Tuesday, October 25, 2011


நாட்களுடன் நழுவுகின்றன
சூழ்நிலையும் வானிலையும்.
மழை நாட்கள்
வந்து போகின்றன
மாற்றம் இல்லாத
ஒரே குணத்துடன்,
குடையற்ற தருணங்களில்
என்னை நனைத்தவாறோ;
குடையுள்ள தருணங்களில்
என்னைத் தவிர்த்த
உலகை நனைத்தவாறோ!
என் உலகம்
நனைவதற்காய் பழகிவிட்டேன்
குடையில்லா பயணங்களை!

மழையில் நான் நனைவதும்
மழைக்கு என்னை நனைப்பதும்
பழகிய மகிழ்ச்சி- என்
அழகிய உலகத்தில்.

Friday, October 21, 2011

நானே நானா?



இரண்டு நாட்கள் மண்டல அலுவலகத்தில் 60 லட்சம் மதிப்புள்ள CREDIT PROPOSAL முடித்து இன்று ஆவலாய் அலுவலகம் திரும்பினேன். புகைவண்டிப் பயணம், வழியெங்கும் புன்னகையோடு வணக்கம் சொன்ன மக்கள் என மகிழ்ச்சியாகத்தான் தொடங்கியது காலை. ஆனால்…… பின்னர்
எனக்கு என்னவாயிற்று?
எனக்கு என்னவாயிற்று?
இன்று எனக்கு என்னதான் ஆயிற்று?
எடுத்து வைத்த சிற்றுண்டியை அறையில் விடுத்து மதிய உணவு மட்டும் எடுத்துச் சென்றிருந்தேன். ஏனிந்த மறதி? பின் மூர்த்தி கொண்டு வந்ததை உண்பதற்குள் வானம் சூரியனை உச்சிக்கு அழைத்துச் சென்று விட்டது. மதியம் 12 மணிக்கு தோசையும் மிளகாய்ப் பொடியும். மதியமோ நிலைமை சுத்த மோசம். மண்டல அலுவலக தொலைபேசி அழைப்புகள் ஒரு புறம், வாடிக்கையாளர் மறு புறம் என்றிருக்க, தலைவலி, தலை சுற்றல், படபடப்பு,  துடிக்கும் கண்கள், பூச்சி பறப்பது போல் வந்த தலை சுற்றல் இவையெல்லாம் ஏன் எனத் தெரியவில்லை? MAY BE BECAUSE OF THE LA….TE BREAKFAST, இரண்டு நாட்களாக AC அறையில் இருந்து விட்டு வந்ததனால் MAY BE BECAUSE OF HEAT, என எனக்கு நானே காரணங்கள் சொல்லிக் கொண்டாலும், எனக்கு என்னவோ ஆயிற்று என உரக்கச் சொல்லும் மனதை மெளனிக்க முடியவில்லை. உண்மை போலும் தோன்றுகிறது. இந்தக் கவனச் சிதறல் எனக்கு நன்மை பயக்காது தானே! இந்த உடல் நலக்குறைவு என்னை பலவீனமாக்குகிறது. இப்பொழுதும் தொடரும் இந்த தலை வலி IT WEAKENS ME. DR.KANNAN ஐக் கேட்டால், YOUR WORK STRESS IS SPOILING YOUR HEALTH. IF YOU STARVE, YOU’LL SWELL. DON’T FOREGO YOUR TIMELY FOOD, TIMELY REST AND HEALTH FOR ANYTHING, ANYTHING INCLUDING YOUR PROFESSION என்கிறார். ஒரு வகையில் பலருக்கு உதவினாலும், என் வாழ்க்கையை நான்    COMPROMISE செய்து கொண்டிருப்பதாய் ஒரு கலக்கம். CUSTOMERS, ZO, HO, TARGETS, REVIEWS, DISHOOOM, DISHOOM, DISHOOM என ஒரு மேலாளராய் வெளியில் சிரித்தாலும், உள்ளே இவ்வளவு அழுத்தத்துடன், அச்சத்துடன், கலக்கத்துடன் இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? சமயத்தில் பலவீனமானது போல் உள்ளெழும் இது போன்ற புலம்பல்கள், காணாமல் தான் போகின்றன அடுத்த நிமிட அவசர வேலையில். எனினும் அப்பா சொன்னதாய், அம்மா சொன்னது போல், என் பேச்சு, என் கவிதைகள், என் ஓவியங்கள், என் உலகளாவிய அறிவு சார்ந்த பேச்சு, என் கைவினைப் பொருட்கள், என் சிரிப்பு என என் எல்லாம் எங்கே போயின? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, சலிப்பூட்டும் இந்த அவசர வாழ்க்கை சரிதானா? என் கலெக்டர் கனவுகள், கவிதைகள், உள்ளுக்குள் எப்பொழுதும் கேட்கும் ஒரு புல்லாங்குழல் அல்லது வயலின் இசை, சிறு கோபங்கள், நிறைய கேள்விகள், தேடல்கள் இவையெல்லாம் இல்லாமல், காஞ்சனா யார்? நிறைய வலிக்கச் செய்யும் இந்தக் கேள்வியிலிருந்து நான் எப்பொழுது எங்கே விடை பெறுவேன்? மற்றுமொரு அழகான பகல் பொழுதை அலுவலகத்தின் உள்ளேயே கழித்துவிட்டு, இரவின் தனிமையில் நான் நான் நான் மட்டும்.

எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” சிறுகதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Thursday, October 20, 2011

வாகை சூட வா

அண்மையில் அதிசயமாக ஒரு அழகான தமிழ்ப்பாடலை கவனிக்க நேர்ந்தது. ஆமாம். அதுதான் பொருத்தமான சொல். கேட்க நேர்ந்ததென்று எழுதுவதைவிட, கவனிக்க நேர்ந்ததென்பதே சரியான சொல். சர சர சாரக் காத்து வீசும்போது எனத் தொடங்கி சர சரவென மண்மணத்துடன் மனதை ஈர்த்த அழகான பாடல். கேட்பதற்கு இனிமையென்றால் மட்டும் போதாது, பார்ப்பதற்கும் அவ்வளவு ரசனையுடன் படமாக்கப் பட்டிருக்கும் அழகு,… அருமை. பாடலை இயற்றிய திரு.வைரமுத்துவாகட்டும், இசையமைத்த திரு. ஜிப்ரான் ஆகட்டும், படம் பிடித்த,,,,அந்த அற்புதக் கலைஞராகட்டும், ஒரு சோறு பதம். நெடுநாள் கழித்து ஒரு பாரதிராஜா பாடல் பார்த்தது போன்ற மகிழ்ச்சி. YOU HAVE PLACES TO GO வாகை சூட வா TEAM. DEFINITELY YOU HAVE A GREAT FUTURE MR.GIBRAN. ALL THE BEST.

Saturday, October 15, 2011


சுழித்தோடும் இருளோடையை
கிழித்தோடும் சுடரொளிபோல்
பசித்த புலியாய்
காத்திருக்கிறது அறிவு;
ருசிக்க மறந்து
போனது நாவு;
ரசிக்க மறந்து
போயின விழிகள்;
ஐம்புலனை ஒன்றாக்கி
அமுதா விக்ஷமாவென
ஆய்வு முடித்தபின்
நுகர்வோம் அறிவை;
பகிர்வோம் தெளிவை;
இரவின் மெளனத்தை
மொழிபெயர்க்கிறது மூளை.

ருசி சில நொடிகள்,
ரசனை சில மணிகள்,
வாசனை தாண்டிய
யோசனையைத் தூண்டும்
அறிவு அழிவற்றது.
புல் கண்டும்
புள்ளிற்காக காத்திருக்கும்
பசித்த புலியாய்
தெளிந்த ஞானச்செறிவு.

Thursday, October 13, 2011


உறக்கம் அறுபட்ட
இரவின் துளியொன்றில்
உரக்கச் சத்தமிடும்
உள்ளத்தை மெளனிக்க
செவிகளில் திணிக்கிறேன்
இசைப் பதிவின்
இருபத்து மூன்றாம் பாடலை.
பதித்து வைத்த இசை
பதிய மறுக்கிறது
பட்டாம்பூச்சி மனதிற்குள்.
இருளின் ஒளியில்
உருளும் இரவு
விடியும் நொடிக்காக
காத்திருக்கிறேன்- ஒரு
மின்விசிறியும் நானும் மட்டும்
பேசிக் கொண்டிருக்கும்
இன்னுமொரு நடுநிசியில்.

Tuesday, October 11, 2011


உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
வேதனை தீரலாம்
வெறும் பனி மறையலாம்.
இனியெல்லாம் சுகமே!