Tuesday, July 28, 2015



போர்வைக்குள் சுருண்டு கொண்ட
வதோதராவின் இரண்டாம் இரவின்
விடியலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்!

தூக்கமற்ற ஒரு இரவு
துக்கத்தின் அடர்த்தியை
அடைத்துக் கொண்டு
கடந்து போனது என்று
வேண்டுமானால் சொல்லலாம்!
ஏனெனில் அவ்வளவு துயரத்தை
ஏற்க முடியாத அளவிற்கு
சுமந்து கொண்டு விடிந்திருக்கிறது
இந்த காலைப் பொழுது!

என் தலைக்கு மேலிருக்கும்
கண்ணனின் மயிலிறகைப் பார்த்தவாறு
எப்போதும் போல் தான்
எழுந்திருக்கிறேன்! ஆனால்
பிரிவு ஒரு
பினந்தின்னிக் கழுகைப் போல்
என்னைச் சுற்றி வட்டமிட்டு
அச்சுறுத்திக் கொண்டிருப்பதை
இயல்பாய் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை!

எனக்கு மட்டும் தான் இப்படியா?
என்னைப் போல் ஒரு தலைமுறையே
தவித்துத் தட்டாமாலை சுற்றி
தடுமாறிக் கொண்டிருக்கிறதா
எனப் புரியவில்லை!
இந்த மனிதர் என்னை
இத்தனை தூரம் பாதித்திருக்கிறாரா?
இந்த மனிதரை நான்
இவ்வளவு ஆதர்சித்திருக்கிறேனா?
இந்த திடீர் பிரிவு
இப்படி வாட்டி வதைக்கிறதா?
எனத் தெரியவில்லை!

இரவெல்லாம் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த
இசைக் கோப்புகளில்
இனிப்பு, காரம் என எல்லாம்
இருந்ததாகத் தான் நினைவு-எனினும்
இறுதியாக ஞாபகத்தட்டுக்களில் ஏனோ
இன்று கசப்பே எஞ்சியிருக்கிறது!

அறம் பாடிவிடக் கூடாதென
அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும்
இத்தனை விரைவில் நான்
‘இவ்வாறு எழுதிக் கொண்டிருப்பேன்
எனக் கனவிலும் நினைக்கவில்லை!

இந்த அதிகாலைத் தூறலை அனுபவிப்பது
அவ்வளவு இலகுவானதாக இல்லை!
இந்த அடிமனதின் தேடலைக் கடப்பது
அவ்வளவு சுலபமானதாக இல்லை!

என் ,மொழி பேசிய ஒரு
எளிய அறிவாளியை;
எங்களை எங்களுக்குக்
கண்டுபிடித்துக் கொடுத்த
ஒரு மாமனிதரை;
ஏழ்மையையும் ஏளனங்களையும்
பாழ்பட்ட மதச்சமுதாயத்தின்
புறக்கணிப்புக்களையும் புறந்தள்ளி
தன் இறுதிநொடி வரை
அறிவையும் அமைதியையும்
அன்பையும், ஆற்றலையும்
ஞானச் செறிவையும்
போதித்துக் கொண்டிருந்த ஒரு
போதிமரத்தின் வேரை
விழுதாக்கி இயற்கை தனக்குள்
வாங்கிக் கொண்டதை
விழுங்க முடியவில்லை!

அதிகம் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்
என அறிவுக்குப் பட்டாலும்
அதிர்விலிருந்து வெளீவரமுடியவில்லை!
என் கண்களுக்குத் தெரிந்த,
என் அறிவுக்குப் புலப்பட்ட,
ஒரு இளைய தலைமுறையையே
எருவிட்டு உருவாக்கிய
ஒரு பெரிய மனிதரின் பிரிவு
அத்தனை எளிமையாக
ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!
இந்தத் தருணம்
இந்த நிமிடம்
அத்தனை எளிதாகக்
கடந்து போகக்கூடியதாக இல்லை!

என்னை மிகவும் பாதித்த
இரண்டு வரிகளை
கே.பாலச்சந்தரிடம் இருந்து
கடன் பெற்றுக் கொள்கிறேன்!

“இந்தப் புனிதப் பயணம்;
ஒரு புதிய சரித்திரம்!”

இதுவும் கடந்து போகும்
எனத் தெரியும்-எனினும்
இறைவா!
இறைவா!!!!!
இந்த மனதை
கொஞ்சம் அமைதிப்படுத்து!!!!

