Wednesday, December 23, 2015



மார்கழி 7

பித்தனே! பிறை நுதலோனே!
சித்தம் உனில் வைத்தோம்!
வித்தே! விளை நிலமே!
விடங்கனே! விழித்தெழுவாய்!
புசித்தோம் இல்லை!
ருசித்தோம் இல்லை!
உன்னில்
வசித்தோம் அறிவாயோ!
யாம் உன்னால்
வசித்தோம் அறிவாயோ!
எத்தனை குறும்புகள் செய்தும்
அத்தனையும் ரசித்துக் களித்தோம்!
எத்தனே!
விழி திறவாய்!
எம்பெருமானே!
விழித்தெழுவாய்!
கண்ணே! கண்மணியே!
கார்முகில் தரும் மழையே!
பொன்னே! பொக்கிக்ஷமே!
உன்னைச் சரணடைந்தோம்!
கண் மலர் திறவாயே!
கண்ணா!
கண் மலர் திறவாயே!


என் பாவை # 7

Tuesday, December 22, 2015



மார்கழி 6

முல்லை பூத்துவிட்டது!
மூடு பனி களைத்துவிட்டது!
முகில் வதனா! முகுந்தா!
முழுநிலவே! விழித்தெழுவாய்!

முன்னெழு பிறவியிலும்
உன்னைப் பிரிய இயலாமல்
தேவகி ஆனேன் நான்!
யசோதையும் ஆனேன் நான்!
ராதை ஆனேன் நான்!
கோதையும் ஆனேன் நான்!
யாதுமாகி நிற்பவனே!
உன் யாதுமாகி
உடன் வருவேன் நான்!
அரங்கனே!
அழகம்பெருமானே!
உன்
ஆண்டாளும் நானே!
ஆட்கொள்ளும் நேரமிது!
அழகு விழி திறந்தருள்வாய்!


என் பாவை # 6

Monday, December 21, 2015


மார்கழி 5

வைகறை விடிந்தது;
வாவினங்கள் விழித்தன;
வைதேகியும் விழித்தனள்;
வைகுண்டவாசா விழித்தெழுவாய்!
கோதை உன் வாசலில்;
கோமகள் உன் வாசலில்;
கோலவிழி உன் வாசலில்;
கோமகனே கண் திறவாய்!
உனக்கென நோன்பிருந்து
உனக்கென மாலை சூடி
உன் ஆண்டாள்
உன் வாசலில்!
உலகளந்தானே!
உளம் திறவாய்!!!


என் பாவை # 5

Sunday, December 20, 2015


மார்கழி 4

வண்ணங்கள் யாவும் உன்
வாசல் நிறை கோலமாய்!
மண்ணுயிர் எல்லாம்
உனக்காகக் காத்திருக்க
இன்னும் உறங்கலாமோ
மணிவண்ணா!
குளிர் இனிது!
கூவும் குயில் இனிது!
வின்மீன் இனிது!
விழித்த இரவு இனிது!
பனி இனிது!
படரும் விடியல் இனிது!
உலகளந்தானே
உன் குழல் இனிதன்றோ!
ஆதவன் காத்திருக்கிறான்!
ஆவினங்கள் காத்திருக்கின்றன!
மாதரும் காத்திருக்கின்றனர்!
மாதவா!
விழித்தெழுவாய்!
நானும் காத்திருக்கிறேன்!
நந்தகுமாரா!
விழித்தெழுவாய்!


என் பாவை # 4

Saturday, December 19, 2015



மார்கழி நாள் 3

மங்கல மாவிலைத் தோரணங்கள்,
மணம் வீசும் மஞ்சள் மலர்ச்சரங்கள்,
மஞ்சள் பூசி மஞ்சள் உடுத்தி
மாக்கோலமிட்டு மஞ்சள் பூவைத்து
மங்கலம் நிறைந்ததென பாடி வரும்
மங்கையர்கள் எல்லாம் உன் வாசலில்!
இன்னுமா கண்ணுறக்கம் கலைப்பாய் இல்லை
என் கண்ணா!
திங்கள் வருகுது காண்!
தீஞ்சுவை நிறைந்தது காண்!
கண்கள் திறந்தருள்வாய்!
என் கண்ணா!
கண்கள் திறந்தருள்வாய்!


என் பாவை # 3

Friday, December 18, 2015



மார்கழி 2

வாசல் பூத்தது காண்!
வாச மலர் பூத்தது காண்!
நேசம் பூத்தது காண்!
நெஞ்சமும் பூத்தது காண்!
வாசமும் நேசமுமாய் உன்
வாசல் நிறை கோலம் காண்!
வாசனே! வரமருள்வாய்!
வண்ண மலர் கண் திறவாய்!!
என் ஈசனே!
எழுந்தருள்வாய்!
எனை எழுந்தாட்கொள்வாய்!


என் பாவை # 2

Thursday, December 17, 2015



பொழுது புலர்கின்றது!
பூவினங்கள் மலர்கின்றன!
மார்கழி பிறந்தது காண்!
மாலே! மணிவண்ணா!
பனியோடு புல்லினமும்
கனியோடு புள்ளினமும்
துணையாகத் தோழியரும்
உனைக் காண வாசல் வந்தோம்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
தூயனே!
துயிலெழுவாய்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
மாயனே!
மலர்ந்தெழுவாய்!!

இன்று மார்கழி முதல் நாள்!
இது என் பாவை # 1!