ஒரு தொலைக்காட்சி சேனல் தவறாமல் விவாதம் என்ற பெயரில் கூச்சலிட்டுக் கொண்டே
இருக்கின்றன. இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடரும் போராட்டங்களும், கொடும்பாவி
எரிப்புகளும், கண்டனங்களும் தான் இந்தக் காட்டுக் கூச்சலுக்குக் காரணம்.
ஒரு கட்சி
சார்புடைய தொலைக்காட்சி, சம்பவத்திற்குக் காரணமானவரைக் கூப்பிட்டு கருத்து
கேட்கிறது. அரசியலிலேயே ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த, இந்த தேசத்தை பன்னெடுங்காலமாக
ஆண்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்,
ஒரு பழுத்த அரசியல்வாதி பின்வருமாறு கூறினார். நான் இருவருக்கும் ஒரு UNDERSTANDING
இருக்கிறது என்று கூறுவதைத்தான் “############” (அவர் சொன்னதை எழுதவே விரல் கூசுகிறது) என்று கூறினேன். அதில் தவறு என்ன
இருக்கிறது? இது அரசியலில் சகஜம்தான். வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக
பிரச்சனையை பூதாகரமாக கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது தொடர்ந்தால், போராட்டம்
அமைதியாக நடந்தால், அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்போம். வன்முறை ரீதியில்
தொடர்ந்தால், நாங்களும் அதையே செய்வோம் என்கிறார். பேட்டி கண்டவர் மீண்டும், அந்த
வார்த்தைக்கு மாற்றாக வேறொரு வார்த்தை சொல்ல வேண்டுமென்றால் எந்த வார்த்தையை
உபயோகப் படுத்துவீர்கள் எனக் கேட்க, அவர் அடாவடியாக மீண்டும் : அதிலொன்றும் தவறில்லை. அதே
வார்த்தையைத் தான் தாம் சொல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.
அன்மையில் மறைந்த அவரின்
தாயார் இதைக் கேட்டிருந்தால் தன் மகனைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று
நினைக்கிறேன். இத்தனைக்கும், அவரின் தாயார், இவர் மிகக் கேவலமான வார்த்தைகளால்
விமர்சித்த கட்சியின் மிக நீண்ட கால விசுவாசி, தன் கடைசி மூச்சு வரை கட்சியில் மிக
முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவரின் மறைவை மதித்து அந்தக் கட்சி பெரும் மரியாதை
செலுத்தியது. ஆனால் அந்தத் தாயின் தனயன், ஒரு பெண்மணியைப் பற்றி மிகக் கேவலமாக
விமர்சித்ததைத் தவறே இல்லை எனச் சாதிக்கிறார்.
ஐயா! UNDERSTANDING என்பதற்குத் தமிழில்
“ புரிதல்” என்ற நேரடி வார்த்தை இருப்பதையும், தாங்கள் சொன்ன வார்த்தைக்கு
ஆங்கிலத்தில் “ILLEGITIMATE AFFAIR” என்ற சொற்றொடர் மட்டுமே இருப்பதையும் தங்களுக்கு
நினைவு படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் வன்முறையைக் கையில் எடுப்போம்
என்று சொல்லும் உங்கள் கட்சிதான் அஹிம்சையை உலகத்திற்கே போதித்தது என்பதையும்
தங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறோம். தாயோ, தாதியோ, தமக்கையோ, தங்கையோ, தாரமோ,
தன் மகளோ யாராக இருப்பினும் ஒரு பெண்ணை எவ்வாறு மதிக்க வேண்டும், அவரிடம் எங்ஙனம்
பேச வேண்டும் என்பதைத் தங்கள் கட்சித் தலைவராகிய பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து
கொள்வது நல்லது என்பதையும் ஆணித்தரமாகக் கூற விரும்புகிறோம். கருத்தில் கொள்க! விதைத்ததே விளையும் என்பதை நினைவில் கொள்க.! அரசியல்
செயவதாக நினைத்துக் கொண்டு அசிங்கம் செய்ய வேண்டாம். இதற்காகவோ தவமிருந்து பெற்றோம்
இந்த சுதந்திரத்தை?
தரம் தாழ்ந்து போகிறதோ தமிழக அரசியல்? என்று கவலையாக இருக்கிறது. தண்ணீர்
விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இச்சுதந்திரத்ததைக் கண்ணீரால் காத்தோம்!!!! என் தாய்நாடே இந்த அரசியல்வாதிகளை மன்னித்தருளும். வள்ளுவன் வாக்குடன் முடிக்கிறேன்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”