Thursday, April 24, 2014

Tuesday, April 22, 2014


நள்ளிரவைத் தாண்டி விட்டது; தூங்கணும் காஞ்சனா!நேற்றும் இன்றும் நிறைய பயணித்தாகி விட்டது. நாளை காலையில் வேறு சென்னைக்குப் போக வேண்டும்! தூங்க வேண்டும் இல்லையா எனக் கண்கள் கெஞ்சுகின்றன. ஆமாம்! தூங்க வேண்டும் தான் என் கண்களுக்கும், அயர்ந்த உடலுக்கும், ஆனால் தூங்க மாத்தேன் போ என அடம்பிடிக்கும் இந்த மனதை என்ன செய்வதெனத் தெரியாமல் இதோ இந்த இரவைக் கடத்திக் கொண்டிருக்கிறேன் பனித்த கண்களுடனும் இடை இடையே வந்து போகும் கொட்டாவியுடனும். தன் கல்லூரி வாழ்க்கையின் கடைசித் தேர்வை முடித்து விட்டு, நாளை ஊருக்குச் செல்லும் மனநிலையில் அலைபேசியில் குறுஞ்செய்தியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் அறைத் தோழியின் புண்ணியத்தில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கிப் பறந்து விட்டது மனப்பறவை!

தனியே அமர்ந்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த சில கங்காவின் மொட்டை மாடி இரவுகளை, வெண்ணிலாவுடனான என் மெளனங்களை வளர்த்த, அதை விட நீண்ட எங்கள் பேச்சுக்களால், பகிர்தல்களால் நிறைந்திருந்த இன்னும் சில கங்கா மொட்டை மாடி இரவுகளை இந்த இரவு தன்னுடன் அழைத்து வந்து விட்டது போல் தோன்றுகிறது. என் எழுத்துக்களை, எண்ணங்களை, என்னை நானாகவே ஏற்றுக் கொள்ள வெண்ணிலாவால் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. இதே போன்றதொரு இரவை நாங்கள் ஏதும் பேசாமல் மெளனமாய் கடக்க விட்டிருந்தோம். என் கோபம், அழுகை, மெளனம், சத்தம் எல்லாம் அறிந்தவளாய் எனக்காகவும் சேர்த்து டென்க்ஷனாகி மயக்கமாகி விழ வெண்ணிலா இருந்தாள்; அவளுக்கு மட்டுமே நான் தோழியாக இருக்க வேண்டும் என்ற உச்ச பட்ச பொசஸிவ்னஸ் வழிந்த சில பல கவிதைத் துணுக்குகளை அவள் கையெழுத்தில் என் பை உள்வாங்கிக் கொண்டது. விடிந்த பின்னும் அவளிடம் இருந்த என் ஆட்டோகிராப் என்னிடம் வந்து சேரவில்லை. நிறைய பாரத்துடன் பிரியாவிடைகள் நிகழ்ந்து கொண்டிருந்த நாள் கரைந்து கொண்டிருந்தது. நாங்கள் காலையிலிருந்து பார்த்துக் கொள்ளவோ பேசிக் கொள்ளவோ இல்லை என்பதை இருவரும் உணார்ந்திருந்தோம். பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டிருந்த மதிய வேளையில் நாம் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாகி விட்டது என்று எங்கள் இருவர் அறைகளும் இருந்த வராண்டாக்களை இணைத்த இடைப்பட்ட அறையின் வாயிலில் நான் அவளிடம் சொல்லத் தொடங்கியிருந்தேன். எல்லோரும் எழுதி முடித்த ஆட்டோகிராப் நோட்டில், சில பக்கங்களில் அடக்கி விட முடியாமல், தன் அன்பை வெடித்துக் கிளம்பிய அழுகையாய், கண்ணீராய் கொட்டியவளுக்குப் பதிலுக்கு என்ன தருவதெனத் தெரியாமல், அவள் மயங்கி விழுந்த பொழுதில், கன்னத்தில் பளாரென ஒரு அறையைக் கொடுத்து அவளை நினைவுக்குக் கொண்டு வரச்செய்து மீண்டும் அழவைக்கத்தான் முடிந்தது என்னால். நமக்காக அழ ஒரு ஜீவன் இருப்பதை உணர்தலை விட ஒருவர்க்கு பெரிய வரம் ஏதேனும் கிடைத்து விடக் கூடுமா என்ன?  கொஞ்சம் பேசி, நிறைய அழுது, ஒரு பிரியாவிடை நிகழ்ந்தேறியது. அலைபேசி அர்த்தமற்றதாக்கி விடுகிறதோ பகிர்தலை எனக் கூடத் தோன்றிவிடுகிறது சில சமயங்களில். எங்கள் சின்னச் சின்ன சண்டைகளை, மன்னிப்புக் கோரிய  காகிதத்தூதுவர்களை, ரகசியங்களைப் போட்டுடைத்த தருணங்களின் மெளனங்களை உடைத்த மென் கவிதைகளை , கடிதங்களை எங்கள் இருவரின் கல்லூரிப் பொக்கிக்ஷங்கள் தாங்கிய பெட்டிகள் சுமந்து கொண்டிருக்கின்றன. இருவரின் வேலையும், வாழ்க்கையும் எளிதாக தூரத்தை நீட்சி செய்திருந்த போதும், இருவரும் இன்னும் கங்காவின் வராண்டாக்களில், மரத்தடிகளில், மொட்டை மாடியில் இன்னும் படித்துக் கொண்டும்,அரட்டையடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், நினைத்துக் கொண்டே இருக்கிறோம் இந்த நட்பு இன்னும் ஆசிர்வதிக்கப்படட்டும் என்று. 

விழித்துக் கொண்ட நினைவுகளில் இருந்து விடுபட்டு இந்த இரவுடன் தூங்கப் போக குளித்தால் பரவாயில்லை போலிருக்கிறது! செய்யலாம்! தவறில்லை! தூக்கம் வரும் என்றால் இப்போதைக்குக் குளியல் கூடத் தவறில்லை தான்! அர்த்த ராத்திரியில் குடை பிடித்தால் தான் ஏதோ பிரச்சனை! கோடையில் ஏது இரவும் பகலும்! நீரின்றி மட்டுமல்ல நட்பின்றியும் அமையாது உலகு..............! Miss You Ice!