Tuesday, August 4, 2015



இந்தப் பிரிவு
என்னைப் பயமுறுத்துகிறது!
பிரிகிலேன்! பிரிகிலேன்!
என்றரற்றுகிறேன்!

என் கண்ணீரைத் துடைத்த
கையோடு ஒரு
புன்னகையைக் கைப்பற்றி
என்ன சொன்னாய் நீ?
என்கிறான் கண்ணன்!

என்னவென்றா கேட்கிறாய் நீ!
எனக்கும் உனக்கும் கூட
வயதாகும்;
இந்தப் பிரிவு
வந்தே தீரும்தானே
கண்ணா!
எனக்கிது வேண்டாமே!
ஏதாவது செய்யேன்
என்கிறேன்!

என்ன சொல்கிறாய் நீ!
எனக்கும் உனக்குமா?
எனக்குள் நீ வந்த பிறகு
எப்படி ஒரு பிரிவுனைக்
கொண்டு போகும் சொல்
என்கிறான் கண்ணன்!

ஏமாற்றுக்காரனே!
என்ன நான் சொல்வது?
நீ
உண்ணும் வெண்ணெயை
உன் கண்ணிலும்
வைத்தாயோ என்கிறேன்!
என்னதான் வேண்டுமடி
என் சகி!
ஏனிந்த கோபம் என்கிறான்!

சேர்ந்து நனைந்த
நாளின் முடிவில்,
உனக்கு ஜலதோக்ஷம்!
எனக்கு மட்டும் காய்ச்சலா?
உனக்குள் நான்
எனப் பொய்
உரைத்து விட்டு,
என்னைப் பிரித்துப்
பார்த்தாயோ நீ?
எத்தனை பாரபட்சம்
உனக்கு என்கிறேன்!

கண்ணை இமை
காப்பது போல்
கன்றைப் பசு
காப்பது போல்,
உன்னை நான்
காத்திருப்பேன்!
என்னைப் போல்
பார்த்திருப்பேன்!
உன்னைப் பிரிவேனோ!
கண்ணம்மா!
என்னைப் பற்றிக் கொள்ளடி
என்கிறான் கண்ணன்!

பற்று கிளையினின்று
விட்டு விடுபட்ட
ஒற்றை மயிலிறகு
காற்றில் படபடக்கிறது!

எதற்கும்
நான் உண்டென்பாய் எனில்
எதற்கெல்லாம்
நீ துணையிருப்பாய் கண்ணா?

சூட்சுமதாரியின்
சங்கம் முழங்குகிறது;
சக்கரம் சுற்றுகின்றது;
சூழ்ந்திருக்கும் உலகவியல்
எனக்குப் புரியவில்லை!

இறுதியில் தர்மம் வென்றதென
முழங்கியவனுக்குத் தெரியும்,
வென்றவன் அவன் தர்மம் மட்டுமே என!
எனவே அதைச் சொல்லாதீர்கள்!

சட்டங்களால் தண்டனை வழங்கி
இது தண்டனை அல்ல!
திருந்துவதற்கான வாய்ப்பென முழங்கி
போதுமானவரை காலம் கடத்தி
தேவைப்படும் போது
உங்கள் சட்டத்தின் சாட்டையை
நீங்களே கையில் எடுப்பீர் எனில்
எங்கே செல்கிறது
இந்த தேசம்?????

உங்கள் சீர்திருத்த முறைகளில்
உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
இன்னொரு உயிரைப் பறிக்கும் உரிமையை
இந்த தேசம் ஆதரிக்கிறதா?
ஆம்! என்றால் கொலை என்றால் என்ன?
இல்லை! என்றால் நீங்கள் செய்வது என்ன?

நான் குற்றங்களை ஆதரிக்கவில்லை;
குற்றவாளிகள் திருந்த தண்டனை
என்ற பெயரில் கிட்டத்தட்ட
ஒரு கால் நூற்றாண்டைக் கடத்தியபின்
இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு
அரசியல் சூழலுக்கேற்றவாறு
அவர் உயிரை எடுக்கும்
மரண தண்டனையைத்தான்
வன்மையாகக் கண்டிக்கிறேன்!

குற்றம் புரியும் எவர் ஒருவருக்கும்
சுற்றம் அறியாமல் எவ்வாறும்
கடும் தண்டனை தாருங்கள்!
இறுதிவரை சிறையில் அடையுங்கள்!
ஆனால் அவர்களையும் உயிருடன் வாழ
அனுமதியுங்கள்!!!

