தலைப்பைப் பார்த்துப் பதற வேண்டாம்!
கண்ணாடியில் காதல் பற்றிய பதிவா? ஆச்சர்யம் தான்! ஆனால், அண்மைக்காலத்தின் மிக மிக அழகான காதல் கதையை நேற்றுக் காண வாய்த்தது. அதைப் பற்றி பதிவு செய்யாமல் விட்டால், வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கையில் ஒரு நல்ல தருணத்தைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் நாளை எனக்கு ஏற்படக் கூடும். ஆதலால்...., சரி!இனி கதைக்குப் போவோம்!
உங்கள் அம்மா அப்பாவுடன் ஒரு காதல் கதையைப் பார்க்க வேண்டுமா? உங்கள் அம்மா அப்பாவின் காதல் கதையைப் பார்க்க வேண்டுமா? 2014லும் ஒரு கதை இருக்கிறது என ஆச்சரியப் படுத்திப் பார்த்திருக்கிறது, பார்க்க வைத்திருக்கிறது ஒரு திரைப்படம். திரைப்படத்தின் பெயர் "பண்ணையாரும் பத்மினியும்" காதல் கதை என்று சொல்லி விட்டு, படத்தின் பெயரைச் சொன்னவுடன் விஜய் சேதுபதியின் காதல் கதை எனக் கருதியிருந்தீர்களானால் அதுவல்ல நிஜம். கீழ்கண்ட பாடலைப் பாருங்கள்.
இது போன்ற காதல் கவிதைகளை, காதல் காட்சிகள் கொண்ட டூயட் பாடல் கொண்ட காதலால் பொங்கி வழியும் காதல் கதைகளை சமீப காலங்களில் திரையில் கண்டிருக்கிறீர்களா? காண்பது மிக மிக அரிதாகத் தானே இருக்கிறது. அதனால் தான் இந்த படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் உள்ளம் கண்ணா பின்னாவெனப் பொங்கி விட்டது.
மரத்தைச் சுற்றிச் சுற்றி ஆடும், முகத்தை முகர்ந்து முகர்ந்து பார்க்கும் வண்ண மயமான ஆடைகள் உடுத்திய இளைஞனும் யுவதியும் அயல்நாடுகள் சென்று ஆடவில்லை; பாடவில்லை. ஆனால் நமக்கென்ன வயசு திரும்பவா போகுது என்று கேட்டுக் கொண்டே, த ( dha)! இங்க பாரு! நீ எப்ப வண்டி ஓட்டக் கத்துக்கிட்டு, நீயே ஓட்டுவியோ அப்பதான் நான் கார்ல ஏறுவேன் என வெட்கம் வழிய, குறும்பு வழிய, காதல் வழிய, அடேங்கப்பா! "சகலகலாவல்லவன்" படத்தில் பார்த்த "வள்ளி" துளசியா இது! சதா சர்வ காலமும் சமையலறையில் அமுது படைத்துக் கொண்டிருக்கும், சின்னப் பெண் போல் கணவனிடம் முறுக்கிக் கொண்டு திரியும், நான் இல்லன்னா நீ என்ன பண்ணுவ? எனக் கசிந்துருகும், முருகேசா! அய்யாவுக்கு இன்னும் ரெண்டு இட்லி வை என்று கரிசனம் பொழியும், தந்தையைக் குற்றஞ்சாட்டும் மகளிடம் சண்டைக்கு நிற்கும், மற்றதெல்லாம் பரவாயில்லை; காரும் இந்த வீட்ல ஒரு குழந்தை மாதிரி தான இருந்துச்சு; அதை திடீர்னு எடுத்துக்கிட்டு போனதுதான் தாங்கல என மருகும், காரைப் பத்தி பேசாம இருந்தா எப்படி; அவளும் நம்ம பொண்ணு மாதிரிதான, கார் சாவி எங்க? கொடுத்தணுப்புங்க! என நேர்கொண்ட பார்வையுடன் சொல்லும் செல்லம்மாள். Awesome Acting Madam! இவரை தமிழ் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இயக்குனரின் பாரதி பாசம், பண்ணையாரின் மனைவிக்கு செல்லம்மாள் என்று பெயர் இட்டதில் தெரிகிறது. தமிழ் படித்தவன் எவனொருவனும் பாரதியால் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்ன? துளசி அவர்கள் செல்லம்மாள் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு.
