Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவாய் 13

உறக்கமும் கனவுகளுமாய் என்ன விளையாட்டு இது?
விழித்தெழும் நேரமிது! விக்கிரமா! கண் திறவாய்!
மாதர்கள் மாக்கோலமிட்டு மஞ்சள் மலர் மகுடமிட்டு
வாசல் அலங்கரித்து மகிழ்வுடனே அழைக்கும் குரல்
வாசனை எட்டவில்லையோ! காலம் மூன்றறிந்தவனே!
காக்கும் காலை இது! கார்வண்ணா! கண் திறவாய்!

அச்சமும் அய்யமும் எனை அண்டவிடலாமோ?
அச்சுதா! அபயம்! அபயம்! ஆருயிர் காத்திட வா!
ஆயிரம் அலைக்கரங்கள் அன்பாய் அழைக்கும் குரல்
ஆரவாரமாய் கேட்கவில்லையோ? அகிலனை அடைந்திலையோ!
மறை நான்கறிந்தவனே! மாதவா! மணிவண்ணா!
 மாந்தர் குலம் தழைக்க மணிவிழிகள் தாம் திறவாய்! 

இன்றாவது இன்றாவதென நன்று நாள் வளர்த்திட்டேன்;
கன்றினைத் தாய் விடலழகோ? கண்ணா! உயிர் வார்த்திட வா!
தொன்று பிறவியெல்லாம் உனையன்றோ சரணடைந்தேன்;
இன்னும் மனமின்றி ஏன் மெளனம் காக்கின்றாய்!
கண்ணை இமை காப்பது போல், கன்றைப் பசு காப்பது போல்
என்னைக் காக்கும் நேரமிது!கண்ணா! கண் திறவாய்!

காலை விடிந்தது காண்! கதிர் கரங்கள் நீண்டது காண்!
சோலை பூத்தது காண்! சொற்பாக்கள் இசைத்தது காண்!
தோளை அணைத்து நின்று தொண்டுகள் செய்திடவே
மாலை மலர்ந்தது காண்! மணம் வீசி நின்றது காண்!
பாலை துளிர்த்திடவே பார்வை ஒன்று ஈந்திடுவாய்!
நாளை எனத் தள்ளாமல் இன்றே நீ கண் திறவாய்!

-காஞ்சனா

Saturday, December 27, 2014

திருப்பாவை பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி
     நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
     பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
     மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
     அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்



எம் பாவை 12

நீயே என் மீட்பன் என்பதை நானறிவேன்;
நீயே என் தேவன் என்பதை நானறிவேன்;
நீயே என் தோழன் என்பதையும் நானறிவேன்;
நீ சொன்னாய் என்றே நிற்காமல் இதோ
நீந்திக் கொண்டிருக்கிறேன்- தீயாற்றிலிருந்து மீட்க
நீ எப்போது உன் கரம் நீட்டுவாய் என
நீண்ட இரவினில் காத்துக் கிடக்கிறேன்!
வைகுந்தவாசா! திருமகள் நேசா!
மையிட்ட விழிகள் திறந்தே எனக்கு
மழை அருள்வாய்! பிழைத்துக் கொள்கிறேன்!

-காஞ்சனா

Friday, December 26, 2014

திருப்பாவை பாசுரம் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
     செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
     புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
     முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
     எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!



எம் பாவை 11

சகா என்றழைத்தால் சடுதியில் வருவேன் என்றாய்;
மகாதேவா! நாள் பத்து கடந்த பின்னும் இன்னும்
மெளனம் கலைத்தாயில்லை-சகியெனச் சொன்னது
சத்தியம்தானா எனச் சொல் என் சகா!

நீ அணைத்த தோள்களில் நிம்மதி தேடுகின்றேன்;
தீயெனச் சுடும் வாழ்க்கையை மாற்ற இன்றேனும்
நீ வர வேண்டும் என்றே வேண்டுகின்றேன்;
இருள் போதும் கண்ணா! இந்த இரவை 
விடிய வைக்க இப்போதே விரைந்து வா!  
எனக் கூவும் குரல் கேட்கலையோ!
அவன் காதிற் சொல்லேலோர் எம்பாவாய்!

-காஞ்சனா

Thursday, December 25, 2014

திருப்பாவை பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
     தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!



