Tuesday, July 21, 2015


காலம் கரைவதறியாமல்
கதைபேசிக் கொண்டிருக்கும்
அலைபேசிவாசிகளுக்கிடையே நான்
அனுதினமும் உன்னிடம்தானே
பேசிக் கொண்டிருக்கிறேன் கண்ணா!
அடைமழைக் காலமிது;
அடம் பிடிக்காமல் உள்ளே வந்துவிடு!

சண்டையிட எனக்கும்-என்னைச்
சமாதானம் செய்ய உனக்கும்
இரு கண்கள் போதுமானதாக இருக்கையில்
இந்த அர்த்தமற்ற பேச்சுகள்
வீண்தான்! எனினும்
கண்களை எனக்குக் கொடுத்துவிட்டு
கனவுகளை உன்னுடன் எடுத்துச் செல்வாயோ!

ஒற்றை மழைத்துளி சட்டெனத் தூறலாகி
கற்றையாய் என்னைக் கவர்ந்து போனதே;
அழகான மழைச்சாரல் என்னை மட்டும்
அணுஅணுவாய்ப் நனைத்துப் போனதே!
அதிசயித்துப் போகிறேன்! அட!!!!
என்னைப் பார்த்து நீ
புன்னகைத்தாயா என்ன?

ஒரு வார்த்தை, சிறு புன்னகை
உயிர் நனைக்கப் போதும்தான்;
இன்னும் கொஞ்சம் சிரியேன்!
இந்த அகிலம் பிழைத்துப் போகட்டும்!!1

என் மழையே! செங்கதிரே!
வெண்பனியே! கண்மணியே!
என்னுடன் இரு என்பதைத்தவிர
உன்னிடம் வேறென்ன கேட்பேன் நான்?

குறுநகையால் நனைத்துப் போனால்
குடை யார் பிடிப்பதாம்?
இதயத்துக்குள் வந்து விடு கண்ணா!
இந்த மழைக்காலம் இப்படியே தொடரட்டும்…………..

Monday, July 20, 2015



எங்கெங்கோ தேடி அலைகிறேன்;
என்னருகில்தான் நீ அமர்ந்திருக்கிறாய்;
ஏதும் பேசாமல் நழுவும் தருணங்களில்
ஏதேதோ பேசிச் சிரிக்கிறாய்;
உன்னத உணர்வொன்றால் என்
உள்ளத்தைக் கழுவுகிறாய்;
கள்ளப் பார்வையொன்றால் என்னை
கடனாளியாக்குகிறாய்!

என்ன வேண்டுமாம் என் கண்ணனுக்கு
என்றெண்ணுகையில் மின்னலென மறைகிறாய்;
காத்திருப்பின் கனிகளால் என்னைப்
பூத்திடச் செய்கிறாய்;
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே என்னைச்
சேர்த்தெடுத்துக் கொள்கிறாய்;
பார்க்காத தருணங்களிலும் உன்னில்
கோர்த்தணைத்துக் கொள்கிறாய்!

உன் நீல விழிப் பார்வைகளில்
புலர்கின்றன என் நாட்கள்;
உன் ஈர இதழ் புன்னகைகளில்
மலர்கின்றன என் பூக்கள்;
அங்குமிங்கும் அலையும் மனதிற்குள்
உன்னை வென்றுவிட முனைகிறேன்;
எங்கெங்கும் தெரியும் உன் பிம்பங்களில்
என்னைக் கண்டறிய முயல்கிறேன்;
எள்ளி நகையாடி என்னை
ஏளானம் செய்கிறாய்;
தள்ளி நின்று கண்ணில்
தனல் மூட்டிச் செல்கிறாய்!

என் செய்தால் எனக்கு
உன்னைத் தருவாய் என் கண்ணா!
என் செய்தால் உனக்கென
என்னைப் பெறுவாய்?
எண்ணி மாளவில்லை
ஏராளமாய் கேள்விக்கணைகள்;
எழுகின்றன வினாக்களுக்கிடையே
எங்கிருந்தோ விழுகிறது ஒற்றை மழைத்துளி!
என்னிடம் பேசியது நீ தானா?
என் கண்ணா!
என்னிடம் பேசியது நீயே தானா?

