Sunday, August 18, 2013


மழை பெய்து ஓய்ந்த
மாலை ஒன்றின் மடியில்
ஒரு நனைந்த கவிதையின்
வரிகளாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றுப்பெறாததொரு மெளனம் என்
உதடுகளில் மட்டும்- எனக்கு
சற்றும் சம்மதமற்ற
இந்த மெளனத்தை
சன்னமாகவோ சத்தமாகவோ
சண்டையிட்டோ கூட
உடைத்துவிட முடியும்தான்-எனினும்
உடைக்கப் பிடிக்கவில்லை
உடைந்த மனதிற்கு-எதையும்
உரைக்கப் பிடிக்கவில்லை
உறைந்த உள்ளத்திற்கு!
உறைநிலையில் நீரை
உளிகொண்டு உடைக்கலாம்!
உருகிய தண்ணீரை…..
கொப்புளிக்கும் வெந்நீரை…..
மெளனம் பிணி
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்;
மெளனம் வலி

என்பதையும்….

Thursday, August 1, 2013

எவருடனும் பகிர முடியாத
துக்கத்தின் சாரல் என்னை
எரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும்
துடைத்தெறிய முடியாத வேதனை!

தீவில் இருப்பதும்
தீவாக இருப்பதும்
வெவ்வேறென்பதின் அர்த்தம்
வெம்மையாய்ப் புரிந்தாலும்
வெளிவர முடியாத
வெந்தழல் வேக்காட்டில்!

மாறிய உலகத்தின்
மாற்றம் புரியாமல்
மனம் மட்டும்
வினவிக் கொண்டேயிருக்கிறது
சரியும் தவறும்
வெவ்வேறா! ஒன்றேதானா என!

என்னைச் சுற்றி
என்னதான் நடக்கிறது?
வாசல் யாது?
வழிதான் யாது?
இதுவும் கடந்து போகுமோ?
இல்லை………..
என்னைக் கவர்ந்து போகுமோ!

இறைவா! என் இறைவா!