Friday, December 27, 2019

என்னைச் சுமந்த இதயம்
எப்படித் துடிக்க மறந்தது
அப்பா!
அந்த மணித்துளியில்
என் முகம் நினைத்தீர்களா?
ஐயோ! என் மகளே!
என ஒரு முறை அழைத்தீர்களா?
இன்றிரவு முதல் நான் அருகிலில்லாமல்
எப்படி உறங்குவாய் மகளே
என பதைபதைத்தீர்களா?
அச்ச கணங்களில் இனி
அப்பா இன்றி என் செய்வாள்
என் மகள் எனக் கடவுளிடமே
கேள்வி கேட்டீர்களா!
உலகத்தின் மிகச் சிறந்த மகளுக்காக
ஏழுலகினும் மிக மிகச்சிறந்த
என் அப்பா!
எனக்காக
நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த கடவுளுக்கு
ஏன் காதுகள் கேட்கவில்லை அப்பா?

உலகத்தின் அன்பு மொத்தத்தையும்
ஆறுதல் மொத்தத்தையும்
பாசம் மொத்தத்தையும்
பரிசாகத் தன் மகளுக்குத் தர
வரம் என எனக்கே எனக்கென வாய்த்த
அப்பாவைப் பார்த்து, பேசி,
என் அச்சம், கோபம், குழப்பங்கள்,
வெற்றி, மகிழ்ச்சி, என
எல்லாவற்றிலும் எனக்காக துணை நின்ற
அப்பாவின் ஆசைக் குரல்,
அன்புக் குரல்,
தங்கக் குரல்,
கம்பீரமான குரல் கேட்டு
மாதம் ஒன்றாகி விட்டதா?

என் மொத்த அச்சங்களையும்
ஒற்றை சுமைதாங்கியாய் தாங்கி
நானே ஆகி என் நிழலாக,
நிஜமாக, உயிராக்
என் உலகாக இருந்த அப்பாவை
இனி எப்போது காண்பேன்?

என் ஒரு நொடி மெளனத்தைக் கூட
உடனடியாகக் கண்டு கொள்ளும்
உங்கள் இதயத்தில்
எங்கும் எங்கெங்கும் நிறைந்திருந்த
செல்ல மகளைத் தவிக்க விட்டுச் செல்ல
எப்படி ஒத்துக் கொண்டீர்கள் அப்பா?
அது சாத்தியமே இல்லையே!

நீங்கள் இல்லா வீட்டின் வெறுமை
தாங்க இயலாததாக,
எதைக் கொண்டும்
நிரப்ப இயலாததாக
நம்ப இயலாததாக
ஏற்றுக் கொள்ளவே முடியாததாக
இருக்கிறது அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?
அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?

No comments:

Post a Comment