Monday, August 10, 2015

பயணங்கள் முடிவதில்லை-X-அரவிந்தருடன் ஒரு மணி நேரம்

  

          எவ்வாறும் விளக்கிவிட முடியாததொரு உணர்வு அது. இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த அரவிந்தரின் இல்லத்தை இன்று காலையில் தற்செயலாகக் கண்டுபிடித்தபோது, ஒரு கண்டுபிடிப்பின் மகிழ்ச்சி இருந்தது. அது ஒரு குழந்தையின் மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் உடன் ஒரு தோழியை வேறு அழைத்தபோது, அங்கு பார்க்க என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அது அரவிந்தரின் இல்லம் என்றேன்; திலகரும், பிபின் சந்த்ர பாலும், அன்னை நிவேதிதாவும் வந்து சென்ற இடமென்றேன்; அரவிந்தருக்கு சுதந்திரத் தனலை மூட்டிய இடமென்றேன்; அவரை சிறைக்கனுப்பி ஆன்மீகம் காட்டிய இடமென்றேன். என்ன உங்கள் ரசனை இப்படி இருக்கிறது? ரொம்ப சீரியசான இடம் போலிருக்கே! எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே என்று  இழுத்த பெண்ணை, இல்லை! சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்த பின் தான், எனக்கு இவ்வாறான தீவிர ரசனைகள் தொடங்கின; என்னுடன் வா! உனக்கும் பிடிக்கும் என்றேன், உள்ளே கவலையுடன் தான்! கிளம்புவதற்கு முன், இணையத்தில் அரவிந்தரைப் பற்றி ஒரு சிறிய குறிப்பெடுத்துக் கொண்டு தயாரானேன். அரொபின்டோ! உங்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திறந்த மனதுடன் இதோ உங்களிடம் வருகிறேன்! என்ன கிடைக்கும் எனத் தெரியவில்லை என்று மனதிற்குள் வரிகள் ஓடின.

      அரவிந்தர் இல்லத்தை அடைந்த போது, வாயிலில் ஒரு பெரியவரைத் தவிர யாரும் இல்லை. அவரிடம் உள்ளே செல்ல வழி கேட்ட போது, அவர் அந்த பிரம்மாண்ட செந்நிற கட்டிடத்தின் வாசலைக் காட்டி உள்ளே செல்லுங்கள் என்றார். வாசலில் நுழைகையிலேயே மேலே அன்னையின் புன்னகைக்கும் புகைப்படமும், உள்ளே உங்களை நேராகப் பார்த்து வரவேற்கும் அரவிந்தரின் பெரிய புகைப்படமும் ஈர்த்தன. வரவேற்பறையில் அரவிந்தர் மற்றும் அன்னை நிவேதிதாவின் சில பல புத்தகங்கள் அலமாரிகளில்! பெரும்பாலும் அரவிந்தரின் “ சாவித்ரி” சார்ந்தவை. பக்கத்தில் மேலேறும் படிகளில், கீழிறங்கிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களிடம், அவர்களின் ஆசிரியர் சத்தம் போடாமல் இறங்குமாறு சைகை காட்டினார். அப்போதுதான் பக்கத்திலிருந்த பலகையைப் பார்த்தேன். அது தியான அறைக்கு செல்லும் வழி என்றும், அமைதி காக்கும் படியும் கூறியது.  அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறுபவரைப் பற்றி பெருமிதமாக நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், அந்த சிறுவர்கள் யாவரும் காது கேளாத வாய் பேசாத இயலாத சிறுவர்கள் என்பதையும், அவர்கள் தங்களுக்குள் சைகையில் பேசிக் கொண்டிருந்ததையும். We call it as irony.

      தியான அறைக்குப் போய் என்ன பண்ணப் போகிறேன், வேறெதாவது பார்ப்போம் என்று தரைத்தளத்தின் மற்றொரு புறத்திற்கு நகர்ந்தோம். சிறு சிறு செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், சாத்தப்பட்டிருந்த நூலகத்தைத் திறந்த பெரியவர், நீங்கள் முதலில் மேலே உள்ள தியான அறைக்குச் சென்று வாருங்கள் என்றார். படிகளில் ஏறத்தொடங்கிய போது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமின்றிதான் இருந்தது.. ஒன்று, இரண்டு, மூன்று, என்று ஏறத்தொடங்க, நான்காம் படியில் ஏதோ ஒரு உணர்வு உடலெங்கும் பரவத்தொடங்கியது. புல்லரிக்கிறதோ என்று கூட யோசித்துப் பார்த்தேன். இல்லை! இது வேறு ஏதோ ஒன்று. ஏதோ ஒன்று ஆட்கொண்டது போல், நிலை கொள்ளாத ஒரு அசாத்திய உணர்வு பிடித்துத் தள்ளுவதைப்போல் உணரத் தொடங்கினேன். படிகளுக்குப் பக்க பலமாக நின்ற கைப்பிடியை சட்டென பற்றிக் கொண்டு சுதாரித்தேன்.. பின்னால் வந்தவர்களுக்கு  படிகளில் வழிவிட்டு நின்ற போது, மேலே செல்லுங்கள் என்ற பெரியவருக்கு என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.

