Tuesday, July 14, 2015



எந்த மலரிலும் உன் வாசம்;
எந்த அலையிலும் உன் ஸ்பரிசம்;
எங்கே நீயென எங்கும்
தேடி அலைகையில்
இங்கே உன்னில் உன்னிடத்தில்தான்
இருக்கிறேன்- எப்போதும் முப்போதும்
இப்போதும் கூட என்று
ஒரு முறை சொல்லிவிடு கண்ணா!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

பிரிவுச் சிலுவைதனை எனைச்
சுமக்க விட்டு விட்டு
விரிவாய் என்ன விதண்டாவாதம்?
விந்தைகள் போதும் இனி,
கொஞ்சம் மெளனம் கலைத்துவிட்டு என்
சிந்தைக்குள் வந்து ஓய்வெடு
எனும் என் குரல் கேட்கிறதா?
மந்திரக்காரனே! மாயவா! மாதவா!
எந்தன் மூச்சில் நீ இருக்கையில்
எங்ஙனம் உன்னைப் பிரிவேன் என்று
மட்டுமாவது என் காதில் சொல்லிவிடு!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

எந்த புல்லிலும் உன் குழலோசை;
எந்த சொல்லிலும் உன் குரலோசை;
கல்லிலும் காரிருளிலும் உன்னைக்
காண்பது கனவல்ல- இந்தக் கனம்
நிஜமே என்று மட்டுமாவது
சொல்லி விடு கண்ணா!
மூச்சு முட்டும் கணத்திலும்
முகம் மறந்து நிற்கும்
மூர்ச்சைப் பொழுதினிலும்
நிச்சயம் நீ வருவாய் என
நித்தம் காத்திருக்கும் கண்களுக்கு
சிறிதளவு உறக்கம் தருகிறேன்!
சிறித்ளவு உலகம் தருகிறேன்;
சிறிதளவு சுவாசம் தருகிறேன்!
என்னுடன் நீ இருக்கிறாய்
என்று ஒற்றை வரி சொல்லிவிடு!
காத்திருக்கிறேன் கண்ணா !
கண்களில் உனக்கான
கனவுகளுடனும், கவிதைகளுடனும்
நான்
காஞ்சனா……….

No comments:

Post a Comment