பண்ணையார் ஜெயப்பிரகாக்ஷ் மட்டும் என்ன? பண்ணையார் வீட்டம்மாவிற்கு சற்றும் சளைக்காமல் அற்புதமாக நடித்திருக்கிறார். நண்பரின் காரில் " செல்லம்மாள்" பெயர் எழுத முற்படுவதும், மகளுக்கென்றால் உனக்குத் தானடா எல்லாம் என எதையும் கொடுத்தனுப்புவதும் ஆகட்டும், கார் கேட்கும் மகளைக் கண்டிக்கும் மனைவியை " அடி! செருப்பால" என்று அதட்டுவதும், கடைசியில் காரைப் பற்றி குறை சொல்லி அப்பாவை மகள் திட்ட, கடிந்து பேசும் மகளைக் கண்டிக்கும் அம்மாவைத் திரும்பத் திட்டும் மகளிடம், மனைவியை விட்டுக் கொடுக்காமல், " இனி ஒரு வார்த்தை பேசுன" என அதட்டுவதாகட்டும், எல்லாவற்றுக்கும் மேல் மனைவிக்காக கார் ஓட்டக் கற்றுக் கொள்வதாகட்டும் அருமை ஐயா! ABC இல்ல சார்! Ph.D யே பண்ணிட்டீங்க போங்க! பசங்க வாத்தியார் கதாபாத்திரத்துக்குப் பின், உங்கள் நடிப்புத் திறமைக்கான சரியான தீனி கிடைத்திருக்கிறது. அற்புதமாகப் பயன் படுத்திக் கொண்டு, பின்னி எடுத்து விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாப் புகழும் இயக்குனருக்கே!
மேற்கண்ட பாடல் ஒரு சோறு பதம். காதலின் அழகை இதை விட அழகாகக் காட்ட முடியுமாவெனத் தெரியிவில்லை. படமாக்கப் பட்ட விதம் பிரமாதம்!
கல்யாண நாளுக்குள்ள கார் ஓட்டக் கத்துக்குவ இல்ல எனும் காதல் மனைவியின் கேள்வியும், கல்யாண நாளுக்குள்ள கார் ஓட்டக் கத்துக்குவேன் இல்ல எனும் காதல் கணவனின் கேள்வியும், பாவம்! சின்ன புள்ள மாதிரி ஆசைப்படுது. எப்படியாவது கார் ஓட்டக் கத்துக் கொடுத்துடு என்று இருவரிடம் இருந்தும் வெளிப்படும் பாசத்தின் கெஞ்சலும், கார் ஓட்டுனர் முருகேசனை மட்டும் அசைத்து விட வில்லை. நம்மையும் தான். வயோதிகத்தின் பொறுப்புக்களை, கம்பீரத்தை, பாசத்தை, பெரிய மனிதத்தனத்தை, சின்னச் சின்ன ஆசைகளை மிகக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் S.U. அருண்குமார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக அங்கீகாரம் பெற்ற ஒரு குறு/சிறு நாடகத்தை 152 நிமிடத் திரைப்படமாக உருவாக்கி இருப்பதில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறீர்கள் இயக்குனர் அவர்களே! பாராட்டுக்கள்!
ஏக் துஜே கேலியே, தேவதாஸ், ஹம் ஆப்கே ஹைன் கோன், தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே என நீளும் திரைப்படங்களின் வரிசை, திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாகக் கொண்டாடப்பட்ட காதல் கதைகளைக் கொண்டவையாக இருந்த்திருக்கலாம். ஆனால் 2014லும் வயோதிகத்தை ரசிக்க வைத்திருக்கும், வயோதிகக் காதலை ரசிக்க வைத்திருக்கும், இளம் தம்பதிகளாக இருக்கும் நம் சொந்த பந்தங்களும், நண்பர்களும் இதே போன்ற அன்பில் கனிந்த, காலத்தால் அழியாத, எத்தனை வயதானாலும் குறைந்து விடாத, ஆசிர்வதிக்கப் பட்ட காதலுடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என நம்மையும் ஆசைப்பட வைத்திருக்கும் " பண்ணையாரும் பத்மினியும்" நம் கலாசாரத்தைக் கொண்டாடும், நம் காலத்து காதல் கவிதை/காவியம்!
சமர்ப்பணம்: நான் பார்த்த மிக அந்நியோன்யமான காதல் ஜோடியான என் தாத்தா பாட்டிக்கும், என் அப்பா அம்மாவிற்கும்!
ஒரு பாடலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. சோதனை நேரலாம்; பாசம் என்ன போகுமா? மேகங்கள் போய் விடும்; வானம் என்ன போகுமா?
சத்தியம்!
எல்லாவற்றுக்கும் மேல், கடைசியாக, பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரை வைத்து விட்டு ஏடாகூடமான இரண்டாம் தர, மூன்றாம் தர கதைகளைக் கடைவிரிக்காமல், நல்ல தரமான திரைப்படமாக படைத்து விருந்தளித்தமைக்கு இயக்குனருக்கும், திரைப்படக் குழுவினருக்கும், இவர்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
பயணங்கள் முடிவதில்லை!