குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!
குடும்பம் தொடங்கி தொழில் வரை
குதூகலமாய் கூடி கும்மியடிக்கும்
குழாயடி குடுமிப்பிடி சண்டைகளுக்கும்;
குழவிக்கும் அம்மிக்கும் இடையில் இடிபடும்
குழம்பு மசாலா கைக்குத்தல் அரிசிவகை
பெரிய மனுக்ஷ பெருமூச்சுகளுக்கும்;
குடிமகற்கும் குடிமக்களுக்கும் நடுவில்
குழப்பமாய் வியர்வையில் நனைந்து
நசுங்கி நாற்றமெடுக்கும் ரூபாய் நோட்டிற்கும்,
கடும் வறட்சிக்கும் காட்டாற்று வெள்ளத்துக்கும்
காது கொடுக்க நேரமின்றி
கால் நனைக்கும் கரையோர கடலலைகளுக்கும்;
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்,
எட்டிப் பார்க்காத மழைக்கும்,
எட்டிப் போன மனிதநேயத்திற்கும்,
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
நிற, இன, மத மற்றும்
பிற வன்முறைகளுக்கும் நடுவில்
இவை எல்லாவற்றையும் தாண்டி
நாளை புது உலகம் உருவாகும் என்ற
நம்பிக்கை ஒளியுடன் இன்னும்
குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!
No comments:
Post a Comment