Friday, September 11, 2015


என்னைப் போல் அவனுக்கும்
கவிதை பிடித்திருந்தது!
கண்ணனைப் பிடித்திருந்தது!
குயில் பாட்டும்
குழலோசையும்
குரங்கையும் கூடப் பிடித்திருந்தது!
தமிழ் பிடித்திருந்தது;
தன்மானம் பிடித்திருந்தது;
இடைமறிக்கும் பால், மதம்
இனம் உடைத்தெறியும்
சமநிலை பிடித்திருந்தது!
ஏகாந்தம் பிடித்திருந்தது;
பேரமைதியையும் பேரிரைச்சலையும்
கூட்டுச் சேர்த்து ஆனந்தக்
கூத்தாடப் பிடித்திருந்தது!

விடியல் பிடித்திருந்தது;
விடுதலை பிடித்திருந்தது;
பெருஞ்சிறகு விரிக்கும்
நெடுந்தொலைவு பயணங்களையும்;
சிறு காயமெனத் துடைத்தெறியும்
நெருஞ்சி முள் நிமிடங்களையும்
கடும் கண்டனங்களையும்
கடின காலங்களையும்
எதிர்கொள்ளும் துணிவையும்;
எல்லையில்லா பேரன்பையும்
எப்போதும் பிடித்திருந்தது!
எல்லோரையும் எல்லாவற்றையும்
எப்போதும் நேசிக்கப் பிடித்திருந்தது!
அதனாலேயே அவனை
அவனாகவே எல்லோருக்கும்
அவ்வளவு பிடித்திருந்தது!
அவனுக்குப் பிறகும்
அளவு கடந்த
அன்புடன் அவனை
அப்படியே பிடித்திருக்கிறது!

இத்தனைக்கும் காரணம்
ஒரு வேளை
அவன் என்னைப் போல்
இருந்ததனாலோ என
இருமாப்புக் கொள்ளத்
தோன்றுகிறது!
இல்லை! இல்லை!
நான் அவனைப்போல்
இருப்பதும் கூட
அவனைப் பற்றிய
இத்தனை புரிதலுக்கும்
காரணமாக இருக்கக் கூடும்!

உன்னைப் போல்
எவரும் உண்டோ?
பாரதி!
என்னைப் போல்
ஒருவனடா நீ!!!!!

பாரதியார் நினைவு நாள்
இன்று!
Kanavu Mei pada Vendum!!!!
Long Live your thoughts, Poems n’ your Dreams!
Remembering National Poet Subramaniya Bharathi!!!

11.12.1882- 09.11.1921

No comments:

Post a Comment