எங்கெங்கோ தேடி அலைகிறேன்;
என்னருகில்தான் நீ அமர்ந்திருக்கிறாய்;
ஏதும் பேசாமல் நழுவும் தருணங்களில்
ஏதேதோ பேசிச் சிரிக்கிறாய்;
உன்னத உணர்வொன்றால் என்
உள்ளத்தைக் கழுவுகிறாய்;
கள்ளப் பார்வையொன்றால் என்னை
கடனாளியாக்குகிறாய்!
என்ன வேண்டுமாம் என் கண்ணனுக்கு
என்றெண்ணுகையில் மின்னலென மறைகிறாய்;
காத்திருப்பின் கனிகளால் என்னைப்
பூத்திடச் செய்கிறாய்;
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே என்னைச்
சேர்த்தெடுத்துக் கொள்கிறாய்;
பார்க்காத தருணங்களிலும் உன்னில்
கோர்த்தணைத்துக் கொள்கிறாய்!
உன் நீல விழிப் பார்வைகளில்
புலர்கின்றன என் நாட்கள்;
உன் ஈர இதழ் புன்னகைகளில்
மலர்கின்றன என் பூக்கள்;
அங்குமிங்கும் அலையும் மனதிற்குள்
உன்னை வென்றுவிட முனைகிறேன்;
எங்கெங்கும் தெரியும் உன் பிம்பங்களில்
என்னைக் கண்டறிய முயல்கிறேன்;
எள்ளி நகையாடி என்னை
ஏளானம் செய்கிறாய்;
தள்ளி நின்று கண்ணில்
தனல் மூட்டிச் செல்கிறாய்!
என் செய்தால் எனக்கு
உன்னைத் தருவாய் என் கண்ணா!
என் செய்தால் உனக்கென
என்னைப் பெறுவாய்?
எண்ணி மாளவில்லை
ஏராளமாய் கேள்விக்கணைகள்;
எழுகின்றன வினாக்களுக்கிடையே
எங்கிருந்தோ விழுகிறது ஒற்றை மழைத்துளி!
என்னிடம் பேசியது நீ தானா?
என் கண்ணா!
என்னிடம் பேசியது நீயே தானா?
No comments:
Post a Comment