இந்த தேசம்
அமைதியை போதிக்கிறது!
அஹிம்சையை போதிக்கிறது!
ஆனால் அவ்வப்போது
அதுவே தண்டனையென்ற பெயரில்
அத்துமீறி கொலைகளையும் செய்கிறது!

காலம் தவறிய தீர்ப்புகள்..
எக்காலத்திலும் சரியாகவே இருப்பதில்லை!

Say No to Capitol Punishment!
I do!
உறக்கம் இன்றி நான் தவிக்கும்
இது போன்ற இரவுகள் யாவும்
உன் என் மொட்டைமாடிக் கதைகளைக்
கவிதைகளாக்கிக் கொண்டேயிருக்கின்றன!
பகிர அருகில் நீயின்றி
பாரம் சுமக்கும் இந்த மனதை
படுக்கை அனுமதிக்க மறுக்கிறது
எனும் நிஜத்தை
எங்கேயோ உறங்கிக் கொண்டிருக்கும்
உன்னிடம் யார் கொண்டு சேர்ப்பது
என யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
சொல்!
எத்தனை இரவுகளைத்தான்
நான் இவ்வாறு கழிப்பது?

நீ மனைவியாய், தாயுமாய்;
நான் இல்லாமலும்
இயல்பானவளாய் மாறிப் போனாய்
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்!
எனினும்,
நீ இல்லாத
என் வாழ்க்கையில் ஏனோ
நான் மட்டும் எனக்கே
யாரோவாகத்தானே இருக்கிறேன்!

எங்கே போனாய்
வெண்ணிலா நீ?
எவ்வளவு சொல்ல
வேண்டியிருக்கிறது உன்னிடம்?
என் யாவையும்
பகிர்ந்து கொள்ள,
பிரிதொரு உயிர்நட்பு
எனக்கேனோ வாய்க்கவே
இல்லை என்பதால்
எல்லாவற்றையும்
எப்பொழுதும் போல்
இப்பொழுதும் நிலவிடம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
எப்படியும் உன்னிடம்
சேர்த்து விடும் என!
உன்னைத் தேடிக் கொண்டே இருக்கிறது
இந்த மனது!!!!

MISS YOU SO MUCH! HAPPY FRIENDSHIP DAY!


கண்ணன் என் தோழன்
----------------------------------

என் எந்த குழப்பத்தையும்
துடைத்துத் துவைத்துலர்த்தும்
மந்திரக்கோலை உன்
மல்லிகைப் புன்னகையிலா
வைத்திருக்கிறாய்!
என்ன மாயம் செய்கிறாய் நீ?
என் கண்ணா!
என்ன மாயம் செய்கிறாய் நீ?

மகனாய் நீ மாறி மாறி
மல்லுக்கட்டி ஒப்பேற்றிய
கதைகள் ஓராயிரம்!
மணாளனாய் நூற்றிப்பதினாறு
மணம் புரிந்ததைத் தவிர,
மன்னனாக ஏதும்
செய்தாயா என்ன?
நமக்குத் தாங்காது சாமி!
மன்னர்களின் மாமனாக
மகாநடிகனடா நீ?
இவை எல்லாவற்றிற்காகவும்
உன்னை அவ்வளவு
வெறுக்கலாம் தான்!
வெறுக்கவும் நேசிக்கவும்
ஒரே மனம்தானே!

கூப்பிட்ட நேரத்தில்
வர மாட்டாய்!
காக்க வைத்துவிட்டு
எங்காவது யாரிடமாவது
கதை பேசிக் கொண்டிருப்பாய்!
பக்தர்கள் பாடு
படு மோசம்!
அவ்வாறே தொடரும்
அத்தனை ஆயிரம்
காரணங்களுக்கு நடுவில்
நல்லவனென உனக்கொரு
பெயர் தரவேண்டுமெனில்,
நண்பனாய் நீ
உறவாடும் அழகிற்காக
மட்டும்தான் இருக்க முடியும்!
அதனால் மட்டுமே,
சரி! போகட்டும்!
என விட்டு விடுகிறேன்!
கள்வனே! என் நண்பனே!
நீ கொஞ்சமே கொஞ்சம்
நல்லவன் தான்!

