முகம் தெரியாத எதிர்கால கணவனுக்காக
முழுநாளும் நோன்பு நோற்கிறாய்.
மூடனோ, முட்டாளோ, முன்கோபியோ,
முகத்தில் அறைபவனோ அமைந்துவிட்டாலும்
முன்வினை என முகாந்திரம் சொல்கிறாய்!
முன்கோபம் குறைவதற்காக மீண்டும்
முன்னூறு விரத முறைகள்- அவன்
முகம் கோணாமல் நடந்து கொள்ள
மூவாயிரம் அறிவுரைகள்!
முடிவேயில்லா பிரார்த்தனைகள்!
இன்னும்
இன்னும்
இன்னும்….
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும்
இத்தனை பத்தாம்பசலித்தனமா!
விழித்தெழடி பெண்ணே!
விடிந்து வெகுநேரமாகிறது!
நாளொரு நிர்பயாவை
நாடு விழுங்கிக்கொண்டிருக்கையில்
நாடக சாத்திரங்கள் எல்லாம்
நமக்கிங்கு எதற்கடி?
நல்லதொரு நாள் கிழமையென
நங்கையர்க்கேதும் இல்லை!
ந்மக்கான நேரம் யாவும்
நன்றே என்றுணர்!
நல்ல நேரம் இது! பெண்ணே!
நமக்காகவும் பேசத் தொடங்கு!
கண்ணகிக்காகவும் திரெளபதிக்காகவும்
பேசுவது போல்
மாதவிகளுக்காகவும் மணிமேகலைகளுக்காகவும்
கூட பேசு- உன்
அக்கா தங்கைகளுக்காக
மட்டுமல்ல!
அப்பாவிகளுக்கும்
அபலைகளுக்காகவும்
கூட பேசு!
சத்தியம் பேசு!
சமதர்மம் பேசு!
சங்கடம் ஏதுமின்றி
சத்தமாகப் பேசு!
உரக்கப் பேசு!
உற்சாகமாக பேசு!
உயரங்களைத் தொடும்
உத்வேகத்துடன் பேசு!
பெண்ணியம் பேசு!
பெண்ணே!
உன்-னியம் பேசு!!!
மகளிர் தின
வாழ்த்துக்கள்!!!
Happy Women’s Day!!!
No comments:
Post a Comment