Wednesday, May 30, 2012



ஒரு பேசாத வார்த்தையின்
பிரியத்தை பொதிந்து வைத்துள்ளது
உன் புன்னகையின் ஈரம்!

சொன்னாலும் சொல்லாமல் போனாலும்
சுவையாகத்தான் இருக்கிறது ஏதோ
ஒரு சுருதி பற்றி
சுழன்று கொண்டிருக்கும் விளங்காத
உன் பார்வையின் சங்கீதம்!

புரியாத மொழியில் நீ
சொல்லும் கவிதைகள் எல்லாம்
புதிதாக்கி விடுகின்றன என்
விடியல் பொழுதுகளை!

அழுக்கான என் அகந்தையை
அழகாகத் துடைத்துப் போகிறாய்
கடவுளின் கரம் பற்றி
தவழ்ந்து கொண்டிருக்கும் உன்
தளிர் மழலை விரல்களால்!

என் இருண்ட மனதின்
அர்த்தமில்லா அழுகைகளையும்
அகங்கார ஆர்ப்பாட்டங்களையும்- பெரும்
ஆரவாரக் கூச்சல்களையும் கூட
எந்தச் சலனமும் இன்றி
வேடிக்கை பார்க்கும் உன்
வெள்ளை விழிகளில்
வெளிச்சமாகத் தெரிகிறார்
நான் எங்கெங்கோ
தேடிக் கொண்டிருக்கும் இறைவன்!!

அன்று சொன்னவன் வார்த்தைகள்
இன்று புரிகின்றன!
தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே! வேறெங்கே?

Tuesday, May 29, 2012

N yet another century! thats the hundredth post in enakku piditha padal @ karumbuvil.blogspot,in

Thursday, May 24, 2012

பயணங்கள் முடிவதில்லை-IV


அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த  பொழுதில், மறந்திருந்த மாரிமுத்து அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான். ஆனால் இதில் நான் கண்டுணர்ந்தது வேறு ஒரு பாடம்!

படிப்பறிவு என்று நாம் சொல்லும் ஒன்று உண்மையிலேயே உலக அறிவு தானா? நாம் உண்ணும் உணவிலிருந்து, உடுக்கும் உடையிலிருந்து, நம்மைச் சுத்தமாக்கி வைக்கும் கழிவு வரை நாம் கவனிக்கிறோமா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நகர வாழ்க்கை, வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கி விட்டதோ என்று கூடத் தோன்றுகிறது.

உணவு முறையை எடுத்துக் கொள்வோம். என்றோ தயார் செய்யப்பட்டு, சவ்வுத் தாள்களிலோ, ப்ளாஸ்டிக்  அடைப்பான்களிலோ, நீண்ட நாள் கெடாமல் இருக்க கலக்கப் படும் வேதிப் பொருளுடன்(PRESERVATIVE) கிடைக்கும் INSTANT FOOD எனப்படும் உடனடி உணவு வகைகள், வாயையும் வயிற்றையும் அடைத்து, வயதையும் அடைக்கும் அவசர கதி அரைவேக்காட்டு உணவு, அல்லது ஒரு வாரத்திற்குச் சேர்த்து அரைத்து குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்த புளித்த மாவில் செய்து சாப்பிடும் இட்லி மற்றும் தோசை தான், இன்று பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாகி விட்டது. காலையில் கெல்லாக்ஸ், மதியம் பர்கர் மற்றும் பிங்கர் சிப்ஸ், இரவு (நள்ளிரவு) பீட்ஸா, கோக், ப்ரட் பட்டர் ஜாம் என்ற புதிய உணவு முறை ஒன்றும் இன்று உருவாகியுள்ளது. இவற்றிற்கு பெயர் ஒரு காலத்தில் JUNK FOODS என்று கேள்விப் பட்டதாக நினைவு. இவை எந்த காலத்தில் செரிமானம் ஆவது?

