Tuesday, August 4, 2015


எதற்கும்
நான் உண்டென்பாய் எனில்
எதற்கெல்லாம்
நீ துணையிருப்பாய் கண்ணா?

சூட்சுமதாரியின்
சங்கம் முழங்குகிறது;
சக்கரம் சுற்றுகின்றது;
சூழ்ந்திருக்கும் உலகவியல்
எனக்குப் புரியவில்லை!

இறுதியில் தர்மம் வென்றதென
முழங்கியவனுக்குத் தெரியும்,
வென்றவன் அவன் தர்மம் மட்டுமே என!
எனவே அதைச் சொல்லாதீர்கள்!

சட்டங்களால் தண்டனை வழங்கி
இது தண்டனை அல்ல!
திருந்துவதற்கான வாய்ப்பென முழங்கி
போதுமானவரை காலம் கடத்தி
தேவைப்படும் போது
உங்கள் சட்டத்தின் சாட்டையை
நீங்களே கையில் எடுப்பீர் எனில்
எங்கே செல்கிறது
இந்த தேசம்?????

உங்கள் சீர்திருத்த முறைகளில்
உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
இன்னொரு உயிரைப் பறிக்கும் உரிமையை
இந்த தேசம் ஆதரிக்கிறதா?
ஆம்! என்றால் கொலை என்றால் என்ன?
இல்லை! என்றால் நீங்கள் செய்வது என்ன?

நான் குற்றங்களை ஆதரிக்கவில்லை;
குற்றவாளிகள் திருந்த தண்டனை
என்ற பெயரில் கிட்டத்தட்ட
ஒரு கால் நூற்றாண்டைக் கடத்தியபின்
இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு
அரசியல் சூழலுக்கேற்றவாறு
அவர் உயிரை எடுக்கும்
மரண தண்டனையைத்தான்
வன்மையாகக் கண்டிக்கிறேன்!

குற்றம் புரியும் எவர் ஒருவருக்கும்
சுற்றம் அறியாமல் எவ்வாறும்
கடும் தண்டனை தாருங்கள்!
இறுதிவரை சிறையில் அடையுங்கள்!
ஆனால் அவர்களையும் உயிருடன் வாழ
அனுமதியுங்கள்!!!

இந்த தேசம்
அமைதியை போதிக்கிறது!
அஹிம்சையை போதிக்கிறது!
ஆனால் அவ்வப்போது
அதுவே தண்டனையென்ற பெயரில்
அத்துமீறி கொலைகளையும் செய்கிறது!

காலம் தவறிய தீர்ப்புகள்..
எக்காலத்திலும் சரியாகவே இருப்பதில்லை!

Say No to Capitol Punishment!
I do!

No comments:

Post a Comment