Saturday, February 23, 2013


பேசுவதற் கேதுமற்ற மெளனத்தில்
உறங்கப் போகும் இரவையும்
விடிந்து விரியும் பகலையும்
என்ன செய்வதென்பது எப்பொழுதும்,
எதைக் கொண்டும் விளங்கிவிடாத
விளங்கிக் கொள்ள முடியாத
வினாவாகவே எஞ்சி விடுகிறது!
வினாவின் கனம் தாங்கமாட்டாமல்தான்
விழுந்தடித்து பேசிக் கொண்டிருக்கிறோம்
விடை அதுவாக இல்லாவிட்டாலும்!

Friday, February 15, 2013


ஊரெல்லாம் ஓய்வெடுக்க ஓராயிரம்
ஊஞ்சல் செய்தோம்- எம்
பிள்ளைக்கு வாய்த்திருப்பதோ எம்
சேலை ஏனை மட்டும்!
வானமே கூரையாய்
வழியெல்லாம் வாசலாய்
மரத்தடியே வீடானாலும்
மறந்தும் பிச்சை கொள்ளோம்!!
கையில் உழைப்பிருக்கு
கண் நிறைய கனவிருக்கு
காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்
காலம் கைகூடும் என!
எமக்கும் ஒரு நாள்
வாழ்க்கை வசப்படும்!

Tuesday, February 5, 2013



ஒரு அயர்ந்த நாளின் முடிவில்
அயராமல் விழித்திருக்க என்
விழிகளுக்கு வாய்த்திருக்கிறது-
விழித்திருக்கும் மனதிற்கும்.

பின்னிரவோ விடியலோ என
பிரித்துக் கூற இயலாமல்
என்னைச் சுற்றிப் பின்னியிருக்கிறது
இரண்டு மணியின் இருளோசை.

இதயத்தின் ஏதோவொரு மூலையில்
கசிகிறது எதற்கென்று தெரியாமல்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல்
என்றோ ஒளித்து வைத்த
புத்தகத்து மயிலிறகையும்
மலையோடு மழையோடு
மலை முகட்டு முகிலோடு
அதை உதிர்த்து விட்டுப் போன
முகமறியாத ஒரு
மூங்கில் காட்டு மயிலையும்
மூங்கில் காட்டுக் குழலுடன்
மயிற்பீலியும் அணிந்து கொண்டு
மந்தகாசமாய் சிரித்துக் கொண்டிருக்கும்
மந்திரப் புன்னகைக்காரனையும் நினைவுறுத்தியவாறு.

கண்ணனின் பகடைகள் உருண்டு கொண்டே
இருக்கின்றன-பரமபதத்தின் அடுத்த
கட்டத்தை நோக்கி!!!
விடியல் கசிகிறது
விரிகூந்தல் பாஞ்சாலியின் விழிகளில்!!
அவளுக்கும் விடிந்து விடக்கூடும்
ஐவரிடமிருந்து ஒரு விடுதலை.
அடிப்படையில் அவள் திரெளபதியும்தானே!
அவசரமாய் ஆனால் ஆழமாய்
ஒரு மூச்செடுக்கிறாள்-தான்
பணயப் பொருளாகப் போவதில்லை
என்ற ஒற்றை முடிவுடன்.

பாண்டவர்களும் கெளரவர்களும்
பழிசெய்த கண்ணனும்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
மகாபாரதச் சூதாட்டத்தின் துவக்கத்திற்கு.

கோப்பைகளும் பகடைக் காய்களும்
கூட அங்குமிங்கும் உருண்டவாறு
கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன.
கோமகள்தான் கிளம்பி விட்டாள்,
பஞ்ச பாண்டவர்களின்
பத்தினி பதவியைத் துறந்து,
மெத்தக் கற்றக் கல்வியை மட்டும்
பக்கத் துணையாகக் கொண்டு
நெஞ்சில் உரமும்
நேர் கொண்ட பார்வையுமாக
எழுதிக் கொள்ளுங்கள் உங்கள் பாரதத்தை
என எள்ளி நகையாடிவிட்டு
கிளம்பியே விட்டாள் பாஞ்சாலி
திரெளபதி உருக்கொண்டு!!!

இனி உருவாகும்
புதியதொரு பாரதம்!!!!

Wednesday, January 23, 2013


அகண்ட பிரபஞ்சத்தில்
ஆயிரமாயிரம் ஆசைகள்;
அடுத்த நொடியை வாழும்
பிரயாசையில் அலையடிக்கும் ஆசைகள்.

என் கண்களை
இருளாக்கி விட முடியும்-
என் கனவுகளை அல்ல!