சுட்டெரிக்கும் நம் சீதோக்ஷ்ண நிலையில், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகள் கிட்டத் தட்ட காணாமலேயே போய் விட்டன. நான் உண்டிருந்த கொழுப்புச் சத்து குறைவான, களி மற்றும் கூழை, உடனடியாகக் கொழுப்பைக் கூட்டும் பனிக்கூழ் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. பன நுங்கையும், இளநீரையும் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பழச் சாறுகளும் , நீராகாரத்தையும், நீர் மோரையும் குப்பிகளில் அடைத்த சக்கரை நீரில் வாயு செலுத்தப் பட்ட குளிர் பானங்களும், கேழ்வரகு அடையையும், பொறி உருண்டையையும், வற்றல்களையும் சிப்ஸ், எண்ணெயில் பொரித்த, உப்பு காரம் அதிகம் சேர்க்கப் பட்ட நொறுக்குத் தீனிகளும் கபளிகரம் செய்து விட்டன. விளைவு தேசிய வியாதிகளாகிவிட்ட நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும், அதன் பொருட்டு குடும்பம் குடும்பமாக நாம் உணவுடன் சேர்த்து உண்ணும் வண்ணமயமான மாத்திரைகளும். எங்கே செல்கிறோம் எனப் புரியவில்லை.

அவை மட்டுமன்றி, வேறு என்ன நோய் நம்மைத் தாக்கி இருக்கிறது என்ற சராசரி மனிதனுக்குத் தெரிய வேண்டிய பட்டறிவைத் தராத படிப்பறிவு எதற்கு எனத் தெரியாமல் தான் கேட்கிறேன். தலைவலி, சளி, காய்ச்சல் எனச் சர்வ நோய்களுக்கும் பாராசிட்டமால் என்ற சர்வ ரோக நிவாரணி ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். அவ்வப்போது விற்பனை நிறுவனத்தார் மாற்றும் பெயரை மட்டும் சொல்லி விட்டு ஒரே மாத்திரையிலேயே எல்லா நிவாரணங்களையும் பெறுவதென்றால் எப்படி?

சரி! மஞ்சள் காமாலையைப் பற்றிப் பார்ப்போம்.  சாதாரணமாக, மஞ்சளாக சிறுநீர் கழிக்கையில், ஒரு சாமானிய மனிதன் என்ன செய்கிறான்? முதல் நாள் சூடாக இருக்கலாம் என நினைக்கலாம். அடுத்த நாள், மருத்துவரிடம் போகிறானோ இல்லையோ, குறைந்த பட்சம், சோறு கொண்ட தானறிந்த சோதனையையாவது செய்து பார்க்க வேண்டாமா? கட்டுப்பெட்டிகள், பழமைவாதிகள், பட்டிக்காட்டான்கள் என்று நகைப்புடன் கடந்து போகும் எளிய வாழ்க்கை வாழும் கிராமத்தினருக்கு இந்த அடிப்படை பட்டறிவு இருக்கிறது. அங்கேயும் நீரிழிவு நோய் வந்து விட்டது. எனினும் தங்கள் தினசரி வாழ்க்கையில் தங்கள் உடல் எவ்வாறு இருக்கும் என்பதையும் மாற்றங்கள் நிகழ்வதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் நிகழ் கால பட்டறிவும் கவனமும் அவர்களிடம் நிறைய உள்ளது.

ஆனால் நிறைய படித்து விட்டு, நல்ல வேலைகளில், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு, தங்கள் உடல் மீது அக்கறை குறைந்து விட்டதை உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிறு மாத்திரையை விழுங்கி விட்டு வேலைக்குப் போய்விடும் மனோபாவம், கவலையளிக்கிறது. மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் வந்தவருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஆனால், சூட்டினாலோ, வேலைப் பளுவினாலோ இருக்கலாம் எனக் கடந்து போயிருப்பார். அல்லது ஒரு நாள், இரு நாள் பார்த்து விட்டு, அடுத்து வந்த நாட்களில், அதையே சகஜ நிலையாக நினைக்கும் ஆபத்தான மன நிலைக்குச் சென்றிருக்கலாம். அல்லது பெரிதாக ஒன்றும் இருக்காது. இதற்கெல்லாம் எதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தி இருக்கலாம். அல்லது குடும்ப விழாக்கள், பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற முக்கிய செலவுகள் இருக்க, இப்பொழுதென்ன மருத்துவத்திற்கு அவசரம்? கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்று நினைத்திருக்கலாம். அல்லது இலக்கு நிர்ணயக்கப் பட்ட இன்றைய தொழில் துறையில், உடலைக் கூர்ந்து நோக்க நேரமின்றி, அவகாசமின்றி, விடுமுறையின்றி, கவனிக்கப் படாமலேயே கடந்து போயிருக்கலாம்.

