போர்வைக்குள் சுருண்டு கொண்ட
வதோதராவின் இரண்டாம் இரவின்
விடியலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்!
தூக்கமற்ற ஒரு இரவு
துக்கத்தின் அடர்த்தியை
அடைத்துக் கொண்டு
கடந்து போனது என்று
வேண்டுமானால் சொல்லலாம்!
ஏனெனில் அவ்வளவு துயரத்தை
ஏற்க முடியாத அளவிற்கு
சுமந்து கொண்டு விடிந்திருக்கிறது
இந்த காலைப் பொழுது!
என் தலைக்கு மேலிருக்கும்
கண்ணனின் மயிலிறகைப் பார்த்தவாறு
எப்போதும் போல் தான்
எழுந்திருக்கிறேன்! ஆனால்
பிரிவு ஒரு
பினந்தின்னிக் கழுகைப் போல்
என்னைச் சுற்றி வட்டமிட்டு
அச்சுறுத்திக் கொண்டிருப்பதை
இயல்பாய் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை!
எனக்கு மட்டும் தான் இப்படியா?
என்னைப் போல் ஒரு தலைமுறையே
தவித்துத் தட்டாமாலை சுற்றி
தடுமாறிக் கொண்டிருக்கிறதா
எனப் புரியவில்லை!
இந்த மனிதர் என்னை
இத்தனை தூரம் பாதித்திருக்கிறாரா?
இந்த மனிதரை நான்
இவ்வளவு ஆதர்சித்திருக்கிறேனா?
இந்த திடீர் பிரிவு
இப்படி வாட்டி வதைக்கிறதா?
எனத் தெரியவில்லை!
இரவெல்லாம் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த
இசைக் கோப்புகளில்
இனிப்பு, காரம் என எல்லாம்
இருந்ததாகத் தான் நினைவு-எனினும்
இறுதியாக ஞாபகத்தட்டுக்களில் ஏனோ
இன்று கசப்பே எஞ்சியிருக்கிறது!
அறம் பாடிவிடக் கூடாதென
அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும்
இத்தனை விரைவில் நான்
‘இவ்வாறு எழுதிக் கொண்டிருப்பேன்
எனக் கனவிலும் நினைக்கவில்லை!
இந்த அதிகாலைத் தூறலை அனுபவிப்பது
அவ்வளவு இலகுவானதாக இல்லை!
இந்த அடிமனதின் தேடலைக் கடப்பது
அவ்வளவு சுலபமானதாக இல்லை!
என் ,மொழி பேசிய ஒரு
எளிய அறிவாளியை;
எங்களை எங்களுக்குக்
கண்டுபிடித்துக் கொடுத்த
ஒரு மாமனிதரை;
ஏழ்மையையும் ஏளனங்களையும்
பாழ்பட்ட மதச்சமுதாயத்தின்
புறக்கணிப்புக்களையும் புறந்தள்ளி
தன் இறுதிநொடி வரை
அறிவையும் அமைதியையும்
அன்பையும், ஆற்றலையும்
ஞானச் செறிவையும்
போதித்துக் கொண்டிருந்த ஒரு
போதிமரத்தின் வேரை
விழுதாக்கி இயற்கை தனக்குள்
வாங்கிக் கொண்டதை
விழுங்க முடியவில்லை!
அதிகம் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்
என அறிவுக்குப் பட்டாலும்
அதிர்விலிருந்து வெளீவரமுடியவில்லை!
என் கண்களுக்குத் தெரிந்த,
என் அறிவுக்குப் புலப்பட்ட,
ஒரு இளைய தலைமுறையையே
எருவிட்டு உருவாக்கிய
ஒரு பெரிய மனிதரின் பிரிவு
அத்தனை எளிமையாக
ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!
இந்தத் தருணம்
இந்த நிமிடம்
அத்தனை எளிதாகக்
கடந்து போகக்கூடியதாக இல்லை!
என்னை மிகவும் பாதித்த
இரண்டு வரிகளை
கே.பாலச்சந்தரிடம் இருந்து
கடன் பெற்றுக் கொள்கிறேன்!
“இந்தப் புனிதப் பயணம்;
ஒரு புதிய சரித்திரம்!”
இதுவும் கடந்து போகும்
எனத் தெரியும்-எனினும்
இறைவா!
இறைவா!!!!!
இந்த மனதை
கொஞ்சம் அமைதிப்படுத்து!!!!