      என்னவாயிற்று என்ற அறைத்தோழிக்கு, எனக்கு என்னவோ ஆகிறது என்றுதான் சொல்ல முடிந்தது. கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டு, நிதானித்து மெல்ல படிகளில் ஏறினேன். அமானுக்ஷ்ய அமைதி நிரம்பிய அந்த தியான அறைகளின் நடுவில் அன்னையும் அரவிந்தரும் புகைப்படங்களாக, சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள். ஆசிகள் என்ற பெரிய நற்செய்தியுடன். நடுநாயகமாக இருந்த பெரிய அறையைத் தவிர்த்து விட்டு, உள்ளறைக்குள் சென்றமர்ந்தேன். நட்சத்திரத்தின் நடுவில் அரவிந்தர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்த எனக்கு, இதுதான் என் தேடுதலுக்கான திறவுகோல் உள்ள இடமோ என்ற கேள்வி மட்டுமே உள்ளே எழுந்தது. ஒற்றைக் கேள்வி; விடையற்ற வினாவாக தொக்கி நிற்க, அந்த அறை முழுவதும் பேரமைதி வழிய வழிய நிறைந்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் இந்த அதிர்வலையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். The Vibration! 

             அத்தனை பெரிய ஆன்மீகப் பெரியவர்கள் வாழ்ந்து, நடமாடி, தியானம் செய்து, தன்னைத் தனக்குள் தேடி, சுயம் அறிந்து, சுற்றத்திற்குச் சொல்லி அலையலையாய் பரப்பிய பேரலையைத்தான் நான், அவர்கள் கோயிலாக மாற்றிய அவர்களின் இல்லத்திலிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பது இப்போது புரிந்தது.  இன்னும் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தால், இங்கிருந்து நான் வெளியேறுவது கடினமோ எனத் தோன்ற, அலைபேசியில் எழுத ஆரம்பித்தேன். சற்று நேர சிந்தனைக்குப் பின், நிகழ்காலத்தை உணர்த்திய அறைத்தோழியுடன், மற்ற அறைகளைப் பார்க்கக் கிளம்பினேன். 

      எங்கும், எங்கும், எங்கெங்கும் அன்னையும் அரவிந்தரும், அவர்களின் பொன்மொழிகளுடன் உடன் வருகின்றனர் ஒரு குருவாக, ஆசானாக, நல்மேய்ப்பனாக, வழிகாட்டியாக. நூலகத்தில் பெரிய புகைப்படத்திலிருக்கும் அரவிந்தரின் கண்கள் உங்களை ஊடுருவுவதை உங்களால் எப்பாடுபட்டாலும் தவிர்க்க இயலாது. அவ்வளவு சக்தி வாய்ந்த, அமைதி வாய்ந்த, அறிவார்ந்த பார்வை அது. புத்தகங்களுடன் சிறிது நேரம் கழித்து விட்டு, அவர்களின் புகைப்படங்களுடன் சிறிது நேரம் கழித்துவிட்டு, வெளியே வந்தால், புல்வெளியின் மத்தியில், பூங்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம் வரவேற்கிறது. 

      அந்த பளிங்குப் படிமத்தில் நெற்றி ஒற்றி வணங்குகையில், சலசலவென்ற நீரோடையை என்னால் கண்களுக்குள் காண முடிந்தது. தெளிவான பார்வையில், தெளிவான நீரோடையை நான் உணர்ந்ததை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று கூட எண்ணலாம். ஆனால் உண்மையாக நான் உணர்ந்ததைத் தானே நான் உரைக்க முடியும். 

      அவ்விடம் அகன்று, இந்திய வரைபடம் எதிர்நோக்கும் புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தபின், தன் வாழ்வின் முக்கியமான 12 ஆண்டுகளை அரவிந்தர் கழித்த நினைவிடத்தை அவரின் வீட்டைச் சுற்றி வந்து மீண்டும் வாயிலை அடைந்தோம். மர வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய பால்கனிகள் அலங்கரிக்கும் அரண்மனையை ஒத்த அந்த ஆங்கிலேயர் காலத்து செந்நிற கட்டிடத்தைப் பிரிய மனமின்றி சற்று நேரம் அமைதியாக வாசற்படியிலேயே அமர்ந்து விட்டேன்.   இப்போது விளக்குகளின் ஒளியில் அரவிந்தர், அந்த பெரிய புகைப்படத்துக்குள்ளிருந்து எங்களை வழியனுப்பினார்.

        வாசலில் காவலுக்கிருந்த பெரியவரிடம் நன்றி கூறி வெளியேறிய போது, அமைதியும், ஆனந்தமும், இந்த நாளில் நான் எவ்வளவு பெருமை வாய்ந்த பெரியவர்கள் வாழ்ந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன், உணர்ந்து உயர்வெய்தி இருக்கிறேன் என்று பெருமிதமும் தோன்றியது. சேத்தன் பகத்தின் ஆரோவில் அரவிந்தர் ஆசிரம அனுபவம் பொய்யாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. செவிதிறன் குறைபாடுள்ள அந்த பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைக்குள்ளிருக்கும் அமைதி இன்னும் பெரியதாக இருக்கக்கூடும் என்று இப்போது தோன்றுகிறது. இவ்வாறாக என் ஆன்மீகத் தேடல்கள் தொடர்ந்தால், வதோதராவை விட்டு நான் கிளம்பும்போது, சாதுவாகவோ, சன்னியாசினியாகவோ ஆகப்போவதற்கான வாய்ப்புகள் கூடிக்கொண்டே போவதாகத் தோன்றுகிறது. இந்த நாள் இனிய நாள்.


பயணங்கள் முடிவதில்லை!!!!

No comments:

Post a Comment