Monday, January 5, 2015

திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
     ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
     மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
     போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 21

காலை விடியுதிங்கே! கதிர்மதியம் விரியுதிங்கே!
சாலை வழியிலெல்லாம் உன் சங்கநாதம் கேட்குதிங்கே!
ஞாலம் உனைத் தொழுதே நற்கதி எய்துதிங்கே!
நாளைப் போதெதற்கு இன்றேயெனக் கருள்வாயே என்றுன்
தாள் பணிந்தேன்! தாமோதரா! தளிர் விழிகள் திறந்தெழுவாய்!
பாலை துளிர்த்திடவே பாலமுதம் சொரிந்திடவே
மானமுகில் பொழிந்திடவே மாலவனே கண்திறவாய்!
யாவும் நீயே என்றே யாம் உன் சரணானோம்! 
ராகமலர் கொண்டு பாக்கள் பல புனைந்தோம்;
லாவகமாய் துயரம் நீக்கி நன்மாற்றமே நல்கிடுவாய்!
வானக் கொடை போலே என் அகம் காத்திடவே
வந்தருளும் நேரமிது! வரதனே! கண் மலர்வாய்!
என்றென் எண்ணமெல்லாம் இப்போதே எடுத்துரைத்து
கண்ணனை எழுப்பிடவே கிளம்பேலோர் எம் பாவாய்!
-காஞ்சனா

Sunday, January 4, 2015

திருப்பாவை பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
     கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
     வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
     நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
     இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்



எம் பாவை 20

ஏதோ ஒன்றில் தேடுகையில் எதிர்படும் உன் இருப்பு;
எதில் தேடினாலும் எல்லாவற்றிலும் உன் சிரிப்பு;
கேட்காத புதுவடிவில் இசைக்கிறது உன் வேங்குழல்;
பார்க்காத உருவொன்றில் பளிங்கு போன்ற உன் முகம்;
பாரதம் சொல்லாத பார்த்தசாரதியின் முகம்தனை
பாவையர் யாமறிவோம்! பார்கடல் அரசே! உன்
கொண்டல் கொண்டையில் சூடி மகிழ்ந்திடவே
 தொடுத்துக் கொணர்ந்தோம் யாம் மலர்ச்சரங்களை
விழித்தன வண்டினங்கள் மலர்களின் மனத்தில்!
 விழித்தன சேவல்கள் அம்மலர்களின் ஒளியில்!
வாச மலர்கள் உன் வாசலில் காத்திருப்பதைக்
கண்டும் காணாமல் நீ மட்டும் உறங்குதியோ!
உறங்குவதாய் நடித்தனையோ!
அன்பைப் பகிர ஆண்டாளுக்கு மட்டுமே உரிமை
உண்டெனில் என்னை நித்தம் ஆண்டானே!
நானும் உன் ஆண்டாளே! 
உன் காக்கும் கரம் கொண்டு என்னைக் காத்திடவே
உடன் வருவாய் கண்ணா என்று நான் புலம்புவதை 
புள்ளினங்கள் கூவும்முன் பூவினங்கள் பூக்கும் முன் 
அண்ணலின் காதில் உரையேலோர் எம் பாவாய்!

-காஞ்சனா



Saturday, January 3, 2015

திருப்பாவை பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
     மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 19

நாளொரு நடனம் புரிந்திடும் ரமணா!
நானொரு விளையாட்டுப் பொருளோ உன் கையில்!
கார்முகில் வண்ணம் யாவும் மேனியில் அணிந்தாய்!
காலை விடிந்திடவே எமக்குக் கதிரென வந்திடுவாய்!
மாலையும் மணம் வீசும் மற்றவையும் குளிர்
பாதம் பணிந்து நின் வேங்குழலோசையில் லயித்திருக்க
நான் மட்டும் தனித்திருப்பேனோ! தரிசனம் தந்திடுவாய்!
காக்கும் தொழில் ஒன்றே நின் தொழில் அன்றோ!
நாராயணா! நற்றெய்வமே! எனைக் காத்திடுவாய்!
சித்தம் வைத்திட்டேன்; என் செல்லெல்லாம் நிறைத்திட்டேன்!
பித்தம் களைந்திட்டே உன் பிள்ளைக்கருள் புரிவாய்!
வருவாய் கண்ணா! மறை அருள்வாய் கண்ணா!
திரை நீக்கி சிறை போக்கி வந்தெனைக் காத்திடுவாய் கண்ணா!
-காஞ்சனா




Friday, January 2, 2015

திருப்பாவை பாசுரம் 18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
     நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
     வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
     பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
     வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 18

அன்னங்கள் நிறைந்திருக்கும் அல்லிக்குளம்;
ஆம்பல்கள் மலர்ந்திருக்கும் அரண்மனைக்குளம்;
இசை மயக்கியிழுக்கும் சுற்றம் நிறை குளம்;
ஈக்கள் மொய்க்கும் தேன்பூக்கள் நிறை குளம்;
உன் தோட்டத்துக்குளம்!

உன் உச்சிக் கூந்தலுக்கு பூவளர்க்கும் குளம்;
ஊதுவாய் என்றே உன் மெளனக் குழலின் இசையை
எதிர்பார்த்து உயிர் காத்து எட்டுத்திசைகளிலும்
ஏகாந்தத்தில் விழி பூத்திருக்கும் எழில் குளம்;
என்றும் உனக்கான என் குளம்!

