Friday, July 26, 2013


ஒயாத அலைகள்;
முடியாத பயணங்கள்;
உடையாத சருகுகள்மேல்
ஊமை கொலுசுகள்;
உற்றுக் கேளுங்கள்!
சத்தத்தினிடையில் கேட்பது
சத்தமாக இருக்கலாம்;
சங்கீதமாகவும் இருக்கலாம்;
சில நேரங்களில்
என் மெளனமாகவும்....

காற்று புயல் காற்று;
கல் படும் தருணம்;
கலங்கலாய் அடுத்த நொடி;
கண்ணாடி நான் - எனினும்
காற்றோடு என் பயணம்.
சிதறுண்டு போனாலும்
சில்கள் ஒவ்வொன்றிலும்
நூறாய், ஆயிரமாய்,
லட்சம் கோடிகளாய்
நான் இருந்தேன்!
நான் இருக்கிறேன்!
நான் இருப்பேன்!
சூறாவளிகள் நீள்வதில்லை;
சூழ்ச்சிகள் நிலைப்பதில்லை;
வீழ்ந்தே போனாலும்
மீள்வதே வாழ்க்கை;
மீண்டு வருவேன்!
மீண்டும் எழுவேன்!
நான் கண்ணாடி...
உடைத்தாலும், உடைந்தாலும்!

Wednesday, July 17, 2013



மெளனத்தை மொழிபெயர்ப்பதும்
மெளனத்தைக் கடைப்பிடிப்பதும்
மெளனத்தை மெளனமாக
ஏற்றுக் கொள்வதும்
மெளனத்தை விடவும் 
கடினமானவை என்பதை
மெளனமான பொழுதுகள்
உணர்ந்தே இருக்கின்றன
உறைந்த மெளனத்தை
மெளனமாகச் சுமந்துகொண்டு
மெளனம் கலையாத
மெளன சாட்சியாய்
மெளனச் சாலையில்
மெளனமாய் பயணிக்கும்போதும்!
காற்றால் கடலலையால்
கார்முகிலால் கதிரொளியால்
என்றேனும் மொழிபெயர்க்க
முடிந்திருக்கிறதா என்ன
ஒரு காட்டுப் பூவின் காதலை?

Tuesday, July 16, 2013


சில்லென்ற ஒரு பேச்சு
சில்லிட வைக்கும் ஒரு மெளனம்
ஊஞ்சலாடும் தருணங்களில்
உடன் ஆடிக்கொண்டிருப்பது
தனிமையாக இருக்கலாம்
கனவுகளாக இருக்கலாம்
சில நேரங்களில்

கவிதையாகக் கூட இருக்கலாம்!

விழித்திருந்த இரவெல்லாம்
விடாமல் தொடர்ந்ததொரு
குயிலின் குரல்.
விழித்திருக்கும் இப்போதும்!

இருட்டில் தேட
விருப்பம் இல்லை.
இசைக்கு முகம்
தேவையா என்ன?

அன்பை அன்பென்றுணர்வதற்கு
ஆயிரம் வார்த்தைகள்
தேவையற்றுப் போவது போல்,
குயிலின் குரலுக்கும்
அகராதியின் அவசியம் வீண்!
.
பகலில் பார்த்த
குயில் போல
இருளில் கேட்கும்
குயிலும் பேரழகு
எனும் போது
உறங்காத உள்ளத்துடன்
உரக்க வாதிடுவதை விட,
உடன் வரும் குயிலுடன்

இரவைக் கடப்பது உன்னதம்! 

மின்னும் மின்னல்களில்
எந்தக் கீற்றிலோ
உன் புன்னகை!
கரைபுரளும் வெள்ளத்தில்
எந்தத் துளியிலோ
உன் பெருஞ்சிரிப்பு!
நனைத்த சாரலில்
நான் ஈரமாக உணர்ந்தது…..
மழையாகவும் இருக்கலாம்! 

வானவில்லில் வழுக்காமல்
வண்ணத்துப்பூச்சியின் இறகுகளில் விழிகள்!
மொழியில் விருப்பமில்லை;
மெளனம் விழைகிறது மனம்!

வார்த்தைகள் வஞ்சித்து விடுகையில்
காத்திருப்புகள் அர்த்தமற்றுப் போகின்றன
காணாமல் போனவை கவிதைகளாயினும்;
கண்கள் அறிந்திராத கனவுகளாயினும்!

காரணமற்றுப் போயினும்
காலங்கள் கடந்தோடினும்
காற்றில் நுரைகளாய்
கரைந்துடைந்து போயினும்
காத்திருப்புக்கள் கலைவதில்லை

கரையாடும் கடலலைகளில்!

