Tuesday, January 6, 2015

திருப்பாவை பாசுரம் 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
     பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
     கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 22

கடவுளென்றோ உன்னைக் காணாமல் தவித்தோம்!
கண்ணா! விடைகளுக்கப்பாற்பட்ட விடியல் நீயென்றன்றோ
உன் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தோம்!
ஒரு பிறவியில் அன்னையாய், ஒன்றில் தங்கையாய்
மற்றொன்றில் தோழியாய் வேறொன்றில் பக்தையாய்
ஓயாமல் உன்னுடன் பிறவிகள் வளர்த்தும் ஒரு
ஓரத்தில் கூட எனக்கான புன்னகை சிந்த 
நேரமில்லையோ உனக்கு! கண்ணா! இதை நான்
பாராமுகம் என்பேன்; பயங்கரவாதம் என்பேன்;
பிடிவாதம் என்பேன்; எப்படிச் சொன்னால்
நீ மெளனம் கலைப்பாய் என மட்டும் சொல்!
அமைதி கொள்கிறேன்!
அன்னங்களுக்கும் புறாக்களுக்கும் பைங்கிளிகளுக்கும்
அகவும் மயில்களுக்கும் கருங்குயில்களுக்கும் கூட
உன்னிடம் நேரம் இருக்கையில், எனக்கான நேரத்திற்கு
இத்தனை சோதனையா! வேதனையா! தாமதமா! 
இம்சைகள் போதும் கண்ணா! இன்னல் தீர்க்கும் நேரம் இது!
வேறெவ்வாறும் நான் சொல்ல இயலாமல்
வெறும்  ஊமையாகி நிற்கின்றேன்! கண் மலர்வாய் கண்ணா!
வேண்டிய மாற்றம் தந்தே எம்மைக் காத்தருள்வாய் கண்ணா! 
-காஞ்சனா

No comments:

Post a Comment