சத்தமிடாமல் என்
கவலைகளைக் களைந்து
மெத்தெனச் சிரிக்கிறாய்!
மாயனே!
புயல் ஓயும் நேரமெல்லாம்
புன்னகை விரிக்கிறது
என் தலைக்கு மேலும்
தலையணைக் கடியிலும்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!

நான் தான்
மறந்து விட்டேன்!
எங்கும் செல்லவில்லை நீ!
என்னருகில் என்னுயிரில்
என்னுடன் தான் இருக்கிறாய்
என்பதை!
ஹே! கிருக்ஷ்ணா!
என் மனமாக,
என் உளமாக,
என் உயிர் தோழனாக நீ
என்னுடன் தானே இருக்கிறாய்?
இருக்கிறாய் தானே!
எப்போதும் என்னுடன்
இருடா! திருடா!

ஆடுகிறான் கண்ணன்!
என்னுடன் ஊஞ்சலில்!

With Lots of Hugs!
Happy Friendship Day!


I have only one question to you. When will you call me to your Dwarakamayi? When will you call me to your abode/Home/ whatever it may be? A still Silence is filling my room; reminding me all those unspoken words and thoughts, I have in store for you, May be I'm not telling you all of them. But you know all of them ! Aren't you? And You know that I always have something to tell you untold right? Not comfortable though. Among all the beautiful languages in the world, we shouldn't have chosen Silence to be the medium of our conversation. Too much of talking within keeping lips tight. N; you just move on without answering any of them.,Can't U get me out of this? It hurts my Lord! It really hurts! I don't understand, what you've in store for me rather. What to say? You know well, that this is the time, I really need you. Call me Soon!!! I need you now!!! Half asleep! Good Night!!!!

Saturday, August 1, 2015



என் நாட்களை
நீயே நிர்ணயித்திருக்கிறாய்
என் குருவே!
என் சுவாசத்தை;
என் பாசத்தை;
என் நேசத்தை என
என் வாழ்க்கையை
நீயே நடத்திக் கொண்டிருக்கிறாய்!

புன்னகையோ கண்ணீரோ
நிரந்தரமல்ல என்பதை
என் வாழ்க்கையின் மூலமே
எனக்கு நீ
புரிய வைத்துக்கொண்டிருக்கிறாய்!
புதிய ஊர்;
புதிய மனிதர்கள்;
புதிய மொழி;
என புதிய உலகம்
எனைச் சுற்றி இருக்கையிலும்
உன்னைப் பொறுத்தவரையில்
எந்தையே! நான் அதே
குழந்தையாகத் தானே இருக்கிறேன்!

இந்த மாற்றத்தின் மடல்
வந்து சேர்ந்த போது
எனக்கு இது
வேண்டாம் என்று
நான் அதிர்ந்ததும்,
சென்றால் நான் இங்கு
உயிருடன் திரும்ப மாட்டேன்
என்று அழுததும்,
போகவே மாட்டேன்
என்று உன்னிடம்
அடம்பிடித்து முறையிட்டதும்,
அத்தனையும் நினைவில்
இருக்கிறது என் குருவே!
எதை நான்
வேண்டாம் என்றேனோ
அதையே நீ
எனக்கு வலிந்து தந்தாய்!

என் நோயையும்
நோய்க்கான மருந்தையும்
நீயே அறிந்திருந்தாய்
என்பதை நான் உணர்ந்திருந்தும்
உன்னிடம் நான்
முறையிட்டுக் கொண்டே இருந்தேன்;
நீ எதையும் கேட்கவில்லை!
எது எனக்கான தேவையென்று
நீயே உணர்ந்திருந்தாய்!
நீ சொன்னதை
நான் கேட்க மறுத்தேன்!
என்னை என்
குடும்பத்திடமிருந்து பிரித்தெடுப்பதற்காய்
உன்னிடம் சண்டையிட்டேன்!
நான் கேட்க மறுத்தபோதும்
எல்லாவற்றுக்குமான விடையை
எப்போதும் நீ என்னிடம்
சொல்லிக் கொண்டிருந்தாய்!

நிறைய கண்ணீருக்குப் பின்
நிறைய வலிகளூக்குப் பின்
நிறைய ஏமாற்றங்களுக்குப் பின்
நிறைய வேதனைகளுக்குப் பின்
நான் நிறைய உடைந்து போவேன்;
சிதறிச் சின்னா பின்னமாவேன் என
நினைத்துச் சிரிக்கக்
காத்திருந்தவர்கள் முன்
என்னைச் சிங்கமாகவே
நிலை நிறுத்தினாய்!