ஆனால், இந்த இருக்கலாம்கள் எல்லாம், எந்த நிலையிலும் நோயின் தன்மையைக் குறைக்கப் போவதில்லை. மாறாக தீவிரப் படுத்தி, சிக்கல் மேல் சிக்கல் சேர்த்து, மருத்துவ விஞ்ஞானத்தைத் தோற்கடிக்க நாமே செய்து கொள்ளும் ஏற்பாடுகள் என்று, எப்பொழுது நாம் உனர்ந்து கொள்ளப் போகிறோம்.?

ஆரம்ப காலத்தில் கவனிக்காமல் விட்டு விட்டு, இறுதிக் கட்டத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்த பின்,  மருத்துவர்களைக் குறை கூறுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

வேலை வேண்டும்தான். வாழ்க்கைக்குப் பணம் சம்பாதிப்பதும், கடின உழைப்பும் முக்கியம்தான். நான்  இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சுவர்  இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? கருவியைத் தொலைத்துவிட்டு காரியம் நிகழ்த்துவதானால் எப்படி? உடல் முக்கியம். உங்கள் குடும்பத்திற்கு உங்கள் உயிர் முக்கியம். கவனிப்பீர்களா நண்பர்களே!?!

சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!

பயணங்கள் முடிவதில்லை-III


அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்?

இந்த கேள்வி எழுந்து ஒரு முழு இரவும் பகலும் கடந்து விட்டன. எனினும் விடை மட்டும் கிட்டிய பாடில்லை. இந்த மனுக்ஷன் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை! மனசே ரொம்ப பேஜாரா இருக்கு! என்று நேற்று மாலையில், என் அலுவலக ஊழியர் கூறுகையில், ஏன்? யாருக்கு என்ன ஆச்சு சண்முகம் என்றேன். அந்த ரயில்வே கேட் கீப்பர் மேடம்! பெருசா வெள்ளையா மீசை வைச்சுக் கிட்டு வருவாரே! பெயர் மறந்து போச்சு! உங்க கிட்ட வீட்டு லோன் வாங்குவதைப் பற்றிக் கூட விசாரிச்சாரே! அவர்தான் மேடம்! ரயில்வே ஸ்டேக்ஷன்ல போஸ்டர் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். ஞாயிற்றுக்கிழமை ராத்திரி தூக்கு போட்டுக் கிட்டாராம் மேடம்! அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்றார்!

யார் மணியா? என்றேன். அவர் இல்லை மேடம்! உங்களுக்கு ஞாபகம் வரல! அந்த பென்சன் லோன், அதான் அந்த நவமணிக்குக் கூட கையெழுத்து போட்டாரே! அவர்தான் மேடம்! என்றார். முகம் லேசாக மனதில் நிழலாடியது. தவறாக நினைத்து விடக் கூடாது என்று தலையைச் சிலுப்பிக் கொண்டேன், பாவம்! என்ன பிரச்சனையோ? என்றவாறு!

பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள் மேல் எனக்கு அனுதாபமோ, அபிமானமோ வந்ததில்லை, வருவதில்லை, என் பள்ளித் தோழன் அறிவொளி உட்பட. அவர்கள் கோழைகள் மற்றும் சமூக துரோகிகள் என்பேன். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் தற்கொலைகள், கன நேர முடிவில் ஒரு நீண்ட அற்புதமான வாழ்வைப் பொசுக்கி விடுகின்றன.  மானம் சம்பந்தப் பட்டவையாக கருதப் படுகின்ற அவை, கை, கால், மூளை எல்லாம் சரியாக இருப்பவர்களால்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஊனமுற்றவர்கள் கிடைத்த வாழ்வை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். எல்லாம் இருந்தால் அதன் அருமை தெரிவதில்லயோ! போதாததற்கு மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் போல என்று ஒன்றுக்கும் உதவாத உவமை வேறு! செய்த தவறுகளுக்கான விளைவுகளை எதிர்நோக்க முடியாமல் அல்லது வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் செய்யும் மற்றொரு தவறு அது! பிரச்சனைகளின் வேரை ஆராயாமல், முட்களைப் பார்த்து மிரண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆனால் அற்பமே ஆனாலும் இந்த அதிக பட்ச தண்டனை அதிகம்தான். யோசனையுடன் வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். பேருந்து நிறுத்தத்தில் இருந்த வீட்டு மனை விற்பனை விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்த போஸ்டரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டேன். ஞாயிறு இரவு சுமார் 11.30 மணியளவில், திரு. அருள் நித்யானந்தம் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது……. என்று தொடர்ந்து இங்ஙனம் என்று அவரது மனைவி, மக்கள் மற்றும் மருமக்கள் பெயர்கள் இடப்பட்டிருந்தன. இவரா? அடப்பாவமே! ஆனால் ஏன்? ஏன்? என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்தவாறிருந்தன.

