வெறுமையாக இருக்கிறது மனது. எதையும் யோசிக்காமல், எதையும் நினைக்காமல், எதையும் பேசாமல் சில நிமிடங்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனக் கைகூடாத நொடிகளுக்காக மனம் ஏக்கத்தில் சினுங்கிக் கொள்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்ன செய்ய விழைகிறேன், என்ன செய்ய நினைக்கிறேன், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறேன் என எதற்கும் பதிலில்லை. கேள்விகளும் பதில்களும் அற்ற உலகமும், வாழ்க்கையும், நாட்களும் எல்லோருக்கும் வரமாக வாய்ப்பதில்லை. புளிப்பு, இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என சுவைகள் வகைப்பட்டுக் கிடப்பது போல் அல்லவா, வாழ்க்கை தன்னை அச்சம், சினம், மகிழ்ச்சி, குழப்பம், தெளிவு, உற்சாகம், சோர்வு என வகைப்படுத்திக் கொண்டுள்ளது. இதில் எந்தத் தோனி பற்றி இந்தக் கடலைக் கடப்பது என்பதுதான் பெரிய கேள்வி?
எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவார்!
நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கண்ணை மூடினால் வந்து போகும் காட்சிகளைக் காணும் துணிவின்றி விழிகளை விரித்து வைத்து, மடி கணிணியிடம் என்னை ஒப்புக் கொடுத்துள்ளேன். தேவையில்லாமல் காலையில் கண்ட விபத்து கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. வெள்ளைச் சட்டை நீல நிற ஜீன்ஸ் தாண்டி வழிந்தோடிய சிவப்புக் குருதிச் சகதியின் நினைவு இந்த இரவை இம்சித்துக் கொண்டிருக்கிறது. இறைவா! அத்தனை இரத்தத்தை இழந்த நிலையிலும் முகமறியாத அந்த மனிதன் உயிர் பிழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என மனது ப்ரார்த்தனையில் கரைகிறது. கடவுளே! அந்த மகனை, சகோதரனை, கணவனை, தந்தையை, நண்பனைக் காப்பாற்றி விட்டாய் தானே எனக் காற்றில் கேள்வியை விதைக்கிறது. சத்துள்ள விதைகள் சத்தியமாய் முளைக்கும் என்ற நம்பிக்கையில் தானே வாழ்க்கை தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
காதுக்குள் வழிந்து கொண்டிருக்கும் பாடலைத் தாண்டி கேட்கும் சத்தங்கள் உண்மையாவையா இல்லையா என்று ஆராய அச்சமாக இருக்கிறது. காதுகளை மூளைக்கு இனம் காட்டாமல் எழுத்துக்குள் அமிழ்ந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மாட்டேன் என உறுமி அடிக்கின்றது மனமோ மூளையோ, இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டுமோ.
முன்னிரவில் படித்த கவிஞர்.அறிவுமதியின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.
மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
தூங்கிவிட்டாலென்ன.
ஆமாம்! இந்தக் கண்கள் கொஞ்சம் தூங்கிவிட்டால்தான் என்ன?