தின்றவன் திருடனாகி
சிறையிலிருந்து சிறகு
விரித்து விட்டான்;
கொன்றவன், கொற்றவன்
கொள்ள இருந்தவன்
யாவரும் யாரோவாகி
எங்கோ பார்த்துச் சென்றனர்!
வெந்து வெந்து
வேதனையில் நொந்து
வாழ்க்கை படுத்துவிட
படுக்கையே வாழ்க்கையாகி உயிர்
பிடித்துக் கிடந்தவள்,
இந்த நாட்டின் மீதான
இதயத்தின் சினத்தைக்
குறைத்துக் கொள்ளாமலே
விடை பெற்றுக் கொண்டாள்!
அன்பிற்கினிய அருணா!
அத்தனை இந்தியப்
பெண்களுக்கும்
உன் வாழ்க்கையையே
உன் வார்த்தைகளாய்
விட்டுச் சென்றவளே!
ஒரு மகளிர் மசோதாவைக் கூட
ஒருமனதாக நிறைவேற்ற
மனமற்ற மக்கள் பிரதிநிதிகள்
ஆளும் இந்த நாட்டில்
மானத்தோடு மகளிர் வாழ்வதுதான்
ஆகப்பெரிய சாதனையாக இருக்க
வேண்டும்!
எனில் நேர்மைக்காகப் போராடி
எல்லாம் இழந்து இன்று
இந்த மண்ணிலிருந்து
இடம் பெயர்ந்த தேவதையே!
போராடியது போதும்;
நிம்மதி கொள்!
உன் யுத்தத்தை
உற்சாகமாய் நாங்கள்
தொடர்வோம்!
அப்புறம் ஒன்று!
இந்த நாட்டிற்கென
ஏதேனும் செய்யாமல்
செல்கிறோமே என்று
வேதனை இருந்தால்
விட்டெறி சகோதரி!
நாய்களும் நரிகளும்
மனிதர் போர்வையில்
சுதந்திரமாக உலவும்
இந்த நாடு நலமாக
இருந்தால் என்ன?
நாசமாகப் போனால்தான் என்ன?
Aruna Shanbaug
No comments:
Post a Comment