Monday, December 28, 2015

இறை எனப்படுவது யாதெனின்


ஆண்டவன் சன்னதியில் அவன் (ஆண்/பெண் கடவுள்கள் இருவருக்கும் இது பொருந்தும்) முன் நிற்கையில் எனக்கு எந்த வேண்டுதலும் இருப்பதில்லை. ஏனோ என் மனம் ஏதுமற்றதாகி விடுகிறது My Mind goes blank என்றபோது ஏராளமான வியப்புக்குறிகள் பாவிக்கின் கண்களிலும் நெற்றியிலும் படர்வதைக் காண முடிந்தது. பாவ்கட் காளி மாதா கோவிலைப் பற்றிய உரையாடலின் ஒரு பகுதிதான் அது. பரோடாவிலிருந்து சில மணி நேர பயணத்தில், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கும் காளி கோவிலின் முக்கியத்துவத்தைப் பற்றி பாவிக் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கு உறைந்து அருள்புரியும் காளியிடம் எதை வேண்டினாலும் அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையையும் பற்றி அவன் சொல்லப் போகத்தான் மேற்கண்ட உரையாடல். அது எப்படி சாத்தியமாகும்? I didn’t expect such a reply from a matured person like you. வியப்பு குறையாமலே வினவியவனுக்கு, என்ன செய்வது? நான் அப்படித்தான் என்றபோது அவனால் அதை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இல்லை! தீதி! பிரார்த்தனைகளற்று எப்படி இருக்க முடியும்? அதற்காகத்தானே கோவிலுக்குப் போகிறோம் என்று இழுத்தான். அதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. Maturity…மனம் பண்படுகையில் அது தானாகவே நமக்குள் நிகழ்வதை நாம் ஒரு பார்வையாளனாகத்தான் பார்த்தவாறு உணர்ந்தவாறு விளக்க இயலாமல் நகர வேண்டியிருக்கிறது.

பக்தி இல்லை என்று ஒரு சதவிகிதம் கூட சொல்ல முடியாத பக்தி மார்க்கம் அது. கோவில் கருவறையில் கடவுளும் நாமும் மட்டும் இருப்பதை உணரும் தருணம், அதோ அந்த பரம்பொருளை, பெரும்சக்தியை, பேராற்றலை  நன்றாகக் கண்திறந்து பார். உள்வாங்கிக் கொள். உன்னோடு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடு. பிறகு பேசிக் கொள்ளலாம். நன்றி சொல்லலாம், சண்டை போடலாம், கேள்வி கேட்கலாம், விண்ணப்பிக்கலாம், வேண்டுதல்களை அடுக்கலாம் என்ற பண்பட்ட மனதின் பக்குவம் அது. அது ஒருநாளிலும் வந்து விடலாம். வாழ்நாள் முழுவதும் வராமலும் போகலாம். அது போல்தான் என் பிரார்த்தனைகளும் என்பது புரிகிறது. இது இங்குதான் என்பதில்லை. இன்றுதான் என்பதில்லை. வாசலில் நின்று பார்த்துவிடக் கூடிய தெருக்கோடி பிள்ளையாரானாலும் சரி, பல மணி நேர காத்திருப்புக்குப் பின் சில நொடிகள் பார்த்துவிட்டு நகரும் திருப்பதி பெருமாளானாலும் சரி, இதே நிலைதான். இயல்பாக எனக்கு வருவதைத்தானே நான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்றாடம் குளித்துவிட்டு நேராக பூஜை அறைக்குச் செல்ல வேண்டும்; சாமி கும்பிட்டுவிட்டுத்தான் வேறு எந்த வேலையும் என்று பழகி விட்ட எங்கள் குடும்ப வளர்ப்பும் வழக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஐந்து கரத்தினை என ஆரம்பித்து வினாயகர் அகவலும், கந்த சக்ஷ்டி கவசமும், சக்தி மாலையும், திருவாசகமுமாய் தொடர்ந்து நாராயணி நமோஸ்துதே என்று மனதார அம்பாளுக்கு குங்கும அபிக்ஷேகமும் செய்வித்து, என் இல்லத்தினர் ஒவ்வொருவரும், சுற்றமும், நட்பும், உலகத்தார் அனைவரும் வாழ்க வளமுடன்\! வாழ்க வளமுடன்!  வாழ்க வளமுடன்! என மனதுக்குள்ளாகவே விழுந்து வணங்கி காலைப் பிரார்த்தனையை முடிக்கையிலேயே எல்லா தெய்வங்களும் என் முன் பிரசன்னமாகி விடுவதை உணர்ந்த பின், இன்ன பிற கோவில்களில் மனம் நிச்சலனமற்றுப் போவதற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? நினைவு தெரிந்து இதைத்தானே நான் தினமும் செய்து வருகிறேன். இதைத்தானே என் வீட்டில், ஒவ்வொருவரும் செய்து வருகிறோம்.

திருநீறும் குங்குமமும் கமகமக்க ,காலம் காலமாய் எங்களைக் காத்தவாறு அருள் புரிந்து அமர்ந்திருக்கும் அண்ணாமலையும், உண்ணாமுலை அம்மையும், நடுநாயகமாய் வீற்றிருக்கும் அம்பாளும், திருப்பதி ஏழுமலையானும், லட்சுமியும், சரஸ்வதியும், இயேசுவும், மரியாளும், அல்லாவும், இன்னபிற தெய்வங்களும் என எல்லா சாமியும் ஒன்றுதான், என்றுதான் நாங்கள் வளர்க்கப் பட்டிருக்கிறோம் என நினைக்கையில் பெருமையாகவும் சந்தோக்ஷமாகவும் இருக்கிறது. அழகாய், அன்பாய், அறிவு பூர்வமாய் வளர்த்த அப்பாவுக்கு நன்றி. சிவபுராணமும், தேவாரமும், திருவாசகமும், கந்த சக்ஷ்டி கவசமும், கந்த குரு கவசமும்,  திருப்பாவையும், திருவெம்பாவையும், மாரியம்மன் தாலாட்டுமாக அனுதினமும் பக்தியைப் பாடல்களாகக் கேட்டவாறு நாங்கள் வளர, கற்றுக் கொள்ள ஆசானாக இருந்த தாத்தாவுக்கு நன்றி. கற்றுக் கொடுத்த தமிழுக்கு நன்றி. நாங்கள் நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறோம்.

நெஞ்சகமே கோயில்;
நினைவே சுகந்தம்;
அன்பே மஞ்சன நீர்;
பூசை கொள்ள வாராய்!
பராபரமே!
என்ற பாடல் வரிகளின் வீரியம் புரிகிறது.

தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே! வேறெங்கே? என உள்நோக்கிப் பார்க்கச் செய்கிறது.
மதத்தின் பிரதிநிதியாக இங்கு கடவுள் பார்க்கப்படும் நிலையைப் பார்க்கையில் கவலையாக இருக்கிறது.
யாவரும் இன்புற்றிருக்க வேண்டுவதேயல்லாமல் வேறொன்றறியேன்! பராபரமே!!!

பயணங்கள் முடிவதில்லை!!!

No comments:

Post a Comment