அதற்குப் பின் என் பேச்சு நின்று போயிருந்ததை, மற்றவர்கள் சுட்டிக் காட்டிய பிறகுதான் உணர முடிந்தது. வேலை அதிகமா மேடம்? ரொம்ப சோர்வா இருக்கீங்க என்றவர்களுக்கு நான் சாதாரணமாக உதிர்க்கும் புன்னகையைக் கூட உதிர்க்க முடியவில்லை. தொடர்ந்த பேருந்துப் பயணத்திலும், இரவு இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போதும் கூட என்னால் சகஜ நிலைக்கு வர இயலவில்லை. வேலை இடத்தில் நடப்பவற்றை மூளைக்கு மட்டும் சொல்லி விட்டு, மனதிற்குள் நுழையத் தடை போடும் வித்தையை இன்னும் நான் கற்றுக் கொள்ளவில்லை!

ஆனால், இரவு ஒன்பதரை மணியளவில் மண்டல அலுவலகத்திலிருந்து வந்த மறுதின மிகச் சிறு கிளைத் திறப்பு விழாவுக்கான, ரெடி பண்ணிடுங்கம்மா! நாங்கள் 8.45க்கு கிளம்பிடுவோம். நீங்க ஆபீஸ்ல தனியா இருக்கிறதுனால 9-9.30க்குள்ள முடிச்சுட்டு, உங்களை ஆபீஸ்ல் ட்ராப் பண்ணிடலாம் என்ற ஆர்டரைக் கேட்டவுடன் சகலமும் மறந்து போனது. 9.40க்கு ஊராட்சி மன்றத் தலைவர் பேச ஆரம்பித்து, இப்ப சொன்னா எப்படி மேடம்? என்று ஆரம்பித்த உரையாடலை சரிங்க மேடம்! காலையில செய்துடலாம்! என்று முடித்தபோது இரவு 10.00 மணி.

அதற்குப் பிறகு அப்பாவிடம் புலம்பினால், உன்னால முடியும்னு தானம்மா இவ்வளவு SHORT NOTICE ல நம்பிக்கையோட சொல்றாங்க. வேற ஆபீஸர் இல்ல. RDO ON LEAVE , தனியா நீதான் தயார் செய்யனும்னு அவங்களுக்கும் தெரியும். DGM VISIT போது சொதப்பினால் அது உனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் கெட்ட பெயர் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி, நீ செய்வன்னு அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதால தான், உன்னைச் செய்யச் சொல்றாங்க. நல்லா பண்ணலாம்மா! இப்போ நிம்மதியாத் தூங்கு! காலையில் எல்லாம் நன்றாகச் செய்து விடலாம் என்று அப்பா கொடுத்த உற்சாக டானிக்குடன் உறங்கப் போனேன்.

காலையில் எழுந்ததிலிலிருந்து அலைபேசியும் கையுமாக எங்கெங்கும் அலைந்து கொண்டிருந்த போது அந்த போஸ்டரைக் கடந்து சென்றதாக நினைவில்லை. அதே இடத்தில் இருந்தும்கூட, வேலை என் கவனத்தை திசை திருப்பி விட்டிருந்தது. விழாவை வெற்றிகரமாக முடித்து, காலைக்கும் மதியத்திற்குமாக சேர்த்து மதியம் மூன்று மணிக்கு சாப்பிட்டு, அலுவலக வேலை நேரம் முடித்து, மாலை 7.30 மணிக்கு, பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மீண்டும் திரு. அருள் நித்யானந்தத்தின் போஸ்டர். இம்முறை அருள் நித்யானந்தம் ஏன் அமரரானார் என்ற கேள்வி எழவில்லை. மாறாக மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்தது. ஆமாம் யார் இந்த மாரிமுத்து?

