Sunday, December 21, 2014

திருப்பாவை பாசுரம் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 6

என் உறக்கத்தையும் விழிப்பையும்
எண்ணம் யாவையும் உன்னிடம்
ஒப்புவித்து மலரடி சரணடைந்தேன்!
ஒப்பிலானே! கண் திறவாய்!

வஞ்சமில்லா பேரன்பை என்
நெஞ்சமெல்லாம் நிறைத்திட்டேன்!
வஞ்சனை செய்யாமல் நீ
வந்தெனை காத்திடுவாய்!

கடலினைக் கடைந்தெடுத்தது நல்
அமிழ்தினை எடுத்தவனே! என்
கவலைகள் களைந்தெடுத்து
அருள் நல்வாழ்வு தந்திடுவாய்!

கடும் பனி காலமிதில்
உன்னடியாரை கொடுங்கோடை
வாட்டல் நன்றோ! விரும்பிய
மாற்றம் தந்தெனை
ஏற்றம் செய்திடுவாய்!

படரும் இருள் விலக்கி
சுடரொளி தந்திடுவாய்-கொடும்
இடர்களை உடன் நீக்கி 
தடைகளைத் தகர்த்தெறிவாய்!

எதிர்த்து நிற்போரிடத்தில் எல்லாம்
எனக்காக பேசிடுவாய்!
வெருப்பிருக்கும் மனத்திலெல்லாம்
விருப்பம் மிகச் செய்வாய்!
பகைகளை அழித்தென் மீது
பரிவினை அளித்திடுவாய்!

நின்னை மறந்தறியேன்;
நின்னைப் பிரிந்தறியேன்;
நிம்மதி வேண்டி நின்
நிழலண்டி நிற்கின்றேன்;
நிமலனே! வரம் தருவாய்!
நிலம் துளிர்க்க அருள் புரிவாய்!
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
நல்வார்த்தை நாளை சொல்லிடுவாய்!

-காஞ்சனா




Saturday, December 20, 2014

திருப்பாவை பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
     தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
     தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
     தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.




எம் பாவை 5

பசும்பால் நெய்யாகி
பாங்குடனே குடமேகி
பரந்தாமன் விளக்கேற்றி
பரமபதம் அடைந்ததை 
கண்டீரோ எம்பாவாய்!

இன்று மலர்ந்தது
இவன் மலரடி சேரவென
வாசனின் பிருந்தாவனத்தை
வாச மலர்கள் நிறைத்ததை
கண்டீரோ எம்பாவாய்!

இருந்ததும் இருப்பதும்
இன்னும் இருக்கப் போவதும்;
உண்டதும் உண்ணப்பட்டதும்
உயிரென உண்டான யாவும்
உலகளந்த உத்தமனின்
உன்னதம் சரணம்! சரணம்!
என்று அடைக்கலமானதை
கண்டீரோ எம்பாவாய்!

உயிர்கள் அனைத்தையும்
உய்விக்கும் உத்தமனே
உன்னைச் சரணடைந்தேன்!
உன்னைச் சரணடைந்தேன்!
 உண்மைக்கும் பொய்க்கும்
உயர்வான இறைமைக்கும்
நீயே பொருளெனில்,
நீக்கமற என்னுள் 
நினைவாய் நிழலாய்
நித்திய ஒளியாய்
நம்பிக்கையாய் நிறைந்து
என்னை நித்தம் காப்பாய்!
என் சொல்லாவாய்;
செயலாவாய்;
யாதுமாவாய் என
பலவாறாய்
பாடி அழைத்தேன்!
திருப்பள்ளியெழுச்சி அவன்
திருச்செவிகள் தட்டி
எழுப்பியதை
கண்டீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




Friday, December 19, 2014

திருப்பாவை பாசுரம் 4
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.


