எங்கோ உறங்கிக்
கொண்டிருக்கும்
எனக்கான கவிதையை யாரேனும்
எழுப்பி விடாதீர்கள்!
கனவுகளுக்கு வலிக்கப்
போகிறது!
எங்கோ மோனத்தில்
உறைந்திருக்கும்
எனக்கான கவிதையின் மீது யாரேனும்
தண்ணீர் தெளித்து விடாதீர்கள்!
தவம் கலைந்து விடப் போகிறது!
வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
உடன் இருந்தது இப்போது
ஊடல் கொண்டிருக்கிறது!
ஒளிர்ந்து கொண்டிருந்தது
இப்போது
ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது!
ஓய்வெடுத்துக் கொண்டுதான்
இருக்கிறது;
ஓடி விடவில்லை என்பதை
நான் உணர்ந்தே இருக்கிறேன்!
எனக்கான குயில்மொழி போல்
எனக்கான மழைத்துளி போல்
என் கவிதை எப்போதும்
என்னுள்ளே இருக்கிறது!
ஓய்வெடுக்கட்டுமே! தவறென்ன!
காத்திருக்கிறேன்!
என்றேனும் ஓர் நாள் நான்
எனக்கான கவிதையை எழுதிக்
கொள்கிறேன்!
என்றைக்கு என் தமிழுக்கு
தலைவலிக்குமோ?
என்றைக்கு என் கவிதைக்கு
கால்வலிக்குமோ?
ஓய்வெடுத்து ஓய்ந்தபின்
என்றொரு ஓய்வெடுக்கும்
தருணத்திற்கென
என்னை என் கவிதை தேடுமோ,
என்றதன் தவம் கலைத்து தன்
கண் திறந்து பார்க்குமோ?
அன்றும் என் மைக்குப்பி
அதற்கெனக் காத்திருக்கும்
அழகான வைர வரிகளுடன்!
வைரம் பாய்ந்த வரிகளுடன்!
எவர்க்கும் கவலை வேண்டாம்!!
வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
வரும்போது வரட்டுமே!
வரும்போது வரட்டுமே!
எங்ஙனமேனும் அன்றொரு
கவிதையை
எனக்கென எழுதிக் கொள்கிறேன்!
அதுவரை எனக்கெனவும் காத்திரு
என் தமிழே!
என் அமுதே!
எனக்கெனவும் காத்திரு!
No comments:
Post a Comment