இது நடந்தது இந்த மாதத் தொடக்கத்தில். ஒரு வழக்கமான கூட்டம் மிகுந்த பென்க்ஷன் தினம். கெளன்டரின் சூடான காலைப் பொழுது. மேடம்! என்ற குரலுக்கு தலை உயர்த்தி, சொல்லுங்க என்றேன் நான். நான் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து வருகிறேன். பென்க்ஷனர் மாரிமுத்துவோட ப்ரதர். சரி! 
அவரால மேல ஏறி வந்து பென்க்ஷன் வாங்க முடியாது. அதனால கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டோம். கோணல் மானலான கையெழுத்தைப் பார்த்து, வங்கி அதிகாரிகளுக்கேயான சந்தேகம் எழ, அதெப்படிங்க! வேண்டுமானால் எங்கள் பணியாளர்களை அனுப்பி கையெழுத்து பெறுவது தான் முறை! என்றவாறு பாஸ்புக்கை வாங்கினேன். முதியோர் ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, நான் அறிந்து, வேறு கைகளுக்குப் போய் விடக் கூடாதென்பதில் சற்று கவனத்துடன் தான் செயல்பட்டு வருகிறேன். பாஸ்புக்கைப் பிரித்ததும் இடறியது.

கடவுளே! இவரா! வாய்ப்பே இல்லை! ஏதேனும் ஏமாற்றுகிறார்களா? என்று சட்டென சிந்தனை எழுகிறது. சில மாதங்களாக அவரைக் காணாதது அப்பொழுதுதான் நெருடியது. ஓய்வூதியத்திற்காகவோ, அது சார்ந்த கடனுக்காகவோ, பேரக்குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு துவங்கவோ எதற்காகவும், எப்பொழுது வங்கிக்கு வந்தாலும், என்னிடம் நேராக வந்து பேசிவிட்டு, வேலையை முடித்துக் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். ஒரு ராணுவ வீரராகவோ, ரயில்வே காவலராகவோ அவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. வெகு செவ்வனே பராமரிக்கப் பட்ட ஆரோக்கியமான உடம்புக்காரர். ஆனால் சில மாதங்களாக ஏன் அவர் வரவில்லை? அவருக்கு என்ன ஆயிற்று? வினவுகிறேன்

மஞ்சள் காமாலை என்று மருத்துவ பரிசோதனைக்குச் சென்றோம். முற்றி விட்டது என்று மருத்துவமனையில் அனுமதித்துச் சோதனை செய்தார்கள். வயிற்றில் கட்டி, சோதனையில் புற்று நோய் என்று தெரிய வந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலேயே கைவிரித்துவிட்டார்கள். ஆர்மி ஆஸ்பிட்டல், க்ஷீபா ஆஸ்பிட்டல் எல்லாம் கைவிரித்து ஜி.எச்சிற்கு எடுத்துச் செல்லச் சொன்னார்கள். ஜி.எச்சில் மருத்துவர்கள், இது முற்றிய நிலை, நீங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் என்றார், மாரிமுத்துவின் சகோதரர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர்.

கூட்டத்தை ஒதுக்கி விட்டு, கையில் பாஸ்புக்குடனும், மூர்த்தி வாங்க என்று என் அலுவலக ஊழியரிடம் சொல்லி விட்டு, பணவிடைச்சீட்டுடன் கீழே விடு விடென்று இறங்கினேன். அவரும் உடன் மற்றொரு இளைஞனும் என்னைப் பின் தொடர்ந்தனர். வங்கியின் வாசலில் நின்றிருந்த க்ஷேர் ஆட்டோவில் வேறு யாரோ அமர்ந்திருந்தனர். திரும்பி எங்கே சார் என்றேன்.