எம் பாவை 4

கோலக் கருமணியை ;
கோகுலத்து கோமகனை;
ஆயர்பாடி அழகனை;
ஆழி சூழ் பரந்தாமனை
கொஞ்சித் துயிலெழுப்ப
கோபியரே வாரீரோ!

மதுரா நகர் குழலோசையில்
மயங்கிய குயில்கள் காண;
பத்மநாபன் சங்கொலியில்
பதுங்கிய பகைவர் காண;
பறவைகளும் விலங்கினமும்
பார்போற்றும் பாவலரும்
காத்துக் கிடக்கின்றனர்!

சொல்லிற் கினியனை
சுந்தர ரூபனை
வல்லமை பொருந்திய
வரத ராஜனை
மெல்லத் துயிலெழுப்ப
செல்வச் சிறுமியரே
வருவீர்காள்!

திருமகள் உறை திருமார்பன்
திருவேங்கடவன் கண் திறந்திடவே
கதிரவனும் காத்திருக்கின்றான்;
காலை மலர்ந்திடவே-எம்
கவலைகள் மறைந்திடவே;
அல்லல் நீங்கி
நல்லவை பிறக்கவே;
எல்லா நலன்களும்
எல்லையற்றுப் பெருகவே
எழில் கேசவனை எழுப்ப
வந்தேலோர்  எம்பாவாய்!

-காஞ்சனா

Thursday, December 18, 2014

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
     நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
     ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
     தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
     நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 3

அரங்கனை அழைக்கச் செல்வோம்;
ஆநிறையே பால் தாரீர்!
பரமனை விழிக்கச் செய்வோம்;
பைங்கிளிகளே பறந்து வாரீர்!
பரந்தாமன் தோள் சேர்வோம்;
பனிப்பூக்களே விரைந்து வாரீர்!
காலம் கனிந்து விட்டதென
ஞாலம் அளந்தவன் சொல்லியதை
ஞானியர்தாம் அறிவாரோ!
நானும் அறிந்திட்டேன்!
வாய் நிறைய மண்ணோடு
வான் பூமி காட்டியவன்
நம்மைக் காக்க வந்த
நந்தகோபன் குமரன்
நாம் பிழைக்க இன்று
நன்னாள் தந்தானே!
வாசலிலே கோலமிட்டு
வாசனைப்பூ நடுவில் வைத்து
வாசுதேவனை வணங்கிடவே
வாரீரோ எம் பாவாய்!
பாங்குடனே அவன்
புகழ் பாடீரோ!
எம் பாவாய்!

-காஞ்சனா

Wednesday, December 17, 2014

திருப்பாவை பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 2

மாநிலத்து மாந்தரே!
மாதவன் மனம் கனிய
யாம் செய்யும் தவம்
யாதெனக் கேளீர்!

ஊர் உறங்கும் நள்ளிரவில்
உறங்காமல் விழித்திருந்து,
உலகளந்தான் உளம் நனைய
உலராத கனவுகள் சுமந்து,
உற்ற நண்பனாய் என்
உயிர் காப்பாய் என்றவன்பால்
உருக்கிய உலோகமென நாளும்
உளமாற பணிந்திட்டோம்!
எம் பாவாய்!

மலரவன் சூட்டிக் கொள்ள
மயிலிறகுடன் மனம்தனையும்
மணம் வீசும் மலர்களையும்
மறக்காமல் அவன் வீட்டின்
மதிலோடு படர விட்டோம்;
எம் பாவாய்!

மாலே! மணிவண்ணா!
மலர்பாதம் பணிந்திட்டோம்! 
உணவு நீர் மறந்து
உன்னையே அனுதினமும்
நினைந்திட்டோம்! 
மார்கழியின் நாளனைத்தும்
மனமொன்றி தவமிருப்போம்;
யாதவர் குலக்கொழுந்து
மாதவன் மறை கேட்போம்;
மறைக்கும் முகில் விலக்கி
மாற்றங்கள் தந்தருள்வாய்!
மறவாது வந்தெம்மை
மாண்புறவே காத்தருள்வாய்!
என்றுருகி எந்நாளும்
நோன்பிருப்போம்!
எம் பாவாய்!

