Tuesday, January 5, 2016


மார்கழி 20

கொஞ்சும் கோமகனே!
நீ
கொஞ்சும் வகையும்
கெஞ்சும் வகையும்
மிஞ்சும் வகையும்
அஞ்சும் வகையும் கூட
நான் அறிவேன்!

பருகித் தீரா
பேரமுதே!
நீ
உருகும் விதமும்
குறுகும் விதமும்
பெருகும் விதமும்
மருகும் விதமும் கூட
நான் அறிவேன்!

சிந்தும் அமுதத்தைவிட
உன் சிரிப்பொலி
இனிதென்பதை
நான் அறிவேன்!

பகல் பத்து
பறந்தோடிக் கரைகிறது!
பகலே! பரமே!
பகல் இரவென
பரந்து விரியும்
ஒளியே!

பவள மல்லி
தொடுத்து வைத்திருக்கிறேன்!
கவளம் கவளமாய்
அன்னம் உருட்டி வைத்திருக்கிறேன்!
உறியில் வெண்ணெயும் கூட
கவனமாய் வைத்திருக்கிறேன்!
மெல்லக் கண் விழியடா!
என் செல்லக் கண்ணா!
மெல்லக் கண் விழியடா!!

என்ன விளையாட்டு இது!
எழுஞ்சிக்கோ!!!!


என் பாவை # 20


மார்கழி 19

அகிலத்து அன்பையெல்லாம்
அப்படியே அடைகாத்து வைத்திருக்கிறேன்!
அணைத்துக் கொள்ளடா!
அனைத்தும் உனக்குத்தான்!

இப்புவியின் பாசத்தையெல்லாம்
இம்மியும் குறையாமல்
எடுத்து வைத்திருக்கிறேன்!
இப்பொழுதே பருகவா!
இவை யாவும் உனக்குத்தான்!

உலகத்து முத்தங்கள் யாவையும்
மொத்தமாய் சேர்த்து வைத்திருக்கிறேன்!
உன் உதடுகளில் இறக்கி வைக்க
உற்சாகமாய் காத்திருக்கின்றனர்
உன் தோழியர்!

சீக்கரம்
எழுந்து வாடா!
கண்ணா!
எழுஞ்சிக்கோ!

என் பாவை # 19


Sunday, January 3, 2016


மார்கழி 18

பதினெட்டுத் திங்கள்
பறந்தோடி விட்டது!
பரந்தாமா! உன்னைப் பாடும்
பரவசம் மட்டும்
கலைந்து விடாமல்
கரைந்து விடாமல்
கனந்தோறும் வளரும்
அதிசயம் காண
கண் விழியடா!!

அதிகாலையாய் உன்
அன்னை அழைக்கிறேன்!
மதிமுகத்தானே!
மடி வந்து சேரடா!

குளிர்பனியாய் இன்
அன்னை கூப்பிடுகிறேன்!
குழல்குரலோனே!
அகம் வந்து சேரடா!

எவ்வளவு நேரமாச்சு!
எழுந்திரிச்சு ஓடி வாடா
என் கண்ணா!
எழுஞ்சிக்கோ!

என் பாவை #18



மார்கழி 17

பேசிக் கொண்டே இருப்பேன்!
பேசிக் கொண்டிருக்கையிலே
பேச வேண்டும் என்பேன்!
பேசுவதற்கு வார்த்தையற்று
பெருமெளனம் புகுவேன்!
அத்தனையும் நீ அறிவாய்!
அத்தனையின் கணத்தையும்
நீ புரிந்து வைத்திருக்கிறாய்!
என் தேவைகள் யாதென
நீ தெரிந்து வைத்திருக்கிறாய்!
என்ற ஆழ்ந்த நம்பிக்கையிலேயே
என் நாட்கள் கழிகின்றன!

வேண்டுவன கொடு!
வேண்டினாலும் வேண்டாவிட்டாலும்
என்னுடனே இரு!
வேறென்ன கேட்பேன்!
என் வேந்தே!
என் வேண்டுதல்
நீ தானே!

விழித்தெழுந்து வா!
என் விடியலே!
விழித்தெழுந்து வா!

என் பாவை # 17


Friday, January 1, 2016



மார்கழி 16

புலர்ந்தது புத்தாண்டு!
மலர்ந்தன பூக்கள்!
மலர் விழிகள் திறவாய்!
மணிவண்ணா!!!
மீண்டும் மீண்டும்
உன்னை ஒன்றே
கேட்பேன் நான்!

நல்லதைப் பார்க்கக் கொடு!
நல்லதைக் கேட்கக் கொடு!
நல்லதையே எண்ணமாய்க் கொடு!
நல்லவர்களை என் வாழ்வாய்க் கொடு!
நல்லதையே செய்யும்
நற்பண்பை எனக்குக் கொடு!
நல்லவையாய் நற்குணமாய்
நல்லன்பாய் நன்றாய்
என்னுள் எப்பொழுதும் இரு!

விழித்திரு!
விரல் பிடி!
தோள் கொடு!
தோழனாய் இரு!

Happy New Year da Kanna!
Muzhichukko!!!

என் பாவை # 16