இங்கே வாங்க மேடம்! என்று ஒரு சிறிய ரக, காய்கறி மற்றும் சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பின்கதவைத் திறந்தார். அதிர்ந்தே போனேன் நான். அவரே தான். அத்தனை கட்டுக் கோப்பாகப் பார்த்த அதே பெரியவர், உடலெல்லாம் மஞ்சள் ஊறி, வயிறு உப்பி, நினைவற்ற நிலையில் கண்மூடிக் கிடந்தார். தலைமாட்டில் அவரது மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தார். மூச்சுத் திணறுவதுபோல் திணறிப் போனேன். மனதை ஏதொ பிசைய, என்னங்க இது? எப்படி இவ்வளவு சீரியசாக விட்டீங்க? மூர்த்தி அவரோட கைரேகை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட படவென பேசி முடித்தேன். என் பதவியை என் மூளை நினைவுறுத்தினாலும், என் மனம் என்னைப் பதற வைத்து விட்டது. என் பதற்றத்தைப் பார்த்து விட்டு, என்ன மேடம்! என்ன மேடம்! என்று ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஒன்றுமில்லை! அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை விலக்கினேன்.

அழுதுகொண்டிருந்த அவர் மனையிடம், மனதைத் தளர விடாதீர்கள் அம்மா! கடவுளை நம்புங்கள்! மனிதனால் ஆகாத அதிசயத்தை, மருத்துவத்தை கடவுள் நிகழ்த்துவார். நானும் வேண்டிக் கொள்கிறேன். அவர் நிச்சயம் குணமாகி விடுவார் என்றேன். மூளை இது அவரின் இறுதி நிலை என்றது. மனமோ, கடவுளே! அவரைக் காப்பாற்று! என்றது. அடுத்த மாதம் எப்படி மேடம்? அவரை அழைத்து வந்துதான் ஓய்வூதியம் வாங்க வேண்டுமா? என்றவரிடம், வேண்டாங்க! வேறு யாராவது வாருங்கள்! நான் என் அலுவலகத்தில் இருந்து யாரையாவது உடன் அனுப்பி கைரேகை பெற்றுக் கொள்கிறேன் என்றேன். எந்த நம்பிக்கையில் அவ்வாறு கூறினேன் என்று இந்த நிமிடம் வரையில் எனக்குத் தெரியவில்லை, நன்றி சொன்னவர்களுக்கு பதில் நன்றி சொல்லி விட்டு, மனம் நிறைய பாரத்துடன் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர். என் மனம் மட்டும், அந்த வண்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு நகர மறுத்து அடம்பிடித்தது. அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் புலம்பித் தீர்த்து விட்டேன். நல்ல வேளையாக மாலையில் மண்டல அலுவலகத்திலிருந்து திடீர் REVIEW MEETINGகிற்கு அழைக்க, ஜி.ஆர்.டியின் மூன்று மணி நேர ரெவ்யூ மனதை மாற்றியது.

மறுநாள் மாலை கவிந்த நேரத்தில், பேருந்தில் ஈஞ்சம்பாக்கம் கடக்கையில், யாரையோ அடக்கம் செய்து விட்டு, சாலையோர மரத்தடியில், செலவுப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். சட்டென மாரிமுத்துவாக இருக்குமோ என்று மூளைக்குள் பொறி. சும்மா இரு! அவராக இருக்காது. நன்றாக இருக்கட்டும் என்றது மனம். இன்னும் ஏன் அவருக்கு கக்ஷ்டம். போதுமே! ஓய்வு பெறட்டும் என்ற மூளையைக் கடைசி வரை பேசவே விடவில்லை மனம். அதற்குப் பின் நாட்கள் ஓடி விட்டன. மறந்திருந்த  மாரிமுத்து அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான்.

கடைசியில் அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுதான் மிச்சம். ஓய்வூதியம் பெற மீண்டும் திரு. மாரிமுத்து வருவார் என்ற நம்பிக்கையுடன், ஒரு வேண்டுதலைச் சுமக்கும் மனதுடன், அடுத்த மாதத்தின், முதல் வாரத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை. அவர் வருவார்!!!

சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!

Tuesday, May 22, 2012



ஒரு வெற்றுத் தாளின்
பக்கம் போலத்தான்
மூடி வைக்கிறேன்,
இந்த இரவையும்!

என் கைகளினின்றும்
நழுவி ஓடுகின்றது
காலம்!

என் கால்களினின்றும்
நழுவி ஓடுகின்றன
சாலைகள்!