-காஞ்சனா





Tuesday, December 16, 2014

திருப்பாவை பாசுரம் 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

எம் பாவை 1

மலர்கள் இதழ் மலர்ந்தன;
மயில்கள் தோகை விரித்தன;
மார்கழி புலர்ந்த தென்று
மன்னனுக்குக் கூற வாரீர்!
எம் பாவாய்!

கார்முகில் வண்ணனவன்
கடன் மறந்து உறங்குகின்றான்;
காஞ்சனை மருகும் நிலை
கருத்தினில் கொண்டிலையோ;
கருணை விளக்கேற்றி அவள்
காரிருள் நீக்க அவன்
கண் விழிக்க வேண்டுமென
கானங்கள் பாடியே நம்
கண்ணனுக்குக் கூற வாரீர்!
எம் பாவாய்!

பனி விலகும் காலமிது;
பசும்பால் சுரக்கும் நேரமிது;
பட்ட மரங்கள் துளிர்க்க
பட்டுப் புல் பாய் விரிக்க
பளிச்சென எம் பயம் விலகி
பயிரெனவே தழைக்க
உறக்கம் கலைத்து
உற்சாகமாய் எழுந்திரு என
மணிவண்ணனுக்குக் கூறவாரீர்!
எம் பாவாய்!


-காஞ்சனா

Friday, November 7, 2014


வாழ்க்கை தன்னை
வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது!
இல்லையெனச் சொல்லவில்லை;
வருத்தம் தான்!
இருந்தாலும் என்ன?
வந்தது இல்லை என்றாகுமா?
சிந்தனை சதா கொத்தியெடுக்க
சில்லுசில்லாய் உடைந்து கிடக்கும்
என்னை, என் பிம்பத்தை
ஒன்று சேர்க்க முயல்கிறேன்!
சிதறிக் கிடக்கும்
எல்லா சில்களிலும்
எல்லா திசைகளிலும்
தெளிவாய் தெள்ளத் தெளிவாய்
வாழ்க்கை தன்னை
வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது!

அப்பாக்கள் உடன் இருக்கும்
தைரியத்தில்தான் அகிலத்தின்
அத்தனை மகள்களும்
அச்சமின்றி உறங்கப் 
போகிறார்கள் போலும்!

தந்தையும், தாயும்
அண்ணன் தம்பியுமாக
என் குடும்பம்
என்னைத் தன்
தோள்களில் தாங்குவதாலேயே
நான் பிழைத்திருக்கிறேன்
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்!

நான் உடைந்து போனேன்!
என் எல்லா சில்களிலும்
வெளிச்சச் சிதறல்களின்
வானவில் வில்லைகள்!

நான் உறைந்து போனேன்!
என் எல்லா அடுக்குகளிலும்
வெண்பனியின் அடியில் ஓடும்
தண்ணீரின் காலடிகள்!

சருகான போதும்
என் நாளைக்காக
நானே எருவானேன்!

பற்றியெரிந்த போதும்
சுற்றியும் ஒளி வளர்த்தேன்
மெழுகுவர்த்தியாய்!

தீக்கங்குகளின் அடிச்சாம்பலிலிருந்து
பீனிக்சாய் பிழைத்தெழ
ப்ரயத்தனப் படுகிறேன்!
அது சாத்தியப்படும்;
நிச்சயம் நடக்கும் என்று
எதுவோ சொல்கிறது!

தூரத்து தேவாலய மணியின்
நடுநிசி மணியோசை
சத்தமாய் ஒலிக்கிறது!
அசரீரியாகத் தொடர்கிறது
" பயப்படாதே! நான் உன்னுடன் இருக்கிறேன்!"
பைபிள் வசனம்!
எங்கோ துளிர்க்கிறது
நாளைக்கான நம்பிக்கை!