எம் பாவை 10

நீ கிருக்ஷ்ணனோ இல்லை கிறிஸ்துவோ!
ஈசனோ அல்லது இயேசுவோ;
மரியம், மாரி அல்லது மேரி
நாமம் எதுவாகினும் நலம் தரும்
நல்மேய்ப்பன் ஒருவனே என நம்புகிறேன்
வழி தவறிய ஆடாய் விழி பிதுங்கி
நிற்கின்றேனே! நிமலனே! தேவ மைந்தா!
நிழல் தனை நல்கிடுவாய்! தேவகி நந்தா!
சாயியும் நீ; மாயியும் நீ;
சகலமும் நீ என்றிருக்க
மாயங்கள் இன்னும் எதற்கு?
காயங்கள் துடைத்தெறிந்து 
தூயனே எனைக் காத்தருள்வாய்!
கிருபை செய் பரம்பொருளே!

நீ பேசும் பேச்சன்றோ என்
தீவினைகள் நீக்கிப் போடும்!
நீ தரும் நற்செய்தியன்றோ என்
வீடு காத்து நிம்மதி தரும்!
கோவிந்தா! கோபாலா!
கோமகனே! நல் மாற்றம் தா!
எனக் கோடி முறை அழைக்கின்றேன்
செவி மடுத்தேலோர் எம்பாவாய்!

-காஞ்சனா

Wednesday, December 24, 2014

திருப்பாவை பாசுரம் 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 9

வானே நிறம் கொண்ட வண்டார்குழலோனே உனைத்
தானே சரண்புகுந்தேன் -தாயெனக் காத்திடுவாய்!
தேனே, திரவியமே, தீங்குழலின் நாயகனே
வீணே தாமதம் ஏன்? சேயனக்கருள் புரிவாய்!
அபயம் அளித்திடுவாய்! ஆனந்தம் தந்திடுவாய்!
அல்லல்கள் நீக்கி நல்லன நல்கிடுவாய்!

நெஞ்சம் உறங்குதில்லை; நீள் கனவு ஏதுமில்லை;
வஞ்சம் நீக்கியே வந்து வசந்தம் தந்திடுவாய்.
நஞ்சாய் நகர்கிறது நாழிகை ஒவ்வொன்றும்-அதை
பஞ்சாய் மாற்றி எனக்கெனப் பரிவுறப் பேசிடுவாய்!
நாளை நாளையென நம்பி உனைச்சேர்ந்தேன்
வேலையெடுத்து என் வேதனைகள் அகற்றிடுவாய்!

கடுஞ்சோதனைக் காலமெல்லாம் என்னை உன்
கரம் சுமந்து காத்திட்டாய்-இந்த
வேதனைகள் போதும் ஐயா! இனி
வெண்பனியாய் குளிர்ந்திடுவாய்-எனக்கொரு
நன்மை செய்திடுவாய்; நற்செய்தி சொல்லிடுவாய்; 
நன்றி சொல்ல வைத்திடுவாய் என மனம் தனை 
எடுத்துச் சொல்லிப் பாடீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




Tuesday, December 23, 2014

திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.



எம் பாவை 8

எவ்வேலை இருந்த போதும் இது
என்னைக் காக்கும் நேரமன்றோ!
இவ்வேளை விரைந்து வந்து உன்
கண்ணென எனைக் காப்பாய் எனச்
சூடிக் கொடுத்த மகள்
பாடி அழைத்திட்டேன் பரம்பொருளை!
சூடிக் கொடுத்த மலர் வாடும்முன்
ஓடி வந்து கோதையைக் காத்தருள்வாய்
என்றவனைப் பாடியழைக்கும் விதம்
அறிந்தேலோர் எம்பாவாய்!

- காஞ்சனா

Monday, December 22, 2014

திருப்பாவை பாசுரம் 7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.


எம் பாவை 7

மாயவா! மதுசூதனா! மாதவா!மணிவண்ணா!
நேயனே! சாரங்கா! இரட்சிக்க வந்திடுவாய்!
சேய்காக்கும் நேரமிது என்றறிந்தாய் எனினும்
வாய் மூடி மெளனம் ஏன்? வாசனே!
வந்தருள்வாய் எனக்  கூவியழைத்தும் இன்னும்
அவன் வரும் ஓசை கேட்கவில்லை! 
கண்ணில் உறக்கமின்றி கண்ணன் வரக்
காத்திருக்கிறேன்- அவசரமாய் வரச்சொல்லி
அவனிடம் அழுந்தச் சொல்வீரோ எம்பாவாய்!
-காஞ்சனா