Tuesday, July 14, 2015



எந்த மலரிலும் உன் வாசம்;
எந்த அலையிலும் உன் ஸ்பரிசம்;
எங்கே நீயென எங்கும்
தேடி அலைகையில்
இங்கே உன்னில் உன்னிடத்தில்தான்
இருக்கிறேன்- எப்போதும் முப்போதும்
இப்போதும் கூட என்று
ஒரு முறை சொல்லிவிடு கண்ணா!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

பிரிவுச் சிலுவைதனை எனைச்
சுமக்க விட்டு விட்டு
விரிவாய் என்ன விதண்டாவாதம்?
விந்தைகள் போதும் இனி,
கொஞ்சம் மெளனம் கலைத்துவிட்டு என்
சிந்தைக்குள் வந்து ஓய்வெடு
எனும் என் குரல் கேட்கிறதா?
மந்திரக்காரனே! மாயவா! மாதவா!
எந்தன் மூச்சில் நீ இருக்கையில்
எங்ஙனம் உன்னைப் பிரிவேன் என்று
மட்டுமாவது என் காதில் சொல்லிவிடு!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

எந்த புல்லிலும் உன் குழலோசை;
எந்த சொல்லிலும் உன் குரலோசை;
கல்லிலும் காரிருளிலும் உன்னைக்
காண்பது கனவல்ல- இந்தக் கனம்
நிஜமே என்று மட்டுமாவது
சொல்லி விடு கண்ணா!
மூச்சு முட்டும் கணத்திலும்
முகம் மறந்து நிற்கும்
மூர்ச்சைப் பொழுதினிலும்
நிச்சயம் நீ வருவாய் என
நித்தம் காத்திருக்கும் கண்களுக்கு
சிறிதளவு உறக்கம் தருகிறேன்!
சிறித்ளவு உலகம் தருகிறேன்;
சிறிதளவு சுவாசம் தருகிறேன்!
என்னுடன் நீ இருக்கிறாய்
என்று ஒற்றை வரி சொல்லிவிடு!
காத்திருக்கிறேன் கண்ணா !
கண்களில் உனக்கான
கனவுகளுடனும், கவிதைகளுடனும்
நான்
காஞ்சனா……….

Tuesday, May 19, 2015


தின்றவன் திருடனாகி
சிறையிலிருந்து சிறகு
விரித்து விட்டான்;
கொன்றவன், கொற்றவன்
கொள்ள இருந்தவன்
யாவரும் யாரோவாகி
எங்கோ பார்த்துச் சென்றனர்!
வெந்து வெந்து
வேதனையில் நொந்து
வாழ்க்கை படுத்துவிட
படுக்கையே வாழ்க்கையாகி உயிர்
பிடித்துக் கிடந்தவள்,
இந்த நாட்டின் மீதான
இதயத்தின் சினத்தைக்
குறைத்துக் கொள்ளாமலே
விடை பெற்றுக் கொண்டாள்!
அன்பிற்கினிய அருணா!
அத்தனை இந்தியப் பெண்களுக்கும்
உன் வாழ்க்கையையே
உன் வார்த்தைகளாய்
விட்டுச் சென்றவளே!
ஒரு மகளிர் மசோதாவைக் கூட
ஒருமனதாக நிறைவேற்ற
மனமற்ற மக்கள் பிரதிநிதிகள்
ஆளும் இந்த நாட்டில்
மானத்தோடு மகளிர் வாழ்வதுதான்
ஆகப்பெரிய சாதனையாக இருக்க வேண்டும்!
எனில் நேர்மைக்காகப் போராடி
எல்லாம் இழந்து இன்று
இந்த மண்ணிலிருந்து
இடம் பெயர்ந்த தேவதையே!
போராடியது போதும்;
நிம்மதி கொள்!
உன் யுத்தத்தை
உற்சாகமாய் நாங்கள் தொடர்வோம்!
அப்புறம் ஒன்று!
இந்த நாட்டிற்கென
ஏதேனும் செய்யாமல்
செல்கிறோமே என்று
வேதனை இருந்தால்
விட்டெறி சகோதரி!
நாய்களும் நரிகளும்
மனிதர் போர்வையில்
சுதந்திரமாக உலவும்
இந்த நாடு நலமாக
இருந்தால் என்ன?

நாசமாகப் போனால்தான் என்ன?
Aruna Shanbaug

Friday, April 24, 2015

Years have gone; Yes! Decades have Gone. Leave alone the changes in life for all these days. Love for you still blooms like a fresh flower my dear. Needless to confess that Still I'm crazy about you. Love youuuuuuuuuuuu   ...........Sachin! Wish you a very Happy and Blessed Birthday. Many more Happy returns of the day. Happy Birthday Da!!!!



