மார்கழி 20
கொஞ்சும் கோமகனே!
நீ
கொஞ்சும் வகையும்
கெஞ்சும் வகையும்
மிஞ்சும் வகையும்
அஞ்சும் வகையும் கூட
நான் அறிவேன்!
பருகித் தீரா
பேரமுதே!
நீ
உருகும் விதமும்
குறுகும் விதமும்
பெருகும் விதமும்
மருகும் விதமும் கூட
நான் அறிவேன்!
சிந்தும் அமுதத்தைவிட
உன் சிரிப்பொலி
இனிதென்பதை
நான் அறிவேன்!
பகல் பத்து
பறந்தோடிக் கரைகிறது!
பகலே! பரமே!
பகல் இரவென
பரந்து விரியும்
ஒளியே!
பவள மல்லி
தொடுத்து வைத்திருக்கிறேன்!
கவளம் கவளமாய்
அன்னம் உருட்டி வைத்திருக்கிறேன்!
உறியில் வெண்ணெயும் கூட
கவனமாய் வைத்திருக்கிறேன்!
மெல்லக் கண் விழியடா!
என் செல்லக் கண்ணா!
மெல்லக் கண் விழியடா!!
என்ன விளையாட்டு இது!
எழுஞ்சிக்கோ!!!!
என் பாவை # 20
No comments:
Post a Comment