என் அன்னையாக
என் தந்தையாக
என் சகோதரனாக
என் தோழனாக
என் மேய்ப்பனாக
என் குருவாக
நீ இன்னும்
நிறையவே என்னை
நேசித்துக் கொண்டிருக்கிறாய்
என்று எனக்குப் புரிகிறது!

என் தனிமை பற்றி
கவலைப்படும் அத்தனை
பேரின் மத்தியிலும்,
நான் நானாக,
இன்னும் உறுதியாக,
இயல்பாகவே இருக்கிறேன்!
எத்தனையோ பிரயத்தனத்திற்குப்பின்
என்னை நான் கண்டுபிடித்திருக்கிறேன்!
இது எத்தனை சந்தோக்ஷம்?
என் கனவுகள்;
என் கவிதைகள்;
என நான் மறந்திருந்த
எல்லாவற்றையும் மீட்டெடுத்திருக்கிறேன்!
இது எவ்வளவு அற்புதம்?

என் எதிர்காலம் பற்றி
இந்த நிமிடம் எனக்கென
எந்தக் கனவுகளும் இல்லை!
என்ன நீ நினைத்திருக்கிறாய்
என்றெனக்குத் தெரியவும் இல்லை!
எதைச் செய்தாலும்
அதை நீ அறிந்தே செய்வாய்
என எப்பொழுதும் போல்
இப்போதும் நம்புகிறேன்!
குருவே சரணாம்!!!

பின் குறிப்பு:
நீ அனுப்பிய குரு பூர்ணிமா பிரசாதம், நீ என்னுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் உன்னிடம்,
எப்பொழுதும் போல் ஒன்று மட்டும் கேட்கிறேன்!

என்னுடன் இரு! என் குருவே! எப்பொழுதும் நீ என்னுடன் இரு!


என்னுடன் இரு என்ற
ஒற்றைப் பிரார்த்தனைக்காக
எப்பொழுதும் என்னுடன் இருப்பதற்காய்
எத்தனை நன்றிகள் சொல்வதெனத் தெரியவில்லை!
என் கண்ணனுக்கெதற்கு நன்றி
என்றெண்ணி நானும் சொல்லவில்லை!
ஏன் சொல்லவில்லை என
நீயும் கேட்கவில்லை!
எனினும்,......

நன்றி சொல்லத்தான் வேண்டும்!
நான் உன்னைப் பார்க்க மறுக்கையிலும்
என்னை உன் பார்வைச் சிறகுகளுக்குள்
பாதுகாப்பாக வைத்திருக்கிறாய் என்பதற்காய்!

நன்றி சொல்லத்தான் வேண்டும்!
வார்த்தைகளற்ற பொழுதுகளிலும் நீ
மெளனமாக என்னுடன் பேசிக் கொன்டிருப்பதை
வாசனைக் கவிதையாக என்னுள்
வாசிக்கக் கேட்டுக் கொண்டிருப்பதால்!

நன்றி சொல்லத்தான் வேண்டும்!
உன் குழலால், உன் குரலால்
உன் விழிகளால், உன் புன்னகையால்
எனக்கான உன் பாடலை
இசைத்துக் கொண்டே இருப்பதால்!

நன்றி சொல்லத்தான் வேண்டும்!
எனக்குள் ஒளிந்திருந்த என்னை
எனக்கே மீண்டும் அறிமுகம் செய்ததற்காய்!

என் பசி நீ!
என் உணவு நீ!
என் உறக்கம் நீ!
என் கனவு நீ!
என் காயம் நீ!
என் களிம்பும் நீ!
என் பிணி நீ!
என் மருந்தும் நீ!
என் உயிர் நீ!
என் உள்ளம் நீ!
என் சித்தம் நீ!
என் பித்தும் நீ!
என் தேடல் நீ!
என் தொலைதலும் நீ!
என் வலி நீ!
என் வளி நீ!
என் விழி நீ!
என் மொழி நீ!
என் வழி நீ!
என் வாசல் நீ!
என் ஊற்று நீ1
என் கடலும் நீ!
நான் நீ
நான்நீ…
நான்நீ,,,,,,