Saturday, July 25, 2015


சாரலாய்த் தொடங்கி
தூறலாய் பெருமழையாய்
ஊறும் அமுதாய்
தீராக்காதலுடன் என்னை
அணைத்துக் கொண்டிருக்கிறது
நீராய் மழைப்போர்வை!

நாள் முழுவதும் தொடர்ந்த
பால்மழைப் பேச்சு
பரவசமாய் மனமெங்கும்
பரவிக் கிடக்க,
என்னைச் சுற்றிலும்
புன்னகை வீசிப் போகிறது
காதல் மழை!

நாளை ஒருவேளை
சளி பிடித்தால்
என்ன செய்வது?
நனைவதே கடனென,
என் சிறுபாதங்களால்
தண்ணீர்ப் பாதையை
அடியடியாய் அளந்தவாறு
மழையுடன் கைகோர்த்து
நகர்வலம் வருகிறேன்!

இத்தனை நாளைய மெளனத்தையும்
சுத்தமாய் துடைத்துவிட்டு
மொத்த நாளின்
அத்தனை நிமிடங்களையும்
என்னைச் சுற்றிப் பொழிந்த
வெண்ணெய் மழைக்கு
என்னைத் தவிர நான்
என்ன தர?

நனைகிறேன்!
கரைகிறேன்!
நானே மழையாகிறேன்!!
ஓயாத மழைப் பேச்சு
பாடலாய் உள்ளே
ஓடத் தொடங்குகிறது!

ஏனெனத் தெரியவில்லை!
இந்த நிமிடம்
இளையராஜாவை இணையில்லாமல்
அளவில்லாமல் அவ்வளவு
பிடித்துப் போகிறது!!
பியானோ கசிய ஆரம்பிக்கிறது…
“ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…”
Love this Amazing Magical moment!!!
Love You Raja Sir!!!
You are the Greatest!!!!


No comments:

Post a Comment