இலட்சியங்கள் உள்ளவரை
இலக்குகளுக்கு முடிவேது!
இல்லாத ஒன்றைத் தான்
இன்றியமையாததாக்கி விட்டிருக்கிறது
ஒவ்வொரு கண்டுபிடிப்பும்!
இல்லை என்று ஒன்றுமில்லை;
இருக்கிறது தேடுங்கள் என்ற
மெய் கண்டவன் ஞானி!
மெய்ப்பிப்பவன் விஞ்ஞானி!

ஒளியிழந்த கண்களின் பார்வையை
ஒரு ஜோடி கைகளுக்கும்
கால்களுக்கும், காதுகளுக்கும் கொடுத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் நடப்பவர்களின்
கைநுனியில் இருக்கிறது வாழ்க்கையின்
நன்னம்பிக்கை முனை!
  
கதகதப்பான வெயிலின் சூட்டில்
கண்ணிழந்தோர்க்கும் கதிர் உண்டெனில்
காண்பதைத்தான் காட்சியென
யார் வந்து வரையறுக்க?

புறக்கண்கள் பொய் சொல்கையிலும்
அகக்கண்கள் மெய் சொல்லும்-
புரிதலில் திறந்த விழிகளில்
புத்தொளியுடன் வாழ்க்கையைத் தொடர்பவரை
குருடர் எனச் சொல்வதற்கு
நீங்கள் யார்?
நான் யார்?
இந்த உலகம் தான் யார்?

இருட்டும் வறட்சியும்
மருட்டும் வறுமையும்
திருட்டும் வன்முறையும்
மிரட்டிப் பார்க்கலாம்!
எம் வாழ்வை வேண்டுமானால்
புரட்டிப் போடலாம்!
எம் நம்பிக்கையை அல்ல!
ஏனெனில்……
என் கண்களை
இருளாக்கி விட முடியும்-
என் கனவுகளை அல்ல!

எத்தனை இடர் கண்டபோதும்
எழுந்து நிற்கும் மானுடம்!!!!!

Tuesday, December 25, 2012


நாளை உலகம் இல்லையென்றானால்
உயிரே என்ன செய்வாய்?
கேள்வி: கவிப்பேரரசு
பதில் : நான்

அம்மா அப்பாவுடனும்
அன்பு சகோதரர்களிடமும்
அலைபேசியில் சில நிமிடம்!

ஆயிரம் மலர் தேடி
அதில் உறுதேன் நாடி
ஆசையாய் பருக சில நிமிடம்!
அருந்தி மகிழ சில நிமிடம்!

இடைவெளியில்லாத நல்லிசை
இடையூறற்ற மெல்லிசை
இடையறாதோடும் முழு நேரம்!

ஈகைக்கென சில நிமிடம்!
ஈடேறாத ஆசைகளுக்காக சில நிமிடம்!
ஈன்ற பெற்றோரையும்
தாங்கிய நன்னிலத்தையும் நன்றியுடன்
நினைத்து சில நிமிடம்!

உரையாடலாகவோ உறைந்த மெளனமாகவோ
உற்ற தோழர்க்கென சில நிமிடம்!
உருப்படாத அச்சம் துடைக்க
உருப்படியாக சில நிமிடம்!

ஊர் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் சில நிமிடம்!
ஊட்டி வளர்த்த ஆசிரியர்களையும்
உள்ளத்தை வளப்படுத்திய நூல்களையும்
உவகையுடன் நினைவுகூற சில நிமிடம்!

எல்லாம் கடந்த போதும்
எதுவும் நிலையில்லை என்ற
எளிய உண்மைக்கென சில நிமிடம்!

ஏணியாக இருந்தவர்களுக்காக சில நிமிடம்!
ஏமாந்த நொடிகளுக்காக சில நிமிடம்!
ஏகாந்த தருணங்களில்
எழுதிய கவிதைகளுக்காக சில நிமிடம்!
எனக்கே எனக்கான ஒரு
கவிதைக்காக சில நிமிடம்!

ஐம்புலனடக்கி அனைவருக்காகவும் ப்ரார்த்திக்க
ஆண்டவனிடம் சில நிமிடம்!
ஐந்திணைகளில் பார்த்ததை பிடித்ததை
அவசரமாக அசைபோட சில நிமிடம்!

ஒரு வாறாக நாள் முடியும்
ஒன்றுமற்ற வெளியில்
ஒன்றுபடும் நற்றருணத்தில்
மனதில் ஏதுமற்றதொரு மந்திர நிமிடத்தில்
நின்ற இடத்தில் மண்டியிட்டு
நிலத்தில் வீழ்ந்து முத்தமிட்டு
உலகத்தார் எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்பேன் சில நிமிடம்.

