கட்டை விரல் நுனியில் நின்று
காற்றில் சுழன்றாடும் தனியுடலாய்
தாளமற்றதொரு தாளகதியில்
தாவித் தாவி தனக்குள்ளேயே
தவழ்ந்தாடுகிறது மனது!
நாளங்களின் நாட்டியத்தில்
நாணிடப்படாத வில்லொன்று
அம்பெய்யத் தயாராய்
எப்போதும்!
தானே தன்னைக் குடையும்!
தானே தன்னை அறியும்!
நானே என் கேள்வியாய்!
நானே அதன் பதிலுமாய்!
என் குழலின் துளைகளில்
ஏதொரு பிழையுமில்லை!
எனினும்
என் குரலினுக்கென்று
ஏதொரு மொழியுமில்லை!
யாருடனும் யாதொன்றும்
பகிர்வதற்கில்லை
என் பயணத்தில்!
வேறென்ன சொல்ல?
தான், தனது என ஏதுமின்றி
தனித்த தன் பயணப் பாதையில்
தாகங்களற்ற என்
தண்ணீர் அறிவு!
No comments:
Post a Comment