பாதைகள் விரிய விரிய
படரும் பாலைகளும் சோலைகளும்!
பகலிரவு முடிய விடிய
தொடரும் பயணங்களும் நினைவுகளும்!
வாழ்க்கை வளர வளர
வண்ணம் தீட்டிக் கொள்கின்றன
வாசனைகளும், வார்த்தைகளும்!
கதிரும் நிலவும் காட்டாத
புதிர் வானத்தின் விடுகதையை
வின்மீன்கள் விளக்கும் விதம்
விளையாட்டுப் பிள்ளைகள் அறிவரோ?
வண்டல் மண் வடிகட்டிய
ஊற்று நீரின் பாத்திரத்தையும்
பாதையையும், பயணத்தையும்
வீற்றிருக்கும் மனிதர் அறிவரோ?
சன்னிதிக்கு உள்ளே வெளியே
கொட்டிக் கிடக்கும் வேண்டுதல்களை
சத்தியங்களை, சங்கடங்களை, பிரார்த்தனைகளை
சயனித்திருக்கும் சாமிகள் அறிவரோ?
வினாக்கள் அற்ற விண்ணப்பங்களை
விட்டு விட்டுச் செல்லும்
பக்தனின் நம்பிக்கையே அறியும்
பரம்பொருள் அருளும் வரங்களின்
வளமையும், வலிமையும், வல்லமையும்!
No comments:
Post a Comment