Sunday, July 19, 2015


விழித்தெழுகையில் செவிகளில்
விடிகிறது உன் குரல்;
வெளியில் வந்து விடாதேயென
விழிகளுக்குள் விரட்டிப் பிடிக்கிறேன்
உன் கனவுகளை!

அடர்த்தியாய் தொடர்ந்த என்
இரண்டாம் தூக்கத்தில்
அடம்பிடித்து வந்தமர்ந்த உன்
முரண் கனவுகளை
புன்னகையாய் மொழிபெயர்த்துத் தருகிறது
என் தலைக்கு மேல்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!

எஞ்சியிருக்கும் உறக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
துடைத்தெடுக்கையில் எங்கிருந்தோ
தஞ்சம் கேட்கிறது ஒரு
ஏகாந்த குயிலோசை!
குரலில் வழிவது குயிலோ?
உன் குழலோ? என்பது
கண்ணா! உனக்கே வெளிச்சம்!

புரியாத உன் மெளனங்களை
மொழிபெயர்க்கும் வழி தெரியாமல்
விடியலுக்குள் நுழைகிறேன்!
மொழி தேவையற்ற புன்சிரிப்பொன்றை
மென்மையாய் தெளிக்கும்
எதிர் சாளர பெண்மணியிடம்
எதிர்பாராமல் புரிபடுகிறது
எனக்கான உன் நேசம்!

நீ தெளித்த நம்பிக்கையில்
நீர் தெளிக்கும் முகில்களுடன்
வெளிச்சமாய் என் நாள்
விடிந்தே விட்டது!

No comments:

Post a Comment