Tuesday, July 14, 2015


மூன்றாண்டுகள் முழுதாய் ஓடிவிட்டதை
மூளை நம்ப மறுக்கிறது!
எங்களுடன் நீ இல்லை என்பதை
எப்படி நாங்கள் நம்புவது?

எம் பெற்றோருக்கு நன்மகனாய்;
சகோதரருக்கு நற்றோழனாய்;
எனக்கும் நற்சகோதரனாய்;
எமக்கு எல்லாமாய் இருந்தாய்;
எப்போதும் இருப்பேன் எனத்தான்
எப்போதும் சொன்னாய்!

எம் இல்லத்தின் காவலனாய்
எம் தேவைகளுக்குச் சேவகனாய்
எம் சுமைகள் யாவையும்
எவ்வாறும் சுமந்து சிரிக்கும்
எல்லாமும் ஆன இறைவனாய்
நீ இருந்த வரை…
சுமைகள் சுமைகளாய் தெரியவில்லை!
இப்பொழுதன்றோ உணர்கிறோம்
இறையெனப்படுவது யாதென்பதை!

நீ இல்லாத இந்த
நீண்ட மூன்று ஆண்டுகளிலும்
உன்னை நினைக்காத நாளில்லை!
பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை;
நீ விட்டுச் சென்ற வீடு
அப்படியேதான் இருக்கிறது!
நீங்காத உன் நினைவுகளுடன்
நாங்கள்தான் உனக்காக
நித்தம் அழுது கொண்டிருக்கிறோம்!
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

நிறைய வளங்களுடன் வாழ்க்கை முழுவதும்
நிறைந்த மகிழ்ச்சியுடன்
நிறைவாக வாழ ஆசைப்பட்டவன்
நீ என்பது எமக்குத் தெரியும்!
எது நிகழ்ந்திருப்பினும்
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

இந்தக் கண்ணீர் உன்
பாதங்களைச் சேரும் என்ற
நம்பிக்கையுடன் எழுதுகிறேன்!
ஏன் நீ சென்றாய்
என்பது இன்று வரை
புரியாத புதிராய்
விடையற்ற வினாவாய்
ஈர மரத்தின் கரையானாய்
அரித்துக் கொண்டேயிருக்கிறது!
மறக்க முடியாமல்
மருகிக் கொண்டிருக்கிறோம்!

எப்பொழுதும் நான் உம்முடன் இருப்பேன்
என்ற உன் வாக்கு
பொய்யாதல் சாத்தியமோ?
இப்பொழுது இக்கணத்தின் துயரத்தின்
இணையற்ற அடர்த்தியை
எங்கோ இருந்து நீ
பார்த்துக் கொண்டிருப்பாய்தானே!

எம் வீட்டின் எல்லா இடங்களிலும்
எம் வாழ்வின் எல்லா தளங்களிலும்
எம் நாட்களின் எல்லா நொடிகளிலும்
எம்முடனே நீ இருக்கிறாய்
என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்!

எம் நம்பிக்கையை, பலங்களை
எடுத்துக் கொண்டுவிட்ட இந்த நாளை
மறக்கத்தான் நினைக்கிறோம்!
அஞ்சாதே! உங்களுடன் நானிருக்கிறேன்!
எனும் உன் குரல்
எங்கிருந்தோ ஒலிக்கிறது!

எம்மோடு,
எமக்காக,
எம்முள்,
எம்முடன்,
எப்போதும்,
எங்கும்
நீ இருக்கிறாய் என்ற
நித்திய நம்பிக்கையுடன் தான்
இந்த வாழ்க்கையைத் தொடர்கிறோம்!!!!
MISS YOU PALANI!!!!
REMEMBERING 14.07,2012!
MAY YOUR SOUL REST IN PEACE!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment