Wednesday, September 30, 2015


என் முதல் மழைக் கவிதையின் ஈரம்
இன்னும் என் விரல்களில்!
என் முதல் மழைக் கனவின் சாரம்
இன்னும் என் விழிகளில்!
என் முதல் மழைக் குயிலின் குரல்
இன்னும் என் செவிகளில்!
என் முதல் மழை நனைவிற்குள்
இன்னும் மூழ்கிக் கிடக்கிறேன்!
இப்போதைய என் உலகம், உயரம்,
இன்னும் உடனிருப்பவையை எல்லாம் மறந்து
எப்போதாவது வந்து போகும் மழைக்காக
எப்போதும் காத்திருக்கிறது இந்த மனது!
என் முதல் மழைக்கு முன் பறந்த தும்பிகளுடனும்
அன்றைய மாலையில் பறந்து கடந்த ஈசல்களுடனும்
இன்னும் பறந்து கொண்டே இருக்கிறாள்
தன்னை மழைக்குக் கொடுத்து
தானே மழையாகி மழை இரவிற்குள்
வின்மீன் தேடிப்போன ஒரு
சின்னஞ்சிறுமி!!!!
-நான் காஞ்சனா.


Saturday, September 26, 2015


எங்கோ உறங்கிக் கொண்டிருக்கும்
எனக்கான கவிதையை யாரேனும்
எழுப்பி விடாதீர்கள்!
கனவுகளுக்கு வலிக்கப் போகிறது!

எங்கோ மோனத்தில் உறைந்திருக்கும்
எனக்கான கவிதையின் மீது யாரேனும்
தண்ணீர் தெளித்து விடாதீர்கள்!
தவம் கலைந்து விடப் போகிறது!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
உடன் இருந்தது இப்போது
ஊடல் கொண்டிருக்கிறது!
ஒளிர்ந்து கொண்டிருந்தது இப்போது
ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது!
ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது;
ஓடி விடவில்லை என்பதை
நான் உணர்ந்தே இருக்கிறேன்!
எனக்கான குயில்மொழி போல்
எனக்கான மழைத்துளி போல்
என் கவிதை எப்போதும்
என்னுள்ளே இருக்கிறது!
ஓய்வெடுக்கட்டுமே! தவறென்ன!
காத்திருக்கிறேன்!

என்றேனும் ஓர் நாள் நான்
எனக்கான கவிதையை எழுதிக் கொள்கிறேன்!
என்றைக்கு என் தமிழுக்கு தலைவலிக்குமோ?
என்றைக்கு என் கவிதைக்கு கால்வலிக்குமோ?
ஓய்வெடுத்து ஓய்ந்தபின்
என்றொரு ஓய்வெடுக்கும் தருணத்திற்கென
என்னை என் கவிதை தேடுமோ,
என்றதன் தவம் கலைத்து தன்
கண் திறந்து பார்க்குமோ?
அன்றும் என் மைக்குப்பி
அதற்கெனக் காத்திருக்கும்
அழகான வைர வரிகளுடன்!
வைரம் பாய்ந்த வரிகளுடன்!
எவர்க்கும் கவலை வேண்டாம்!!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
வரும்போது வரட்டுமே!
எங்ஙனமேனும் அன்றொரு கவிதையை
எனக்கென எழுதிக் கொள்கிறேன்!
அதுவரை எனக்கெனவும் காத்திரு
என் தமிழே!
என் அமுதே!

எனக்கெனவும் காத்திரு!

Friday, September 11, 2015


என்னைப் போல் அவனுக்கும்
கவிதை பிடித்திருந்தது!
கண்ணனைப் பிடித்திருந்தது!
குயில் பாட்டும்
குழலோசையும்
குரங்கையும் கூடப் பிடித்திருந்தது!
தமிழ் பிடித்திருந்தது;
தன்மானம் பிடித்திருந்தது;
இடைமறிக்கும் பால், மதம்
இனம் உடைத்தெறியும்
சமநிலை பிடித்திருந்தது!
ஏகாந்தம் பிடித்திருந்தது;
பேரமைதியையும் பேரிரைச்சலையும்
கூட்டுச் சேர்த்து ஆனந்தக்
கூத்தாடப் பிடித்திருந்தது!

விடியல் பிடித்திருந்தது;
விடுதலை பிடித்திருந்தது;
பெருஞ்சிறகு விரிக்கும்
நெடுந்தொலைவு பயணங்களையும்;
சிறு காயமெனத் துடைத்தெறியும்
நெருஞ்சி முள் நிமிடங்களையும்
கடும் கண்டனங்களையும்
கடின காலங்களையும்
எதிர்கொள்ளும் துணிவையும்;
எல்லையில்லா பேரன்பையும்
எப்போதும் பிடித்திருந்தது!
எல்லோரையும் எல்லாவற்றையும்
எப்போதும் நேசிக்கப் பிடித்திருந்தது!
அதனாலேயே அவனை
அவனாகவே எல்லோருக்கும்
அவ்வளவு பிடித்திருந்தது!
அவனுக்குப் பிறகும்
அளவு கடந்த
அன்புடன் அவனை
அப்படியே பிடித்திருக்கிறது!

இத்தனைக்கும் காரணம்
ஒரு வேளை
அவன் என்னைப் போல்
இருந்ததனாலோ என
இருமாப்புக் கொள்ளத்
தோன்றுகிறது!
இல்லை! இல்லை!
நான் அவனைப்போல்
இருப்பதும் கூட
அவனைப் பற்றிய
இத்தனை புரிதலுக்கும்
காரணமாக இருக்கக் கூடும்!

உன்னைப் போல்
எவரும் உண்டோ?
பாரதி!
என்னைப் போல்
ஒருவனடா நீ!!!!!

பாரதியார் நினைவு நாள்
இன்று!
Kanavu Mei pada Vendum!!!!
Long Live your thoughts, Poems n’ your Dreams!
Remembering National Poet Subramaniya Bharathi!!!

11.12.1882- 09.11.1921