Sunday, March 22, 2015


பதிலொன்று சொல் பாரதி!
வாழ்ந்த பாதி வாழ்க்கையில்
வீழ்ந்தாய் இல்லை -நீ
தாழ்ந்தாய் இல்லை-ஆனால்
வீதியில் புரண்ட புழுதிவீணை
ஸ்வரங்கள் அறுந்து அடங்குமுன்
உன்னை அழைத்து அழுததே-
அன்றதன் குரலினைச் செவியுற்றாயோ?
செய்விதியின் விரலினை விழியுற்றாயோ?
விதியின் வேரை பிடுங்கியெடுத்து
இடுப்பில் வேட்டியாய் அணிந்தாயோ?

சீற்றமடங்கிய சிம்மத்தின் மனம்கொண்டு
வீற்றிருக்கும் தெய்வம் போல்
முதுகின்பின் இகழ்ந்தாரின் வசையை
முண்டாசு கட்டிக் கொண்டவனே!
நாற்றமிகு சகதியின் நடுவே
சேற்றுறு செந்தாமரையாய் தாள்
உயர்த்தி நின்றாயோ?
ஏற்றமுறும் கவிதைகளை
விதையிட்டுச் சென்றாயோ?
நாற்றது கதிராகுமென நலம்
வாழ்த்திச் சென்றாயோ?

இவை யாவையும் நீ
செய்திருப்பாய் என என்
மனம் அறியும் -இந்த
மானிலமும் அறியும் எனினும்
பதிலொன்று சொல் பாரதி!
எதை முதலில் செய்தாய்
நீ........!

No comments:

Post a Comment