பயணங்கள் முடிவதில்லை IX

அடர்த்தியாக அடைத்தவாறு கிட்டத்தட்ட நகர்ந்து கொண்டிருந்த காலைப் பேருந்தில், எனக்குப் பின்னாலிருந்து கேட்ட உடைந்த அழுகுரலைக் கேட்டு பயந்து திரும்பிப் பார்த்தேன்.” நீ மட்டும் இப்ப என் கிட்ட பேசலைன்னா நான் செத்தே போயிருப்பேன்”. உடைந்த குரலில் உணர்ச்சிவயப்பட்ட உச்ச கட்ட வேகத்தில் பேசிய அந்த இளைஞன் கண்ணுக்குப் புலப்படவில்லை. இடையில் வேறொருவர் நின்றிருந்ததால், என் பார்வை தடை பட்டு, இருக்கையின் நுனியோடு திரும்பியது. “ஹேய்! நீ ஏன் ராத்திரி போனை எடுக்கலை. நீ எங்கே போன? என்னது பாட்டுக் கச்சேரிக்கா? என்னது பாட்டுக் கச்சேரிக்கா? “ என்று சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த குரல் மீண்டும் உடைந்து, “ நான் செத்துடுவேன் “ என்றது.
என் வயதுடைய என் பெரியப்பா மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த எனக்கு, பாவத்தைக் காட்டிலும், அந்த இளைஞனைக் காணும் ஆர்வம் ஒரு புறம் இருந்தாலும், கையில் கிடைத்தால் நாலு சாத்து சாத்தணும் என்று ஆத்திரம் தான் வந்தது. நான் உணர்ச்சிகளை மதிப்பவள்தான். ஆனால் உணர்ச்சி வயப்பட்டு, முட்டாள்தனமான இவ்வாறு வசனம் பேசுபவர்களைப் பார்த்தால், அங்கேயே போட்டு மிதிக்க வேண்டும் போல் வரும் இயல்பான கோபத்தை, நான் என்ன செய்வது? அதிலும் “நீ இல்லை என்றால்” என்று அழுகின்ற ஆண்களைக் கண்டால் அப்படி பற்றிக் கொண்டு வருகிறது. அதற்காகவாவது அவன் யார் எனப் பார்க்க விழைந்தேன். ஒரு உறவுக்காக, இருக்கும்  உறவுகளை எல்லாம் மறந்து விட்டு, ஆர்ப்பாட்டமாய் அழுது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவன் யார் என பின்னால் திரும்பித் திரும்பி பார்க்க முயன்றவளுக்கு, பின்னால் இருந்தவர் சற்றே நகர்ந்து வழி அமைத்துக் கொடுத்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்தவன் ஏறத்தாழ முப்பது வயதுக்காரனாயிருக்க வேண்டும். அவன் தான், இருக்கும் இடம், நிலை, கூட்டம் என எல்லாவற்றையும் மறந்து Possessivenessன் உச்சத்தில், பேச்சும் அழுகையுமாய் ஒரு உணர்ச்சிக் கலவையாய் நின்றிருந்தான். சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பேருந்து இசையின் நடுவிலும் சற்று இடைவெளியில் இருமுறை அழுது அரற்றி பேசி முடித்திருந்தவன் தற்பொழுது தெளிவாகி நின்றிருந்தான். கொஞ்சம் கூடக் குறையாத கூட்டத்தில் அப்பாடா! இவன் தொல்லை முடிந்தது என்று பேருந்தில் ஓடிக் கொண்டிருந்த பாடலில் கவனம் செலுத்த முயன்றேன். . அப்பொழுதுதான் இந்தப் பாடல் தொடங்கியது.

