இந்த மழை
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்று தெரியாமல் போனது!
இந்த மனம்
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்பது தெரியாமல் போனது!
ஆற்றாமைக்கு ஆறுதல் சொல்ல
அழுகையால்தானே முடியும்
என்பது புரியாமல் போனது!
எங்களை
கனவு காணச் சொல்லிவிட்டு
எங்கே சென்றீர்கள்
ஐயா?
“கனவு காணுங்கள்”
என்ற தாரக மந்திரம்
ஒரு புதிய தலைமுறையையே
உருவாக்கியது என்பதை
யாரால் மறுக்க முடியும்?
இந்தியா 2020ல்
இவ்வுலகின் வல்லரசாகும்
என்ற உங்கள்
கனவு நிஜமாக
இன்னும் ஐந்து வருடங்களே
இருக்கையில் இவ்வளவு
அவசரமாய் ஏன் சென்றீர்கள்
எங்கள் ஆசானே?
ஏவுகணைகளின் தந்தையே!
ஏழைக்குடிசையில் பிறந்தாலும்
ஏற்றமிகு எண்ணமும்
செயலும் இருந்தால்
ஏட்டில் ஏறலாம்;
நாட்டின் தலைவனாகவும் ஆகலாம்
என்று வாழ்ந்து காட்டிய
என்பத்து மூன்று வயது இளைஞரே!
என்ன அவசரமோ?
இளைஞர்கள் மத்தியில்
விரிவுரையாற்றிக் கொண்டே
விடை பெற்றீர்?
உங்கள் கையசைவைப் பெற்ற
உற்சாகப் பெருமிதத்தில்
உத்வேகத்துடன் நாங்கள்
நின்ற தருணங்களை
எங்கள் கல்லூரி வளாகம்
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கும்
உதாரண புருக்ஷரே!
உங்கள் பாதம் பட்ட மண்
எங்களைப் போல் பலரை
கனவு காண
வைத்துக் கொண்டிருக்கிறது!
கண்ணீரால் நிரப்பிவிட முடியாது!
நீங்கள் கண்ட
கனவுகளால்
இட்டு நிரப்புகிறோம்
நீங்கள் விட்டுச் செல்லும்
வெற்றிடத்தை!
எங்கள் கண்களின் வழியே
உங்கள் கனவுகளின் வழியே
நீங்கள் நீடூழி வாழ்வீர்!
ஆட்சி முடிந்த நாளன்றே
ஆசிரியராய் களம் கண்ட
அரசியல் பேசாத அரசியலாளரே!
அணுகுண்டும், ஏவுகணை ஆராய்ச்சியும்
அமைதிக்கு அவசியம் என்று
அறிவியல் போதித்த ஆசானே!
ஏழ்மையினின்று ஏணியேறி
ஏழு கடல் தாண்டிய பின்னும்
எளிமை போதித்த
எம் பாரதரத்னாவே!
கவலைப் படாமல்
சென்று வாருங்கள்!
எங்கள் கனவுகள் மெய்ப்படும்!
சத்தியமாய்,
உங்கள் கனவுகளும் கூட!
இந்தச் சுமையை
இறக்கிவைக்க முடியவில்லை!
இறுதி வணக்கங்கள் எங்கள்
இந்தியாவின் முதல் குடிமகனே!
இப்படியன்றோ வாழ வேண்டும்!
இப்படியன்றோ சாக வேண்டும்!
விடை தருகிறோம்
விஞ்ஞானக் கவிஞரே!
இனி
நாங்கள் சுமக்கிறோம்
உங்கள் கனவுகளை
எங்கள் கண்களிலும்,
அக்னிச் சிறகுகளை
எங்கள் தோள்களிலும்!
Can’t Substitute you Sir
We Will Miss You Forever!
Rest In Peace
Bharatratna Dr. A.P.J.Abdul Kalam!!!
No comments:
Post a Comment