Sunday, July 19, 2015


மொழியறியா நிலமொன்றில்
முகம் தொலைத்து
வாழ்தல் கேட்டேன்;
தந்தேன் என்றே என்னை
தன் பார்வைக்குள் தொலையச் செய்தான்!
தந்தவன் யாரென்றேன்;
தந்தையென்றே சொல்லி நின்றான்;
என் தந்தை வீட்டிலிருக்க
யாரிந்த புதுக்குரல் என்றேன்;
உனக்கு மட்டுமல்ல- நான்
உலகத்துக்கே தந்தை என்றான்!

உடுக்கையும், உருத்திராட்சமும்
உடுத்திய புலித்தோலும்
புஜங்களில் பாம்பும்
பூசிய திருநீறும்
பிறையணி கூந்தலும்
இறையவன் யாரென
சிந்தைக்குச் சொல்லின-நான்
மந்தைக்குள் மாயமானேன்!
விரல் பற்றி நடக்கும்வரை
தொலைதல் தொலைதலாமோ?

தந்தையின் பார்வைக்குள்
பத்திரமாய் தொலைந்து போதல்
எத்தனை பெரிய வரமென்று
எத்தனை பேருக்குத் தெரியும்?
Seeing all that is happening around,
Seeing all the torment;
Telling to my Heart n mind!
For once n again n again....
Its blessed to be Single!!!
No Commitments;
No Tears;
No Hurts;
No Pain;
No expectations;
No Need of Secret Talks;
No Need of Restless Walks;
No Need of Prolonged fights;
No Need of High decibel Quarrels;
No Need of Hungerless hours;
No Need of Sleepless nights;
No Need of meaningless dreams;
Don't Ever Fall in Love!!!
Never!!!!! Never!!! Never!!!!

விழித்தெழுகையில் செவிகளில்
விடிகிறது உன் குரல்;
வெளியில் வந்து விடாதேயென
விழிகளுக்குள் விரட்டிப் பிடிக்கிறேன்
உன் கனவுகளை!

அடர்த்தியாய் தொடர்ந்த என்
இரண்டாம் தூக்கத்தில்
அடம்பிடித்து வந்தமர்ந்த உன்
முரண் கனவுகளை
புன்னகையாய் மொழிபெயர்த்துத் தருகிறது
என் தலைக்கு மேல்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!

எஞ்சியிருக்கும் உறக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
துடைத்தெடுக்கையில் எங்கிருந்தோ
தஞ்சம் கேட்கிறது ஒரு
ஏகாந்த குயிலோசை!
குரலில் வழிவது குயிலோ?
உன் குழலோ? என்பது
கண்ணா! உனக்கே வெளிச்சம்!

புரியாத உன் மெளனங்களை
மொழிபெயர்க்கும் வழி தெரியாமல்
விடியலுக்குள் நுழைகிறேன்!
மொழி தேவையற்ற புன்சிரிப்பொன்றை
மென்மையாய் தெளிக்கும்
எதிர் சாளர பெண்மணியிடம்
எதிர்பாராமல் புரிபடுகிறது
எனக்கான உன் நேசம்!

நீ தெளித்த நம்பிக்கையில்
நீர் தெளிக்கும் முகில்களுடன்
வெளிச்சமாய் என் நாள்
விடிந்தே விட்டது!

Tuesday, July 14, 2015


மூன்றாண்டுகள் முழுதாய் ஓடிவிட்டதை
மூளை நம்ப மறுக்கிறது!
எங்களுடன் நீ இல்லை என்பதை
எப்படி நாங்கள் நம்புவது?

எம் பெற்றோருக்கு நன்மகனாய்;
சகோதரருக்கு நற்றோழனாய்;
எனக்கும் நற்சகோதரனாய்;
எமக்கு எல்லாமாய் இருந்தாய்;
எப்போதும் இருப்பேன் எனத்தான்
எப்போதும் சொன்னாய்!

எம் இல்லத்தின் காவலனாய்
எம் தேவைகளுக்குச் சேவகனாய்
எம் சுமைகள் யாவையும்
எவ்வாறும் சுமந்து சிரிக்கும்
எல்லாமும் ஆன இறைவனாய்
நீ இருந்த வரை…
சுமைகள் சுமைகளாய் தெரியவில்லை!
இப்பொழுதன்றோ உணர்கிறோம்
இறையெனப்படுவது யாதென்பதை!