Tuesday, April 7, 2015

பிறகொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமென
சிறகு ஒடுக்கி கூட்டுக்குள் சிட்டுக்குருவி;
கூட்டுக் குருவியின் குரல் தேடி கரம்
நீட்டுகிறது வெயிலின் வெள்ளை நிழல்;
நிழலின் பாதையில் நீளும் மணலெங்கும்
அகழிக் கோட்டைக்குள் அவசர நண்டுகள்;
நடந்தறியா நண்டொன்றை கரை நோக்கி
நகர்த்துகிறது முகத்துவார நதியின் முதல் அலை;
அலையடித்துக் கொண்டே இருக்கிறது;
அனலடித்துக் கொண்டே இருக்கிறது;
அந்த விழாத முதல் துளியில்தான் இருக்கிறது
அடுத்த மழையின் முகவரிக் குறிப்பு;

Sunday, March 22, 2015


பதிலொன்று சொல் பாரதி!
வாழ்ந்த பாதி வாழ்க்கையில்
வீழ்ந்தாய் இல்லை -நீ
தாழ்ந்தாய் இல்லை-ஆனால்
வீதியில் புரண்ட புழுதிவீணை
ஸ்வரங்கள் அறுந்து அடங்குமுன்
உன்னை அழைத்து அழுததே-
அன்றதன் குரலினைச் செவியுற்றாயோ?
செய்விதியின் விரலினை விழியுற்றாயோ?
விதியின் வேரை பிடுங்கியெடுத்து
இடுப்பில் வேட்டியாய் அணிந்தாயோ?

சீற்றமடங்கிய சிம்மத்தின் மனம்கொண்டு
வீற்றிருக்கும் தெய்வம் போல்
முதுகின்பின் இகழ்ந்தாரின் வசையை
முண்டாசு கட்டிக் கொண்டவனே!
நாற்றமிகு சகதியின் நடுவே
சேற்றுறு செந்தாமரையாய் தாள்
உயர்த்தி நின்றாயோ?
ஏற்றமுறும் கவிதைகளை
விதையிட்டுச் சென்றாயோ?
நாற்றது கதிராகுமென நலம்
வாழ்த்திச் சென்றாயோ?

இவை யாவையும் நீ
செய்திருப்பாய் என என்
மனம் அறியும் -இந்த
மானிலமும் அறியும் எனினும்
பதிலொன்று சொல் பாரதி!
எதை முதலில் செய்தாய்
நீ........!

Sunday, March 15, 2015


குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!
குடும்பம் தொடங்கி தொழில் வரை
குதூகலமாய் கூடி கும்மியடிக்கும்
குழாயடி குடுமிப்பிடி சண்டைகளுக்கும்;
குழவிக்கும் அம்மிக்கும் இடையில் இடிபடும்
குழம்பு மசாலா கைக்குத்தல் அரிசிவகை
பெரிய மனுக்ஷ பெருமூச்சுகளுக்கும்;
குடிமகற்கும் குடிமக்களுக்கும் நடுவில்
குழப்பமாய் வியர்வையில் நனைந்து
நசுங்கி நாற்றமெடுக்கும்  ரூபாய் நோட்டிற்கும்,
கடும் வறட்சிக்கும் காட்டாற்று வெள்ளத்துக்கும்
காது கொடுக்க நேரமின்றி
கால் நனைக்கும் கரையோர கடலலைகளுக்கும்;
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்,
எட்டிப் பார்க்காத மழைக்கும்,
எட்டிப் போன மனிதநேயத்திற்கும்,
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
நிற, இன, மத மற்றும்
பிற வன்முறைகளுக்கும் நடுவில்
இவை எல்லாவற்றையும் தாண்டி
நாளை புது உலகம் உருவாகும் என்ற
நம்பிக்கை ஒளியுடன் இன்னும்
குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!

Saturday, March 14, 2015


பாதைகள் விரிய விரிய
படரும் பாலைகளும் சோலைகளும்!
பகலிரவு முடிய விடிய
தொடரும் பயணங்களும் நினைவுகளும்!
வாழ்க்கை வளர வளர
வண்ணம் தீட்டிக் கொள்கின்றன
வாசனைகளும், வார்த்தைகளும்!
கதிரும் நிலவும் காட்டாத
புதிர் வானத்தின் விடுகதையை
வின்மீன்கள் விளக்கும் விதம்
விளையாட்டுப் பிள்ளைகள் அறிவரோ?
வண்டல் மண் வடிகட்டிய
ஊற்று நீரின் பாத்திரத்தையும்
பாதையையும், பயணத்தையும்
வீற்றிருக்கும் மனிதர் அறிவரோ?
சன்னிதிக்கு உள்ளே வெளியே
கொட்டிக் கிடக்கும் வேண்டுதல்களை
சத்தியங்களை, சங்கடங்களை, பிரார்த்தனைகளை
சயனித்திருக்கும் சாமிகள் அறிவரோ?
வினாக்கள் அற்ற விண்ணப்பங்களை
விட்டு விட்டுச் செல்லும்
பக்தனின் நம்பிக்கையே அறியும்
பரம்பொருள் அருளும் வரங்களின்
வளமையும், வலிமையும், வல்லமையும்!