Thursday, October 31, 2013

Shhhhhivvering in Fffffffffffffffffever..............

Sunday, October 27, 2013


இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று காஞ்சிபுரத்திற்குப் பயணப்பட்ட என் பாதை, கடந்த ஏழு ஆண்டுகளில் எனக்கு முதன்முதலாகப் புதிதாகத் தோன்றியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக, நான் நாள் தோறும் பார்த்த திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியே புதிதாகத் தோன்றும் போது, இது ஒன்றும்  பெரிதில்லைதான் போலும். கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகல், உணவு உறக்கம் எனப் பாராமல் தொடர்ந்து பயணப் பட்டுக் கொண்டிருக்கும், வேலை, பயணம் என ஓடிக் கொண்டே இருக்கும் புதிய வாழ்க்கை முறையின் அயர்வு, இதற்குக் காரணமாக இருக்குமோ? இருக்கலாம்!!!
வந்தவாசியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பேருந்தில் ஏறியபின்னும் திருவிழாவில் தொலைந்தது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. காஞ்சி கொஞ்சமே கொஞ்சம் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. கிருக்ஷ்ணா ஸ்வீட்ஸ், கோவை கணபதி என எனக்குத் தெரிந்து இரண்டு புதிய வரவுகள். பட்டாசுக் கடைகள்,நகைக் கடைகள், துணிக்கடைகள், இனிப்புக் கடைகள், எங்கெங்கும் கூட்டம், வெய்யில் ஊரான வேலூரை விட அதிக வெப்பம் என காஞ்சிபுரம் அழகாகவே இருக்கிறது. வாங்க! வாங்க! என அமோகமாகமாக வரவேற்ற கோவை கணபதியில் " வாசமில்லா மலரிது" என்று எஸ்.பி.பியின் பொற்குரலில் டி.ஆர் இன் அழகான பாடலுடனும் சகல மரியாதை கவனிப்புடனும் இரவு உணவை முடித்து விட்டுக் கிளம்புகையில், எப்பொழுது இந்த உணவகத்தைத் திறந்தீர்கள் என்றேன். இரண்டு மாதமாகின்றது மேடம் என்றார் உணவக உரிமையாளர்.  இரண்டு மாதங்கள் கழித்து இப்பொழுதுதான் நான் காஞ்சி வருகிறேன் என்றதும், டிபன் நன்றாக இருக்கிறதா என்றார். புன்னகையுடன் வரவேற்று, உபசரித்து, பரிமாறிய சூடான உணவிற்குப் பின் ( சட்னியில் உப்பு சற்றுக் குறைவாக இருந்தது இப்பொழுது நினைவிற்கு வருகிறது. பரவாயில்லை. விருந்தோம்பல் அருமை) நான் என்ன சொல்ல!  ambience ம் நன்றாக இருக்கிறது; உணவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய போது, அவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணமுடிந்தது. சாயிக்கான மலர்ச் சரங்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். ஹாஸ்பிட்டல் ரோடும், பழைய ரயில்வே ரோடும் மட்டும் மாறவேயில்லை! சச்சின், சாமிகள், புத்தகங்கள் என என் அறையும்! அம்மாவிடம் செல்லில் பேசுகையில், பின்னணியில் கேட்ட ரயில் சத்தத்தைக் கவனித்துச் சொன்னார். எனக்கு மிகவும் பழக்கப் பட்ட, இரண்டு மாதங்களாகக் கேட்காத பின்னணி. பண்பலையில் இளையராஜா கசிய, கையில் இருந்த புத்தகம் நழுவுவது தெரியாமல் தூங்கிப் போனேன். ஏதோ ஒரு பாடலில் விழித்தெழுகையில் தோன்றியது மாற்றம் மனம் சார்ந்ததுதானே! மனதிலே ஒரு பாட்டு....கேட்டுக் கொண்டே மீண்டும் தூ....ங்கிப் போனேன்!!!

பயணங்கள் முடிவதில்லை.....

Thursday, October 24, 2013

தீவிர யோசனையின்
தொடர்ச்சியாய் தூங்கிப்போவதும்
உறக்கத்தினிடையே 
உரத்த சிந்தனையில்
விழித்துக் கொள்வதுமாய்
இரவு பகல் அறியாமல்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
இந்த பயணத்தில் 
இன்று வரை விளங்காதது
..................