
முதல் நாள் தான், ஒரு
தந்தை, என் மகனிடம் கேட்டு விடாதீர்கள். அவனுக்கு திருமணம் முடிந்து நான்கு வாரங்கள்
ஆகின்றன. வேறொருவருடனான திருமணத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து எகிறிக்
குதித்து, ஓடி வந்து நின்றவளை ஏமாற்ற மனமில்லாமல் காவல் நிலையம், மிரட்டல்கள் எல்லாம்
தாண்டி அவன் திருமணம் முடித்துக் கொண்டிருக்கிறான். தலை நிமிர்ந்து பேசாதவனுக்கு எப்படித்தான்
துணிச்சல் வந்ததோ எனப் புலம்பிவிட்டுப் போனார். இப்பொழுது இது வேறு கதை.
அம்மாவும், தம்பியும்,
தங்கையும் அருகில் உறங்கிக் கொண்டிருக்க, கதவை வெளியில் தாழ்ப்பாளிட்டு விட்டு, தனிமையில்
காதலனைத் தேடி ஓடிய இந்த பெண்ணின் உணர்வுகளையும், தனித்துக் காத்திருந்த காதலனின் உணர்வுகளையும்,
மகனின் செயலுக்காகக் காவல் நிலையத்தில் நான்கு நாட்கள் தனிமையில் கழித்த தந்தையின்
உணர்வுகளையும், வீட்டில் தனித்திருந்த தாயின் உணர்வுகளையும், பெண்ணின் நிலைமையை இந்த
நிமிடம் வரை அறியாத தாயின் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளையும் எதைக் கொண்டு விளக்குவது
அல்லது விளங்கிக் கொள்வது? தலை சுற்றிப் போகிறது.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு
பல்தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும், தன் சக ஊழியர்களுடன், தொழில்
சார்ந்தவர்களுடன், வாடிக்கையாளர்களுடன் அரவணைத்துப் போக, பேசிக் கொண்டேயிருக்க வேண்டிய
கட்டாயம் இருந்தாலும், அவர்களை சதா சர்வ காலமும் ஒரு தனிமை பின்னி இருப்பதை எவரேனும்
அரிய வாய்ப்பில்லை. எல்லோர் பிரச்சனையையும் செவிமடுத்து சரிசெய்ய வேண்டிய கடமையுள்ளவர்கள்,
அதைச் செவ்வனே செய்து முடிப்பவர்கள், தங்கள் சோகங்களை, சுமைகளை, அழுத்தங்களை, நலமின்மையை
எவருடனும் பகிர்வதற்கு நேரமின்றி, உறக்கமற்ற இரவுகள்தோறும் தங்கள் தனிமையுடன் உறக்கப்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இந்நேரம் தனிமையில் என்ன யோசித்துக் கொண்டிருப்பார்
என்று எவருக்குத் தெரியும்? தனிமை சிலருக்கு மட்டுமே வரம் தரும் தவம்.
அந்த மனிதரை எனக்கு சில
மாதங்களாகத் தெரியும். கழுத்துப் பட்டையுடன், வலி சிந்தும் புன்னகையுடன் ஆனால் அசாத்திய
அறிவு பொருந்திய கண்களுடன் எதிரில் வந்தமர்ந்த அவருடன் நிகழ்ந்த முதல் சந்திப்பு இன்னும்
நன்றாக ஞாபகம் இருக்கிறது. வங்கி சார்ந்த எங்கள் பேச்சின் இடையில், அவர் ஒரு புற்று
நோயாளி என்றறிந்தேன். மாதந்தோறும் தொடரும் புற்றுநோய்க்கான கடுமையான மருத்துவ முறைகளைத்
தாண்டி, உண்ண முடியாத உணவுக்குப் பதிலாக சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மாத்திரைகளைத்
தாண்டி, அவரால் எப்படி இத்தனை நம்பிக்கையுடன் புன்னகைக்க முடிகிறது என்று வியப்பு மேலிட்டது.
ஒரு ஆடிட்டராக மிகவும் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருக்கு கட்டிய மனையாளோ,
பெற்ற பிள்ளைகளோ கூடத் தற்பொழுது துணையில்லை. ஒரு தருணத்தில் வலியும், வேதனையும், நோயும்,
நாம் உயிராகக் கருதுபவர்களிடமிருந்து கூட நம்மைத் தனிமைப் படுத்தி விடுகின்றன. முதுகுத்
தண்டின் முக்கிய பகுதிகளை புற்று தின்றுவிட, வெளி உலகத்துக்குத் தன் நம்பிக்கை நிறைந்த
புன்னகையை மட்டுமே தந்து கொண்டிருக்கும் அம்மனிதருக்கு, உற்றாரும் துணையில்லாமல், தன்னை
ஆட்கொண்ட புற்று நோயுடன், தனிமைப் படுத்தப்பட்ட இரவுகள் எவ்வாறு இருக்கும் என யோசிக்கவே
பயமாக இருக்கிறது.
அந்த நெகிழ்ச்சியான முதல் சந்திப்பின் பிறகு சற்றே
நீண்ட இடைவெளிகளில், மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். சந்திப்பின் முடிவில்
விடைபெறும் ஒவ்வொரு முறையும், இறைவன் அனுமதித்தால் மீண்டும் சந்திப்போம் என்றே அவர்
கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு சந்திப்பின்போதும் கடவுளைக் காண்பது போலத்தான்,
தங்களைக் காண்பதும் என்றுதான் நான் அவரை வரவேற்கிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது.
தன்னம்பிக்கையை, உயிர்த்திருத்தலின் நம்பிக்கையை, வலியைத் தாங்கிக் கொண்டு புன்னகையை
வழிய விடும் நம்பிக்கையை கடவுளாகத்தான் காணப் பிடித்திருக்கிறது எனக்கு. அவரை மீண்டும்
மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையை அவரின் வாழ்வின் மீதான நம்பிக்கையே அழுத்தமாக
விதைக்கிறது.
மன அழுத்தம் அதிகமாகி
தனிமையில் விழித்துக் கிடக்கும் இரவுகளில் எல்லாம், இந்த மனிதரின் வலி மிகுந்த தனிமை
இரவுகள் பற்றிய நினைவே என்னை மீட்டெடுக்கின்றன. அவர் வாழ்க.
சேர்ந்து பயணிப்போம்.
பயணங்கள் முடிவதில்லை!