என் கண்களினின்றும்
நழுவி ஓடுகின்றன
காட்சிகள்!

ஏனோ இவை
யாவற்றுக்கும் ஏதுமில்லை
சாட்சிகள்!

ஒரு வெற்றுத் தாளின்
பக்கம் போலத்தான்
மூடி வைக்கிறேன்,
இந்த இரவையும்!

Saturday, May 19, 2012

Remembering 18.05 @ Mullivaikkaal



ஆறாத வடுக்கள்;
அழியாத சுவடுகள்;
மாறாத காயங்கள்;
மறவாத நினைவுகள்!

ஆன்டுகள் மூன்று
அவசரமாகக் கடந்த பின்னும்
அப்படியேதான் இருக்கின்றது
அவர்களின் நாட்காட்டி!

கேலியான தீர்மானங்கள்;
போலியான அறிக்கைகள்;
அன்னை தேசமே
அன்னியமான பின்-
அனைத்து நாடுகளுக்கும்
அவர்கள் அகதிகள்தானே!

புத்தனும் தூங்கிப் போனான்
புதைகுழியின் பிணங்களுடன்-
உதிர்ந்த உயிர்களோடும்,
உலர்ந்த உணர்வுகளோடும்!

மடிந்தவை மட்டுமே
பிணங்களாகா!
மரிக்காத உடல்கள் தரிக்கும்
மனங்கள் கூடத்தான் என
மெதுவாகப் புரிகிறது!

பார்த்துப் பதறினாலும்
பாராத பாசாங்குடன்
பாவங்கள் சுமந்து
சிலுவை சேர்கிறோம்!

என் இனம்
வாழ்ந்தால் போதும்!
என் பிள்ளை
வளர்ந்தால் போதும்!
என் வயிறு
நிறைந்தால் போதும்!
உன் வலி
உனக்குத் தானே என
உறக்கத்தில் நடைபோடும்
உனக்கும் எனக்கும்
புரிந்த உண்மை,
பாவிகளை இரட்சிக்க
வந்த அந்த
பரமனுக்கும் தெரியும்-
இதற்கெல்லாம் இனி
பாவ மன்னிப்பே
இல்லை என!

வெட்கித் தலைகுனிகிறேன்
மீண்டும் ஒரு முறை-
மனிதனாகப் பிறந்ததற்காக!
மனிதம் போதித்த
மகாத்மாவின் தேசத்தில்
மனம் ஒளித்து
செவிடாக வாழ்வதற்காக!

முள்ளி வாய்க்காலில்
முடியும் முன்னர்
முதல் இட்டுப் போன
அத்தனை தமிழர்களுக்கும்
முதல் வணக்கங்கள்!
மாண்ட இடத்திலிருந்தே
மீண்டு வரும்
வட்டியுடன் மீண்டும்
வற்றாத தமிழினம்!!

Sunday, May 6, 2012

பயணங்கள் முடிவதில்லை!!!-Part 2


பேருந்தில் வீட்டுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன், ஆனந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. பேருந்து ஓட்டுனர் வண்டியை சாலையின் குறுக்கே திருப்பி திடீரென ப்ரேக் போட்டதில், உலுக்கி எழுப்பியது போல் உறக்கம் கலைந்தது.

எட்டிப் பார்த்ததில் பேருந்தின் பக்க வாட்டில் இரு சக்கர வாகனத்தில் காலை நடைப் பயிற்சிக்கான உடையுடன் இரண்டு இளைஞர்கள், லேசான பதற்றத்துடன் பேருந்தைக் கடந்து நட்ட நடு சாலையில் நிற்பது தெரிந்தது. ஓர் விபத்து தவிர்க்கப் பட்டிருப்பது அப்பட்டமாக விளங்கியது. பயம் கண்ணில் இருந்து விலகாத நிலையிலேயே ஓர் இளைஞன், வண்டியிலிருந்து இறங்கினான். என்னப்பா இது? எனக் கேட்ட ஓட்டுனரின் குரலில் கோபம் இல்லை, எரிச்சல் இல்லை,. மாறாக பரிவும் பக்குவமான விசாரிப்பும் இருந்தது. “கறிண்ணா!” என்றான் இளைஞன்.  அப்பொழுதுதான் கவனித்தேன். சாலையின் நடுவில் பைக் பக்கத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு கருப்பு பாலித்தீன் பைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்து கிடந்தன. பேருந்து ஓட்டுனர் சட்டென்று கூறினார். “ கொஞ்சம் ஏமாந்து விட்டிருந்தா நீங்களே கறியாகி இருப்பீங்க! பார்த்துப் போங்கப்பா! “ என்று. அவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை எனப் பொட்டில் அடித்தாற்போல பளீரெனப் புரிந்தது. .