Monday, July 27, 2015


இந்த மழை
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்று தெரியாமல் போனது!
இந்த மனம்
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்பது தெரியாமல் போனது!
ஆற்றாமைக்கு ஆறுதல் சொல்ல
அழுகையால்தானே முடியும்
என்பது புரியாமல் போனது!
எங்களை
கனவு காணச் சொல்லிவிட்டு
எங்கே சென்றீர்கள்
ஐயா?
“கனவு காணுங்கள்”
என்ற தாரக மந்திரம்
ஒரு புதிய தலைமுறையையே
உருவாக்கியது என்பதை
யாரால் மறுக்க முடியும்?
இந்தியா 2020ல்
இவ்வுலகின் வல்லரசாகும்
என்ற உங்கள்
கனவு நிஜமாக
இன்னும் ஐந்து வருடங்களே
இருக்கையில் இவ்வளவு
அவசரமாய் ஏன் சென்றீர்கள் 
எங்கள் ஆசானே?
ஏவுகணைகளின் தந்தையே!
ஏழைக்குடிசையில் பிறந்தாலும்
ஏற்றமிகு எண்ணமும்
செயலும் இருந்தால்
ஏட்டில் ஏறலாம்;
நாட்டின் தலைவனாகவும் ஆகலாம்
என்று வாழ்ந்து காட்டிய
என்பத்து மூன்று வயது இளைஞரே!
என்ன அவசரமோ?
இளைஞர்கள் மத்தியில்
விரிவுரையாற்றிக் கொண்டே
விடை பெற்றீர்?
உங்கள் கையசைவைப் பெற்ற
உற்சாகப் பெருமிதத்தில்
உத்வேகத்துடன் நாங்கள்
நின்ற தருணங்களை
எங்கள் கல்லூரி வளாகம்
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கும்
உதாரண புருக்ஷரே!
உங்கள் பாதம் பட்ட மண்
எங்களைப் போல் பலரை
கனவு காண
வைத்துக் கொண்டிருக்கிறது!
கண்ணீரால் நிரப்பிவிட முடியாது!
நீங்கள் கண்ட
கனவுகளால்
இட்டு நிரப்புகிறோம்
நீங்கள் விட்டுச் செல்லும்
வெற்றிடத்தை!
எங்கள் கண்களின் வழியே
உங்கள் கனவுகளின் வழியே
நீங்கள் நீடூழி வாழ்வீர்!
ஆட்சி முடிந்த நாளன்றே
ஆசிரியராய் களம் கண்ட
அரசியல் பேசாத அரசியலாளரே!
அணுகுண்டும், ஏவுகணை ஆராய்ச்சியும்
அமைதிக்கு அவசியம் என்று
அறிவியல் போதித்த ஆசானே!
ஏழ்மையினின்று ஏணியேறி
ஏழு கடல் தாண்டிய பின்னும்
எளிமை போதித்த
எம் பாரதரத்னாவே!
கவலைப் படாமல்
சென்று வாருங்கள்!
எங்கள் கனவுகள் மெய்ப்படும்!
சத்தியமாய்,
உங்கள் கனவுகளும் கூட!
இந்தச் சுமையை
இறக்கிவைக்க முடியவில்லை!
இறுதி வணக்கங்கள் எங்கள்
இந்தியாவின் முதல் குடிமகனே!
இப்படியன்றோ வாழ வேண்டும்!
இப்படியன்றோ சாக வேண்டும்!
விடை தருகிறோம்
விஞ்ஞானக் கவிஞரே!
இனி
நாங்கள் சுமக்கிறோம்
உங்கள் கனவுகளை
எங்கள் கண்களிலும்,
அக்னிச் சிறகுகளை
எங்கள் தோள்களிலும்!
Can’t Substitute you Sir
We Will Miss You Forever!
Rest In Peace
Bharatratna Dr. A.P.J.Abdul Kalam!!!








நான் தனியாகத் துவைத்த துணிகளை
நாங்கள் சேர்ந்து அலசிக் கொண்டிருக்கிறோம்!
இரண்டாம் நாள் விடிந்துவிட்டது;
இன்னுமா? என்கிறேன் நான்!
என்ன? போதுமா? என்கிறாய் நீ!
போதுமெனச் சொல்வேனோ என்
போதி மழையே!
யாதும் உயிர்க்க- இங்கு
யாவும் தழைக்க
பொழியும் வரை பொழி!
வழிகள் தெளிவாகட்டும் என்கிறேன்!
விழிவளி எங்கும் எதையும்
விட்டு விடாமல்
வழிய வழியத் தொடர்கிறது,
மழையின் பாடல்!!!

“புத்தம் புது காலை;
பொன்னிற வேளை…..”

Sunday, July 26, 2015

Tu Chahiye




Its drizzling all over;
Its drizzling all over!
Making me breathless
Everytime you come
Embracing me in and around
Drizzling all over!
Oh!
Its drizzling all over!

Framing every moment
Of our Togetherness
Not uttering a word though,
Not glancing for a while though,
Framing all of them
Inside my Eyes
To let it replay.
Oh!
Its drizzling all over!

The Hangover persists
Rewinding every beautiful
Precious Crazy moment within
Drenching me all over!
Oh!
Its drizzling all over!
N’ I wish
It lasts forever!!!

The Desire gets stronger
To have you near forever;
The Want gets denser
To say, Yes!
I Want you Here!
Right now! Right now!
I Want you Here!
Forever! Forever!!!

Oh!
Its Drizzling All Over! N’
Let it Last Forever!!!!

It’s a rainy Baroda Morning!!!!

Saturday, July 25, 2015


சாரலாய்த் தொடங்கி
தூறலாய் பெருமழையாய்
ஊறும் அமுதாய்
தீராக்காதலுடன் என்னை
அணைத்துக் கொண்டிருக்கிறது
நீராய் மழைப்போர்வை!