ஐந்தறிவிற்கும் தாகம் தணிக்கும் குளக்கரையில்
ஒற்றைக் குயிலாய் நான் உன்னை அழைப்பது
ஓதுதற்கரியானே! இன்னுமா கேட்கவில்லை!
மெளனம் கலைப்பாய் கண்ணா! 
அஃதொரு அன்றிலென அவனியோர் இகழும்முன்
எனக்கொரு வார்த்தை சொல்! 
உனக்காய் காத்திருக்கிறது எம் இல்
என உரக்க உரைப்பேலோர் எம்பாவாய்!
-காஞ்சனா

Thursday, January 1, 2015

திருப்பாவை பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
     எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
     எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
     உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
     உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 17

அன்பின் பேரொளியே! அரசர்க்கெல்லாம் அரசே!
ஆனந்தக் கண்ணா! ஆலிலை மன்னா!
இன்குழலுக் குரியோனே! இச்சகம் காப்பவனே!
ஈன்ற தந்தையே! ஈரன்னை மைந்தனே!
உயிரே! உணர்வே! உடையே! உலகே!
ஊனே! ஊற்றே! உன்னைச் சரணடைந்தேன்!
எல்லையில்லாதவனே! என்னைக் காத்தருள்வாய்!
ஏழைப் பங்காளனே! ஏழுமலையானே!
ஐம்பூதத்துக்கு அதிபதியே!
ஒப்பிலாதவனே! ஒளியின் ஒளியே!
ஓர் வார்த்தை சொல்லிடுவாய்!
நல்வார்த்தை சொல்லிடுவாய்!
என நித்தம் பணிந்திட்டேன்!
ஏனோ நீ இன்னும் இரங்கவில்லை!
நீ என்னிடம் பேசவில்லையெனில் 
நான் உன்னைத் தவிர வேறு 
யாரிடமும் பேசுவதாய் இல்லை!
என்ன பிடிவாதம் இது?
எழுந்தருள்வாய் கண்ணா! 
என்னைக் காக்கும் நேரமிது!
கொஞ்சம் இரங்கி வா!
என்றே அவனிடத்தில் என்னிலையை
எடுத்துரைப்பீர் எம்பாவாய்!
-காஞ்சனா

"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்" என்ற நற்செய்தியுடன், சாய் பாபா ஆரத்தியுடன், வைகுந்த வாசல் திறப்புடன், கந்தர் சக்ஷ்டி கவசம், திருப்பாவை, திருவெம்பாவையுடன்.  தூறல், சாரல் அல்லது பன்னீர் தூவல் என்று இனங்காண முடியாத நல்லாசீர்வாதத்துடன் இந்த நன்னாள் புத்தாண்டு விடிந்துள்ளது. இறைவா! இனி வரும் ஒவ்வொரு நொடியையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். அமைதியும், ஆனந்தமும், ஆரோக்கியமும், நிம்மதியும்  அன்புடன் நீயெனக்கருள்வாய்!சரணம்! சரணம்!

புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இப்போதைய மனநிலைக்கு மனதிற்கு நம்பிக்கையும், தைரியமும், நிம்மதியும், திருப்தியும் கொடுக்கும் வியாழக்கிழமை பாபா பூஜை முடித்து, வைகுந்த ஏகாதசிக்காக பெருமாளையும் சேவித்து வந்தாயிற்று. அம்மா, அப்பாவுடன் கோவிலிலிருந்து திரும்புகையில் குதிரைகள், யானைகள் சகிதம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால பார்த்தசாரதி நகர்வலம் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராமல் பெய்த சாரல் மழையில் நனைந்தவாறு பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருக்கையில் நாதஸ்வரத்தில் வாசித்த இசை கவனத்தை ஈர்த்தது. என்ன பாடல் இது? தனன்ன நான தனன்ன நானனா....தனன்ன நான தனன்ன நானனா....ஒருவர் கனவு ஒருவர் விழியிலே,,,,கண்ணா வருவாயா! மீரா கேட்கிறாள்! வாஹ்! What a timing ya? இதற்காகவே மனம் சொல்கிறது. கண்ணன் யாவையும் பார்த்துக் கொண்டுதான், கேட்டுக் கொண்டுதான், கவனித்துக் கொண்டுதான் என்னுடனே இருக்கிறான். Whatever Happens, Undoubtedly Its going to be a Really Very Happy New Year! Thanks The Lord!



யாவருக்கும் விடியட்டும் புத்தாண்டு;
யாவருக்கும் விரியட்டும் புத்தொளி;
யாவருக்கும் அமையட்டும் புது வாழ்வு;
யாவருக்கும் பிறக்கட்டும் புது நம்பிக்கை;
யாவருக்கும் நிறைவேறட்டும் நல்லாசைகள்;
யாவருக்கும் கிடைக்கட்டும் நல்லாசிகள்;
எங்கும் நிலவட்டும் மகிழ்ச்சி;
எங்கும் விளையட்டும் அமைதி;
எங்கும் செழிக்கட்டும் நிம்மதி;
எங்கும் எதிலும் என்றும்
வளமே பயக்கட்டும்
நலமே பயக்கட்டும் 2015!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!
-காஞ்சனா