மொழியறியா நிலமொன்றில்
முகம் தொலைத்து
வாழ்தல் கேட்டேன்;
தந்தேன் என்றே என்னை
தன் பார்வைக்குள் தொலையச் செய்தான்!
தந்தவன் யாரென்றேன்;
தந்தையென்றே சொல்லி நின்றான்;
என் தந்தை வீட்டிலிருக்க
யாரிந்த புதுக்குரல் என்றேன்;
உனக்கு மட்டுமல்ல- நான்
உலகத்துக்கே தந்தை என்றான்!
உடுக்கையும், உருத்திராட்சமும்
உடுத்திய புலித்தோலும்
புஜங்களில் பாம்பும்
பூசிய திருநீறும்
பிறையணி கூந்தலும்
இறையவன் யாரென
சிந்தைக்குச் சொல்லின-நான்
மந்தைக்குள் மாயமானேன்!
விரல் பற்றி நடக்கும்வரை
தொலைதல் தொலைதலாமோ?
தந்தையின் பார்வைக்குள்
பத்திரமாய் தொலைந்து போதல்
எத்தனை பெரிய வரமென்று
எத்தனை பேருக்குத் தெரியும்?
No comments:
Post a Comment