செய்த பிழைகளுக்காகவும்
செய்யாத நல்லவைகளுக்காகவும்
மண்ணில் வந்த நாள் தொட்டு
மறந்தும் நான் செய்த
குற்றங்களுக்காகவும், தவறுகளுக்காகவும்,
சொற்களாலும், செயல்களாலும்
சுட்டுக் கடந்த தருணங்களுக்காகவும்
நேரம் போதா வேளையிலும்
நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து
புவி புகும் முன்
நான் கேட்பேன்
என்னை மன்னிப்பாய்
எனச் சில நிமிடம்!

ஓய்கின்றது உலகம் என
ஓடுகின்ற ஊர் நடுவே
அலமாரியை அவசரமாகக் குடைந்து
தேடியெடுத்த தேசியக் கொடியுடன்
தேசிய கீதம் தனை
தெளிவாகப் பாடியபின்
தேகம் சாய்ப்பேன்
தாய்மண்ணில் சில நிமிடம்!

விட்ட தருணங்களுக்காய்
வருத்தம் இல்லை!
பட்ட துயரங்களுக்காய்
புலம்பல் இல்லை!
செய்த நற்செயல்களுக்காக
சேகரித்த நன்றிகளை
பிறப்பின் பலனாய்
சிறப்பாய் நினைத்துக் கொண்டு
ஓம் என்ற ஓசை
உயிரெங்கும் ஒலித்திருக்க
நல்லதொரு இசையுடன்
நல்ல தருணங்களுக்கான நன்றியுடன்
நாவில் நற்றமிழுடன்
ஓய்ந்தமர்வேன் ஒரு புன்னகையுடன்
கடை நிமிடம்!

வாழ்க்கையில் நான் உருப்படியாக
வாழ்ந்த நாள் இது ஒன்றே
என்ற நிம்மதியுடன்
கனவுகளுடன் உறங்கிப் போவேன்.

நாளை உலகம் இல்லையென்றானால்
நான் இழக்க ஒன்றுமில்லை!

Sunday, December 16, 2012



 கடல் படப் பாடல்கள் கேட்டேன். மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம் நல்ல கவிதை வரிகள், நல்ல இசைக்கோர்வையோடு  அருமையான ரஹ்மான் மெலடி டூயட். சிப்பியின் ஒரே முமுமையான முத்து. சித்திரை நிலா குறை சொல்ல முடியாத தந்தையின் தாலாட்டு. நீயில்லையேல் நான் என் செய்வேன் எனத் தொடங்கும் அன்பின் வாசலே எனத் தொடங்கும் பாடல் தொடக்கத்தின் எதிர்பார்ப்பைத் தொடக்கத்தோடே நிறுத்திவிட்டு, கிறிஸ்மஸ் கேரல் ஆகிவிடுகிறது, மகுடி மகுடி.. பாடலில் நீங்கள் கூடவா ரஹ்மான் சார்! என லேசாக சலிக்கத் தொடங்கிய மனசு அடுத்த பாடலில் கிட்டத்தட்ட தலையிலடித்துக் கொண்டது. மனசைத் தொறந்தாயே! எனத் தொடங்கும் அடியே பாடல் எந்த மொழிக்கு அல்லது எந்த மாநிலத்திற்கு அல்லது எந்த நாட்டிற்கு  ரஹ்மான் சார்? கேள்வி எழும்புகிறது. என்ன செய்ய? VTV’S AAROMALE  வை ஒட்டிய ADIYE SONG AMAZING என்று FB, TWITTER தொடங்கி YOUTUBEல் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் வரை, தயவு செய்து நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கும்கி பாடல்கள் கேட்டீர்களா? எல்லாமே ஆஹா ரகம்.  அய்யய்யய்யோ என ஒரு பாடல். AYYAYYYO AMAZING!!! அதுதான் AMAZING. 
சரி! கடல் என்று பெயரிடப்பட்டு, கடல் சார்ந்து எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படத்தில், ஒரு கடல் பாட்டாவது இருக்க வேண்டுமே எனத் தேடினால், இருக்கிறது ரஹ்மான் அவர்களே பாடிய ஏலே கீச்சான் என்ற பாடல். என்ன அது கொங்கனி மொழியில் கோவாவிற்காக இருக்க வேண்டியது. தவறிப் போயோ மறந்து போயோ தமிழ் படத்தில் வைத்து விட்டீர்களா ரஹ்மான் சார்? எல்லாம் கிடக்கட்டும். ஊரே கொண்டாடுவதாகக் கூறப்படும் நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலை நானும் கேட்டேன். நொந்து விட்டேன். இப்படிச் சொல்வதற்காக  மன்னித்து விடுங்கள் திரு. ரெஹ்மான் அவர்களே! இதை நான் ஒரு முறை கேட்டு விட்டுச் சொல்லவில்லை. ஒரு வேளை, கேட்கக் கேட்க பிடிக்கக்கூடும் என ஒரு மாதமாகக் காத்திருந்து வெறுத்துப் போன விரக்தியில் தான் சொல்கிறேன்.

 ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பாடல் கூட இதே உணர்வுக்காக எழுதப்பட்ட, இசைக்கப்பட்ட பாடல்தான். பாடலுக்குத் திரையில் உயிர் கொடுத்தவர் ராதா அவர்கள். படத்தின் பெயரைச் சொல்லாமலே யாவருக்கும் புரித்திருக்கும். முதல் மரியாதைக்குரிய பாடல்தான் அது. அவர் மகள் நடிக்கும் முதல் படத்தின் பாடல் REALLY UPSETTING N DISAPPOINTING. காலையில் ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டேன். இன்று எழுதியே ஆக வேண்டும் என்று அமர்ந்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, இரு பன்பலைகளில், சர சர சாரக் காத்து பாடல் காதுகளை வருடிப் போகிறது. இரண்டுக்கும் ஒரே பாடலாசிரியர்தான். இசையமைப்பாளர்கள் தான் வெவ்வேறு. “ வாகை சூட வா”  இசையமைப்பாளருக்கு உங்கள் அளவுக்கு உலக அனுபவம் இல்லையெனினும்,  உணர்வுகளைத் தொடும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  கும்கி இசையைக் கேட்டீர்களா? அவையெல்லாம் பாமரர்களின் இசை என நீங்கள் கருதுவதாகவதாகவே வைத்துக் கொண்டாலும், இது பாமரர்களைப் பற்றிய, பாமரர்களின் படம் தானே! இல்லையா? இசையால் உலகை கட்டிப்போட்டிருந்த தங்களுக்கு என்னவாயிற்று ரெஹ்மான் SIR?

இந்தப் பாடலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.  எந்த தொடர்ச்சியோ, நிறுத்தங்களோ இல்லாமல், ABRUPT ஆக, VERY VERY DISAPPOINTING MR. REHMAN. குரல் கொடுத்தவரின் ஹாய் என்ற SIGH வேறு கடுப்பேற்றுகிறது. நெய்தல் மட்டுமல்ல! குறிஞ்சி, முல்லை, மருதம் இவை திரிந்த பாலை என எத்திணையைச் சேர்ந்த பெண்ணின் பாடலும் இல்லை இது. 2002ல் இசை வெளியாகி, படமாக வெளிவராத, இளையராஜாவின் காதல் சாதியில் ஒரு பாடல். “ என்ன மறந்தாலும், உன்ன மறக்க மனம் கூடவில்லையே” என்று மஹதிக்கு வாழ்வு கொடுத்த ஒரு பாடல். நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இன்னும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். பிறகு நம் மண்ணிற்கேற்ற மாதிரி இசையமைக்க அமருங்கள். இதில் EGO எதுவும் தேவையில்லை.. ஹாலிவுட், பாலிவுட் தாண்டி, உங்களை உருவாக்கிய, உலகுக்கு உயர்த்திக் காட்டிய தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொஞ்சம் திரும்பி வாருங்கள் PLEASE! PLEASE! PLEASE! IF TAJMAHAL, KARUTHAMMA AND KIZHAKKU SEEMAIYILE COULD BE YOURS, EVEN MORE N MORE CAN BE. WISH YOU ALL THE BEST. WE ARE WAITING FOR THE BETTER.

பாடல்கள் அனைத்தையும் கேட்டு முடித்ததும் ஒன்று மட்டுமே தோன்றுகிறது. மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம்…..இது போதுமே! எனக்கு இது போதுமே எனத் தொடர்கிறது பாடல். ரஹ்மான் சார், இது போதுமே எனக்கு என்று, இந்தப் படத்திற்கென மெனக்கெடத் தவறிவிட்டாரோ? SORRY RAHMAN SIR! WE EXPECTED MORE FROM YOU.

Tuesday, December 11, 2012



கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்-நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர்
அகழி வெட்டினான்.
சொல்விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்.
சுதந்திர மென்றதன்மேற்
கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்.
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சியவன் பெயர்.
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர்.
அவன் பெயர் பாரதி.

மகாகவிக்கு மகோன்னதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.