மழை பொழிந்த பூமி இஃதென்றால்
பிழையாகிப் போகக் கூடும்;
வறண்டு போனது என் வானம்;
மறந்து போனாயோ கண்ணா நீ?
என்னிடம் ஏதும் சொல்லாமல்
எங்கே சென்றாய் நீயென
தேடித் தொலைந்து கொண்டிருக்கிறேன்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?
எங்கும் கேட்காத உன் குரலுடன்
எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன
என் செவிகள்!
கேட்க ஏதுமின்றி
தேடித் தொலைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?
எங்கும் தென்படாத உன் பார்வையுடன்
எங்கோ மங்கி மறைந்தன
என் விழிகள்!
பார்க்க ஏதுமின்றி விழி
வேர்த்துக் கரைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?
உன் குழலோசையும் குரலோசையும்
என் உயிர் கேட்கும் மொழியறியும்;
உன் விழியசைவும் விரலசைவும்
என் உணர்வுறைவிக்கும் வழியறியும்;
அழுது நனைத்த இமைகள் உன்
அத்தனை அசைவினையும் அறியும்
எனில் கண்ணாமூச்சி போதும் கண்ணா.
என் கண் முன்னே வந்து விடேன்!
என்னையும் சேர்த்து
இந்த உலகம் உயிர் கொள்ளட்டும்!!!
No comments:
Post a Comment