நாள் முழுவதும் தொடர்ந்த
பால்மழைப் பேச்சு
பரவசமாய் மனமெங்கும்
பரவிக் கிடக்க,
என்னைச் சுற்றிலும்
புன்னகை வீசிப் போகிறது
காதல் மழை!

நாளை ஒருவேளை
சளி பிடித்தால்
என்ன செய்வது?
நனைவதே கடனென,
என் சிறுபாதங்களால்
தண்ணீர்ப் பாதையை
அடியடியாய் அளந்தவாறு
மழையுடன் கைகோர்த்து
நகர்வலம் வருகிறேன்!

இத்தனை நாளைய மெளனத்தையும்
சுத்தமாய் துடைத்துவிட்டு
மொத்த நாளின்
அத்தனை நிமிடங்களையும்
என்னைச் சுற்றிப் பொழிந்த
வெண்ணெய் மழைக்கு
என்னைத் தவிர நான்
என்ன தர?

நனைகிறேன்!
கரைகிறேன்!
நானே மழையாகிறேன்!!
ஓயாத மழைப் பேச்சு
பாடலாய் உள்ளே
ஓடத் தொடங்குகிறது!

ஏனெனத் தெரியவில்லை!
இந்த நிமிடம்
இளையராஜாவை இணையில்லாமல்
அளவில்லாமல் அவ்வளவு
பிடித்துப் போகிறது!!
பியானோ கசிய ஆரம்பிக்கிறது…
“ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…”
Love this Amazing Magical moment!!!
Love You Raja Sir!!!
You are the Greatest!!!!



உருண்டு தவழ்ந்து தளிர்நடை பழகும்
சிறுமழலையாய் தூறிக் கொண்டிருக்கிறது
திரள் மேகத்திரையினுள் வதோதரா வானம்!

 காதுக்கு;ள் கசியும் Te Amo
காலையைக் கனவுகளுடன்
விடிய வைத்துக் கொண்டிருக்கிறது!

என் முதல் கவிதையின் போது
வகுப்பின் வெளியே தூறிக்கொண்டிருந்த
மழையின் சாயலுடன் இந்த
அழகிய காலை விடிந்து கொண்டிருக்கிறது!

எனக்கும் வெண்ணிலாவுக்கும் இடையிலான
முதலும் கடைசியுமான ஊடலை
முடிவுக்குக் கொண்டு வந்த
கடிதத்தை நினைவுபடுத்தியவாறு என்
கண்களுக்கு வெளியே நட்புடன்
தூறிக் கொண்டிருக்கிறது சாரல்மழை!

நேற்றிரவின் கடைசித்துளி விழிப்பின்போது
காதுகளுக்குள் வழிந்து கொண்டிருந்த
“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை”
கண் முன்னே காலையை
மென்தூறலாய் தூவிக் கொண்டிருக்கிறது!

மனமும் மழையும் ஒன்றினையும்
கணத்தினில் கண்கள் பனிக்க
நினைத்துக் கொள்கிறேன்!

ஆதவன் வெளிவரவில்லை- ஆனால்
ஆண்டவன் பேசத் துவங்கிவிட்டான்’
கேள்வியின் நாயகன் நான் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது
எத்தனை பெரிய வரம் என?!!

காஞ்சனை கேட்கும் போது
வஞ்சனை ஏன் என கண்ணனின்
கண்கள் கார்மேகம் எங்கும்
புன்னகை பூக்கத் தொடங்கிவிட்டன!

இந்த மயக்கும் மழைக்காலையில்
இறைவனிடம் மீண்டும் கோருகிறேன்!!
இன்னும் கொஞ்சம் சிரி கண்ணா!!
இந்த மழைக் காலம்

இப்படியே தொடரட்டும்!!!!

Friday, July 24, 2015


மழை பொழிந்த பூமி இஃதென்றால்
பிழையாகிப் போகக் கூடும்;
வறண்டு போனது என் வானம்;
மறந்து போனாயோ கண்ணா நீ?

என்னிடம் ஏதும் சொல்லாமல்
எங்கே சென்றாய் நீயென
தேடித் தொலைந்து கொண்டிருக்கிறேன்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

எங்கும் கேட்காத உன் குரலுடன்
எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன
என் செவிகள்!
கேட்க ஏதுமின்றி
தேடித் தொலைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

எங்கும் தென்படாத உன் பார்வையுடன்
எங்கோ மங்கி மறைந்தன
என் விழிகள்!
பார்க்க ஏதுமின்றி விழி
வேர்த்துக் கரைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

உன் குழலோசையும் குரலோசையும்
என் உயிர் கேட்கும் மொழியறியும்;
உன் விழியசைவும் விரலசைவும்
என் உணர்வுறைவிக்கும் வழியறியும்;
அழுது நனைத்த இமைகள் உன்
அத்தனை அசைவினையும் அறியும்
எனில் கண்ணாமூச்சி போதும் கண்ணா.
என் கண் முன்னே வந்து விடேன்!
என்னையும் சேர்த்து
இந்த உலகம் உயிர் கொள்ளட்டும்!!!