பாடலை எங்கேயோ எப்பொழுதோ கேட்டதாக நினைவு. அருண்மொழியின் அழகான குரலில் ஆரம்பித்த பாடலை, அத்தனை அழகாக, வாய்விட்டு சத்தமாக இசைத்தட்டுடன் சேர்ந்து பாட ஆரம்பித்த இளைஞனை இம்முறை திரும்பிப் பார்க்கத் தோன்றவில்லை. உணர்ச்சிகளின் இமயத்தில் இருப்பவனை திரும்பத் திரும்பப் பார்க்க ஒரு வகையில் அலுப்பாகக் கூட இருந்தது. ஆனால், ஆண் குரல் முடிந்து, பெண் குரல் தொடங்குகையில் தான் அந்த அபூர்வமான கலைஞனின் மற்றொரு முகம் தெரிந்தது. ஓடிக் கொண்டிருந்த பேருந்தில், ஆண், பெண் என சகலரும் சூழ்ந்திருக்க, ஒலிக்கும் பாடலுடன்,  வெகு இயல்பாக பெண் குரலில் சத்தமாகத் தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தான் அந்த இளைஞன். சாதாரணமான வேடிக்கை பார்க்கும் குணம் மாறி, இப்பொழுது அரிதான அப்பாடலை அட்சரம் பிசகாமல் பாடும் குரலைக் கவனிக்கும் குணம் வந்திருந்தது. அத்தனை உணர்ச்சி வயப்பட்டு, அழுகையில் உடைந்து கரைந்த குரலா அது? அற்புதம் என்று வியப்புடன் ஆணும் பெண்ணுமாய் அந்த பாடலுடன் ஐக்கியமாகிவிட்டிருந்த குரலிசைக் கலைஞனை மனதிற்குள் மெச்சினேன். பாடல் முடிந்து, அடுத்ததாக “சிந்திய வெண்மணி” பாடல் தொடங்கியது. அனைவரும் அறிந்த பிரபலமான பாடல் எனினும், முதல் வரியுடன் சுரத்தின்றி முடித்துக் கொண்டவன், அடுத்தடுத்த பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த போதிலும், அதையெல்லாம் பாடாமல், பெண் குரலில், காதல் நிலாவே! பூவே! என்று திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தான். தான் ஒரு ஆண் என்ற சுயம் மறந்து, அவனை மெய்மறந்து பெண்குரலில் பாடத் தூண்டுவது எது? தான் பாடகன் என்ற பெருமிதமா? பெண் குரலில் இத்தனை அழகாய் பாடும் வரம் பெற்ற வெகுசிலரில் நானும் ஒருவன் என்ற தனித்தன்மை வாய்ந்த திறமை தந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடா? அல்லது கைபேசியின் அம்முனையில் பேசி சமாதானப் படுத்திய நபர் (காதலியாகக் கூட இருக்கலாம்!) தந்த பேரானந்தமா? ஒரு மணி நேரமாக நின்றவாறு பயணித்த போதும் கால் வலியைத் தாண்டி, வியப்பு மேலிட சிந்தனை பரவியது. கலைஞர்கள் எதிலும் சற்று அதிகம் ஒன்றிவிடுவதும், உணர்ச்சிவயப்படுவதும் இயல்பு என்று சொல்லப்படுவது ஒரு வேளை உண்மைதான் போலும்.
காஞ்சிபுரத்திற்கு இன்னும் அரை மணி நேரப் பயணம் மிச்சம் இருக்கையில், யாரிடமோ, “ இதோ ஐந்து நிமிடத்தில் காஞ்சிபுரம் பஸ் ஸ்டேண்டில் இறங்கி விடுவேன் அண்ணா!” என வெகு இயல்பாய் பேசிக் கொண்டிருந்தவன் அழுது அரற்றிக் கொண்டிருந்தவன் தானா என்ற சந்தேகம் எழுந்தது. நம்பித்தான் ஆக வேண்டும். அவனே தான். இப்பொழுது காலியான இடத்தில் அமர்வதற்காய் அருகிலிருந்தவரிடம் சச்சரவில் இறங்கி, ஏன் கத்தறீங்க? என்றவனிடம், நானா கத்தறேன்? என்ற கேள்வியை பதிலாக்கியவரின் வார்த்தைகளிலும் பார்வையிலும் ஏகப்பட்ட் கேள்விக்குறிகள்.
சரி! நான் இறங்க வேண்டிய இடம் வந்தாயிற்று. மற்றொரு பேருந்தில், அலுவலகத்திற்கு இன்னும் அறை மணி நேரத்தில் சென்று சேர வேண்டும். ஆமாம்! அப்புறம், அந்தப் பாடல் எந்தப் படத்தில் இடம் பெற்றது என்பதையும் போய் தேட வேண்டும் என முதல் இரண்டு வரிகளை நினைவில் வைத்துக் கொண்டேன். எல்லோரும் போய்விட்ட அலுவலகத்தின் மழை மாலையில், தேடிய போது, மணிக்குயில் படத்தில் கிடைத்தது இந்தப் பாடல். முரளியும் சாரதாப்ரீதாவும் உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தார்கள். வார்த்தைகள் எனக்குப் பதியவில்லை. எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இது என்றாவது இடம் பெறுமா எனவும் தெரியவில்லை. ஆனால், என்றாவது, எங்காவது கேட்க நேர்ந்தால், ஒரு பேருந்துப் பயணத்தில் முகமறியாமல் கடந்து போன ஒரு கலைஞனின் அழுகையை, காதலை, துக்கத்தை, மகிழ்ச்சியை, இரு குரலில் அதிலும் அழகான பெண் குரலில் பாடும் திறமையை நிச்சயம் நினைவுக்குக் கொண்டு வரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. கறை நல்லது என்பது போல உணர்ச்சி வயப்படுதல் கூட சில நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்திவிடுகின்றது.


சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!