அழகான இந்தக் காலைப் பொழுது, எல்லோருக்கும் ஒன்று போல் தான் விடிகிறது. அதை அழகாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது நம் கையில் தான் இருக்கிறது. பேருந்து ஓட்டுனருக்கு வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். அவரை நம்பி, அந்த இளைஞர்களின் வயதில் மகனோ மகளோ இருக்கக் கூடும். அவர்களுக்காக மட்டுமல்லாமல் இந்தப் பேருந்தில் பயணிக்கும் ஐம்பத்தேழு பேருக்காகவும் அவர் பேருந்தை கவனமாக ஓட்ட வேண்டி இருக்கிறது. அதை அவர் செவ்வனே செய்கிறார். காயத்தையோ உயிரிழப்பையோ ஏற்படுத்தி இருக்கக் கூடிய ஒரு விபத்தையும் திறம் பட தவிர்த்துள்ளார்.

ஆனால் வாழ்க்கைக்குள் இப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்துள்ள இளைஞர்களுக்கு வேகம் மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொள்ள இப்படி ஒரு சம்பவம், அசம்பாவிதமாகி இருக்கக் கூடிய ஒரு சம்பவம் தேவைப் படுகிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, விவேகமான ஓட்டுனரின் சுதாரிப்புதான் உயிர்ப் பிச்சை கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்வார்களா?. எத்தனை பேரின் காலை அமைதியாக ஆரம்பிக்க, பதற்றம் இல்லாமல் பயணம் தொடர, கால விரயம் இன்றி அவரவர் இலக்கினைச் சென்றடைய உதவிய பேருந்து ஓட்டுனரின் பங்கு சிறிது போல் தோன்றினாலும் பெரிதினும் பெரிதே. அவருக்கும் அவரைப் போன்ற அனைத்து பேருந்து மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கும், பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நிச்சயம் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

சிறு குறு ஊர்ப்புறச் சாலைகளிலும், சிறிய பெரிய நகர்ப்பற வீதிகளிலும், சாலைகளிலும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னையும் உள்ளடக்கிய  இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இல்லை. உங்களைச் சார்ந்த குடும்பத்தினரும், நண்பர்களும், பிற நேசம் மிகு உறவுகளும், தொழில் முறை சார்ந்த சக ஊழியர்களும், வாடிக்கையாளர்களும், நீங்கள் கடந்து செல்லும் சாலையில் நடந்தோ, மிதிவண்டியிலோ, இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களிலோ பயணிக்கும் மக்களும் தெரிந்தோ தெரியாமலோ அவரவர் வாழ்க்கையை நீங்கள் பயணம் செய்யும் வாகனத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உங்கள் கைகளில்  ஒப்படைத்திருக்கிறார்கள் என்று உணர்ந்து உங்கள் வாகனத்தை ஓட்டுங்கள்.

நடந்து போனால் போதாது, இன்று பறந்தால் மட்டுமே மற்றவர்களுடன் போட்டியிட்டு வாழ்க்கையை நடத்த முடியும் என்பது சம்பாத்தியத்திற்கு வேண்டுமானால் சரியான வாக்கியமாக  இருக்கலாம். ஆனால் சாலையில் நாம் பயணிக்கையில் நம்முடைய இன்றிமையாத தேவை, வேகம் அல்ல, மிதமான வேகத்தில் கவனத்துடன் ஓட்டும் விவேகமே என்பதைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் தொடருங்கள். உங்கள் பாதுகாப்பான பயணம் மற்றுமொரு அற்புதமான வாழ்க்கையின் தருணத்தை, இன்னொரு நாள் வாழும் வாய்ப்பை மற்றவருக்கும் வழங்குகிறதென்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

சேர்ந்து பயணிப்போம்.

பயணங்கள் முடிவதில்லை!!!