கண்ணன் என் தோழன்
----------------------------------
என் எந்த குழப்பத்தையும்
துடைத்துத் துவைத்துலர்த்தும்
மந்திரக்கோலை உன்
மல்லிகைப் புன்னகையிலா
வைத்திருக்கிறாய்!
என்ன மாயம் செய்கிறாய் நீ?
என் கண்ணா!
என்ன மாயம் செய்கிறாய் நீ?
மகனாய் நீ மாறி மாறி
மல்லுக்கட்டி ஒப்பேற்றிய
கதைகள் ஓராயிரம்!
மணாளனாய் நூற்றிப்பதினாறு
மணம் புரிந்ததைத் தவிர,
மன்னனாக ஏதும்
செய்தாயா என்ன?
நமக்குத் தாங்காது சாமி!
மன்னர்களின் மாமனாக
மகாநடிகனடா நீ?
இவை எல்லாவற்றிற்காகவும்
உன்னை அவ்வளவு
வெறுக்கலாம் தான்!
வெறுக்கவும் நேசிக்கவும்
ஒரே மனம்தானே!
கூப்பிட்ட நேரத்தில்
வர மாட்டாய்!
காக்க வைத்துவிட்டு
எங்காவது யாரிடமாவது
கதை பேசிக் கொண்டிருப்பாய்!
பக்தர்கள் பாடு
படு மோசம்!
அவ்வாறே தொடரும்
அத்தனை ஆயிரம்
காரணங்களுக்கு நடுவில்
நல்லவனென உனக்கொரு
பெயர் தரவேண்டுமெனில்,
நண்பனாய் நீ
உறவாடும் அழகிற்காக
மட்டும்தான் இருக்க முடியும்!
அதனால் மட்டுமே,
சரி! போகட்டும்!
என விட்டு விடுகிறேன்!
கள்வனே! என் நண்பனே!
நீ கொஞ்சமே கொஞ்சம்
நல்லவன் தான்!
சத்தமிடாமல் என்
கவலைகளைக் களைந்து
மெத்தெனச் சிரிக்கிறாய்!
மாயனே!
புயல் ஓயும் நேரமெல்லாம்
புன்னகை விரிக்கிறது
என் தலைக்கு மேலும்
தலையணைக் கடியிலும்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!
நான் தான்
மறந்து விட்டேன்!
எங்கும் செல்லவில்லை நீ!
என்னருகில் என்னுயிரில்
என்னுடன் தான் இருக்கிறாய்
என்பதை!
ஹே! கிருக்ஷ்ணா!
என் மனமாக,
என் உளமாக,
என் உயிர் தோழனாக நீ
என்னுடன் தானே இருக்கிறாய்?
இருக்கிறாய் தானே!
எப்போதும் என்னுடன்
இருடா! திருடா!
ஆடுகிறான் கண்ணன்!
என்னுடன் ஊஞ்சலில்!
With Lots of Hugs!
Happy Friendship Day!
No comments:
Post a Comment