நீ இல்லாத இந்த
நீண்ட மூன்று ஆண்டுகளிலும்
உன்னை நினைக்காத நாளில்லை!
பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை;
நீ விட்டுச் சென்ற வீடு
அப்படியேதான் இருக்கிறது!
நீங்காத உன் நினைவுகளுடன்
நாங்கள்தான் உனக்காக
நித்தம் அழுது கொண்டிருக்கிறோம்!
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

நிறைய வளங்களுடன் வாழ்க்கை முழுவதும்
நிறைந்த மகிழ்ச்சியுடன்
நிறைவாக வாழ ஆசைப்பட்டவன்
நீ என்பது எமக்குத் தெரியும்!
எது நிகழ்ந்திருப்பினும்
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

இந்தக் கண்ணீர் உன்
பாதங்களைச் சேரும் என்ற
நம்பிக்கையுடன் எழுதுகிறேன்!
ஏன் நீ சென்றாய்
என்பது இன்று வரை
புரியாத புதிராய்
விடையற்ற வினாவாய்
ஈர மரத்தின் கரையானாய்
அரித்துக் கொண்டேயிருக்கிறது!
மறக்க முடியாமல்
மருகிக் கொண்டிருக்கிறோம்!

எப்பொழுதும் நான் உம்முடன் இருப்பேன்
என்ற உன் வாக்கு
பொய்யாதல் சாத்தியமோ?
இப்பொழுது இக்கணத்தின் துயரத்தின்
இணையற்ற அடர்த்தியை
எங்கோ இருந்து நீ
பார்த்துக் கொண்டிருப்பாய்தானே!

எம் வீட்டின் எல்லா இடங்களிலும்
எம் வாழ்வின் எல்லா தளங்களிலும்
எம் நாட்களின் எல்லா நொடிகளிலும்
எம்முடனே நீ இருக்கிறாய்
என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்!

எம் நம்பிக்கையை, பலங்களை
எடுத்துக் கொண்டுவிட்ட இந்த நாளை
மறக்கத்தான் நினைக்கிறோம்!
அஞ்சாதே! உங்களுடன் நானிருக்கிறேன்!
எனும் உன் குரல்
எங்கிருந்தோ ஒலிக்கிறது!

எம்மோடு,
எமக்காக,
எம்முள்,
எம்முடன்,
எப்போதும்,
எங்கும்
நீ இருக்கிறாய் என்ற
நித்திய நம்பிக்கையுடன் தான்
இந்த வாழ்க்கையைத் தொடர்கிறோம்!!!!
MISS YOU PALANI!!!!
REMEMBERING 14.07,2012!
MAY YOUR SOUL REST IN PEACE!!!!!!!!!!!!!




எந்த மலரிலும் உன் வாசம்;
எந்த அலையிலும் உன் ஸ்பரிசம்;
எங்கே நீயென எங்கும்
தேடி அலைகையில்
இங்கே உன்னில் உன்னிடத்தில்தான்
இருக்கிறேன்- எப்போதும் முப்போதும்
இப்போதும் கூட என்று
ஒரு முறை சொல்லிவிடு கண்ணா!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

பிரிவுச் சிலுவைதனை எனைச்
சுமக்க விட்டு விட்டு
விரிவாய் என்ன விதண்டாவாதம்?
விந்தைகள் போதும் இனி,
கொஞ்சம் மெளனம் கலைத்துவிட்டு என்
சிந்தைக்குள் வந்து ஓய்வெடு
எனும் என் குரல் கேட்கிறதா?
மந்திரக்காரனே! மாயவா! மாதவா!
எந்தன் மூச்சில் நீ இருக்கையில்
எங்ஙனம் உன்னைப் பிரிவேன் என்று
மட்டுமாவது என் காதில் சொல்லிவிடு!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

எந்த புல்லிலும் உன் குழலோசை;
எந்த சொல்லிலும் உன் குரலோசை;
கல்லிலும் காரிருளிலும் உன்னைக்
காண்பது கனவல்ல- இந்தக் கனம்
நிஜமே என்று மட்டுமாவது
சொல்லி விடு கண்ணா!
மூச்சு முட்டும் கணத்திலும்
முகம் மறந்து நிற்கும்
மூர்ச்சைப் பொழுதினிலும்
நிச்சயம் நீ வருவாய் என
நித்தம் காத்திருக்கும் கண்களுக்கு
சிறிதளவு உறக்கம் தருகிறேன்!
சிறித்ளவு உலகம் தருகிறேன்;
சிறிதளவு சுவாசம் தருகிறேன்!
என்னுடன் நீ இருக்கிறாய்
என்று ஒற்றை வரி சொல்லிவிடு!
காத்திருக்கிறேன் கண்ணா !
கண்களில் உனக்கான
கனவுகளுடனும், கவிதைகளுடனும்
நான்
காஞ்சனா……….