என் நாட்களை
நீயே நிர்ணயித்திருக்கிறாய்
என் குருவே!
என் சுவாசத்தை;
என் பாசத்தை;
என் நேசத்தை என
என் வாழ்க்கையை
நீயே நடத்திக் கொண்டிருக்கிறாய்!
புன்னகையோ கண்ணீரோ
நிரந்தரமல்ல என்பதை
என் வாழ்க்கையின் மூலமே
எனக்கு நீ
புரிய வைத்துக்கொண்டிருக்கிறாய்!
புதிய ஊர்;
புதிய மனிதர்கள்;
புதிய மொழி;
என புதிய உலகம்
எனைச் சுற்றி இருக்கையிலும்
உன்னைப் பொறுத்தவரையில்
எந்தையே! நான் அதே
குழந்தையாகத் தானே இருக்கிறேன்!
இந்த மாற்றத்தின் மடல்
வந்து சேர்ந்த போது
எனக்கு இது
வேண்டாம் என்று
நான் அதிர்ந்ததும்,
சென்றால் நான் இங்கு
உயிருடன் திரும்ப மாட்டேன்
என்று அழுததும்,
போகவே மாட்டேன்
என்று உன்னிடம்
அடம்பிடித்து முறையிட்டதும்,
அத்தனையும் நினைவில்
இருக்கிறது என் குருவே!
எதை நான்
வேண்டாம் என்றேனோ
அதையே நீ
எனக்கு வலிந்து தந்தாய்!
என் நோயையும்
நோய்க்கான மருந்தையும்
நீயே அறிந்திருந்தாய்
என்பதை நான் உணர்ந்திருந்தும்
உன்னிடம் நான்
முறையிட்டுக் கொண்டே இருந்தேன்;
நீ எதையும் கேட்கவில்லை!
எது எனக்கான தேவையென்று
நீயே உணர்ந்திருந்தாய்!
நீ சொன்னதை
நான் கேட்க மறுத்தேன்!
என்னை என்
குடும்பத்திடமிருந்து பிரித்தெடுப்பதற்காய்
உன்னிடம் சண்டையிட்டேன்!
நான் கேட்க மறுத்தபோதும்
எல்லாவற்றுக்குமான விடையை
எப்போதும் நீ என்னிடம்
சொல்லிக் கொண்டிருந்தாய்!
நிறைய கண்ணீருக்குப் பின்
நிறைய வலிகளூக்குப் பின்
நிறைய ஏமாற்றங்களுக்குப் பின்
நிறைய வேதனைகளுக்குப் பின்
நான் நிறைய உடைந்து போவேன்;
சிதறிச் சின்னா பின்னமாவேன் என
நினைத்துச் சிரிக்கக்
காத்திருந்தவர்கள் முன்
என்னைச் சிங்கமாகவே
நிலை நிறுத்தினாய்!
என் அன்னையாக
என் தந்தையாக
என் சகோதரனாக
என் தோழனாக
என் மேய்ப்பனாக
என் குருவாக
நீ இன்னும்
நிறையவே என்னை
நேசித்துக் கொண்டிருக்கிறாய்
என்று எனக்குப் புரிகிறது!
என் தனிமை பற்றி
கவலைப்படும் அத்தனை
பேரின் மத்தியிலும்,
நான் நானாக,
இன்னும் உறுதியாக,
இயல்பாகவே இருக்கிறேன்!
எத்தனையோ பிரயத்தனத்திற்குப்பின்
என்னை நான் கண்டுபிடித்திருக்கிறேன்!
இது எத்தனை சந்தோக்ஷம்?
என் கனவுகள்;
என் கவிதைகள்;
என நான் மறந்திருந்த
எல்லாவற்றையும் மீட்டெடுத்திருக்கிறேன்!
இது எவ்வளவு அற்புதம்?
என் எதிர்காலம் பற்றி
இந்த நிமிடம் எனக்கென
எந்தக் கனவுகளும் இல்லை!
என்ன நீ நினைத்திருக்கிறாய்
என்றெனக்குத் தெரியவும் இல்லை!
எதைச் செய்தாலும்
அதை நீ அறிந்தே செய்வாய்
என எப்பொழுதும் போல்
இப்போதும் நம்புகிறேன்!
குருவே சரணாம்!!!
பின் குறிப்பு:
நீ அனுப்பிய குரு பூர்ணிமா பிரசாதம், நீ என்னுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்
கொண்டிருக்கிறது. நான் உன்னிடம்,
எப்பொழுதும் போல் ஒன்று மட்டும் கேட்கிறேன்!
என்னுடன் இரு! என் குருவே! எப்பொழுதும் நீ என்னுடன் இரு!
No comments:
Post a Comment